சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 11ம் தேதி துவங்குகிறது. இந்த முறை இடத்தை மாற்றிவிட்டார்கள். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன் சில ஆண்டுகள் புனித ஜார்ஜ் பள்ளி, அதற்கு முன்பு காயிதேமில்லத் கல்லூரி. ஒவ்வொரு முறை இடம் மாறும்போதும் ஏதோ சொந்த வீட்டைப் பிரிந்து வருவதுபோன்ற துக்கம் என்னை ஆட்கொள்ளும். அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் சங்கடப்படும்.
இதெல்லாம் ஒரு கற்பனைதான். ஒரு புத்தகக் கண்காட்சியின் வண்ணங்களை உருவாக்குவது எழுத்தாளர்களும் வாசகர்களும் புத்தகங்களும்தான்; இடம் அல்ல. பிறகு ஏன் இந்த சங்கடம்? எனக்கு சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த பத்தாண்டுகளாக மறக்க முடியாத சில நினைவுகளை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. அந்த நினைவுகள்தான் அந்த இடத்தை அவ்வளவு முக்கியமானதாக மாற்றுகின்றன.
புத்தகக் கண்காட்சிகள் புத்தகங்களை விற்கும் இடம் என்று பொதுவாக ஒருவர் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. அதற்காக மட்டும் அங்கே யாரும் வருவதில்லை. ஒரு எழுத்தாளனாக, வாசகனாக, பதிப்பாளனாக, கடந்த பத்தாண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சென்னைக்கு வெளியே நிகழும் புத்தகக் கண்காட்சிகளைத் தேடித் தேடிப் போயிருக்கிறேன். ஒரு புத்தகக் கடைக்கும் புத்தகக் கண்காட்சிக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், கண்காட்சிகள் எங்கோ தலைமறைவாக இருக்கும் சொற்களின் எண்ணற்ற பூதங்களை ஒரே நேரத்தில் திறந்துவிடும் இடமாக இருப்பதுதான். தமிழில் இவ்வளவு விஷயங்கள் எழுதப்பட்டிருக்கிறதா என்று திகைத்துப் போயிருக்கிறேன். ஒரு கலாசாரம் எதையெல்லாம் சார்ந்து இயங்குகிறது என்பதைக் காண புத்தகக் கண்காட்சியைவிடச் சிறந்த இடம் எதுவுமில்லை.
தமிழில் எழுத்தாளர்களைவிட எழுத்தாளர்கள் அல்லாதவர்கள் எழுதிய புத்தகங்கள்தான் மிகவும் அதிகம். தமிழில் வாசகர்களைவிட வாசகர் அல்லாதவர்கள் புத்தகம் படிப்பதுதான் அதிகம். நான் சொல்வது வினோதமாக இருக்கலாம். அன்றாட வாழ்க்கையின் நடைமுறை தேவை சார்ந்து அல்லது ஏதோ ஒரு நம்பிக்கை சார்ந்து எழுதப்படும் புத்தகங்களும் வாசிக்கப்படும் புத்தகங்களும்தான் மிக மிக அதிகம். அவை எல்லா இடங்களிலும் புத்தகக் கண்காட்சியை வழி நெடுக அடைத்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவம், தொழில்நுட்பம், சமையல், கோலம், ஜோசியம், செக்ஸ் ரகசியங்கள், இலக்கணம், டிக்ஷனரி, யோகா, இத்யாதி... இத்யாதி... ‘செய்வினை வைப்பது எப்படி?’ என்கிற ஒரு புத்தகத்தைக்கூட ஒருமுறை
கண்டதாக ஞாபகம்.
இவை வாசகர்களை நோக்கி எழுதப்படுவதல்ல. பொதுமக்களை நோக்கி எழுதப்படுகின்றன. வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் இருக்கிறது. பொதுமக்கள் தங்களின் ஏதோ ஒரு பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள அதற்கான புத்தகங்களைத் தேடிப் போகிறார்கள். வாசகனோ, தனக்குப் புதிய பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வதற்காக புத்தகங்களைத் தேடிப்போகிறான்.
இலக்கியம், வரலாறு, தத்துவம், பண்பாடு, சமூகம், அரசியல் சார்ந்து எழுதப்படும் புத்தகங்கள் ஒரு வாசகனின் அதுவரையிலான நம்பிக்கைகளைத் தகர்க்கின்றன. அதுவரையிலான யோசனைகளை திசைமாற்றி விடுகின்றன. தொடர்ந்த நம்பிக்கைகள் சார்ந்த மாற்றங்களுக்கும் முறிவுகளுக்கும் ஆளாகிறவனே ஒரு உண்மையான வாசகனாக மாறுகிறான். தான் வாழும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் போதிய வெளிச்சத்தில் புதிய தடத்தில் காணும்போது தனது காலடி மண்ணிலிருந்தே அன்னியமாகத் தொடங்குகிறான்.
ஆம், சிறந்த புத்தகங்கள் உங்களை ஒரு காலத்தோடு, ஒரு வரலாற்றோடு பிணைத்து வைப்பதில்லை. அவை இந்த உலகத்துடன் நீங்கள் பழக்கத்தின் காரணமாகக் கொண்டிருக்கும் இணக்கத்தைத் துண்டித்துவிடுகின்றன. எப்போது நீங்கள் சலிப்பே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையிலிருந்து அன்னியமாகிறீர்களோ அப்போதுதான் அந்த வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்குகிறீர்கள்.
வாழ்க்கையில் உங்கள் முதல் அன்னியமாதல் கண்ணாடி பார்ப்பதில் தொடங்குகிறது. முதலில் அதில் உங்களைப் பார்க்கிறீர்கள்; பிறகு நீங்கள் அதில் உங்களைப் பார்ப்பதற்கு பதில், நீங்கள் விரும்புவதை மட்டும் பார்க்கத் தொடங்குகிறீர்கள். புத்தகங்கள் அப்படித்தான். முதலில் நீங்கள் அதில் உங்களது அசலான ரூபத்தைக் காண்கிறீர்கள். பிறகு ஒரு புத்தகத்தை உங்களுக்குத் தகுந்ததாக மாற்ற முயற்சிக்கிறீர்கள்.
நான் எண்ணற்ற வினோதமான வாசகர்களைப் புத்தகக் கண்காட்சியில் கண்டிருக்கிறேன். எழுத்தாளனைச் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் வாசகர்கள். சந்தித்த முதல் கணம் அவ்வளவு கூச்சமும் நாணமும் அடையும் வாசகர்கள். எழுத்தாளனின் கைகளைத் தொட்டுப் பார்க்க விரும்பும் வாசகர்கள். உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் ‘உங்கள் வாசகன், அது போதும்’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகும் வாசகர்கள். எப்போதோ எழுதிய ஒரு வாசகத்திற்காக மனம் உடைந்து கண்ணீர் சிந்தும் வாசகர்கள். எழுத்தாளனை அவ்வளவு நேசிக்கும் வாசகர்கள். எழுத்தாளனை அவ்வளவு வெறுக்கும் வாசகர்கள்.
புத்தகக் கண்காட்சியில் சந்தித்த சில மனிதர்கள், நான் படித்த புத்தகங்களைவிட அதிகமான குழப்பங்களை என் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். புத்தகங்களைத் தொலைப்பதுபோலவே அவர்களையும் வாழ்வில் எங்கோ கவனக்குறைவாக தொலைத்திருக்கிறேன்.
புத்தகக் கண்காட்சிகளுக்கு வேறு கண்காட்சிகளுக்கு வருவதுபோல வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காகவும் வருபவர்கள் இருக்கிறார்கள். கண்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு, கேன்டீனில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு, இலவசமாகத் தரப்படும் துண்டுப் பிரசுரங்களை வாங்கிக்கொண்டு வெளியேறிச் செல்வார்கள். புத்தகங்களின் நிழலிலாவது கொஞ்ச நேரம் இளைப்பாறிச் செல்லும் அவர்களை மிகுந்த தோழமையுடன் கண்டிருக்கிறேன்.
புத்தகத் திருடர்களை புத்தகக் கண்காட்சியில் பார்ப்பது மிகவும் சுவாரசியமான விஷயம். ‘உயிர்மை’யிலேயே அவர்கள் புத்தகங்கள் திருடிச்செல்லும் காட்சியை மௌனமாகக் கண்டிருக்கிறேன். அவர்களின் உத்திகள் நேர்த்தியானவை. புத்தகங்களைத் திருடும் மனிதன் ஒருபோதும் ஒரு சமூக விரோதியாக மாற மாட்டான் என ஒரு நம்பிக்கை. அது ஒரு நேர்மைக் குறைவான காரியம் என்றபோதும், அவனிடம் அன்பு பெருகவே செய்கிறது. சென்ற புத்தகக் கண்காட்சியில் பல கடைகளில் புத்தகம் திருடிய ஒருவனைப் பிடித்து இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டேன். அந்தத் திருடன் பல நாள் என் கனவில் வந்துகொண்டிருந்தான். என்றாவது ஒரு நாள் அவன் ஒரு புத்தகம் எழுதக் கூடும். நானே அதைப் பதிப்பிக்கவும் கூடும்.
சில அரசியல்வாதிகள், சில சாமியார்கள், சில சினிமா பிரபலங்கள், பட்டத்து யானைகள் போல புடைசூழ புத்தகக் கண்காட்சிகளை வலம் வருவதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்கள் புத்தகங்கள் வாங்க மாட்டார்கள். தங்களுக்கு எவ்வளவு கவனம் கிடைக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
எல்லோரும் சேர்ந்துதான் ஒரு திருவிழாவை உருவாக்குகிறார்கள்; ஒரு புத்தகக் கண்காட்சியை உருவாக்குகிறார்கள். வரும் புத்தகக் கண்காட்சியிலும் நான் காத்திருக்கிறேன். ‘யாரோ ஒருவனுக்காக.’
பட்டியலில் பெயர்
வருஷா வருஷம் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு டென்ஷன் ஏறும் ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அது பட்டியல். பல்வேறு பத்திரிகைகளும் ஊடகங்களும் அந்த ஆண்டின் சாதனையாளர்கள் பட்டியல் ஒன்றை வெளியிடுவார்கள். அதில் இடம்பெறாதவர்கள் அடையும் மன வருத்தத்திற்கு அளவே இல்லை.
பட்டியல்கள் எப்படித் தயாராகின்றன என்று ஆராய்ந்தால் இந்த மன வருத்தமெல்லாம் வரவே வராது. பெரிய நிறுவனங்கள் தயார் செய்யும் பட்டியல்கள், கடைசி நேர ‘டெட்லைன் ப்ரஷரால்’ என்ன பெயர்கள் கைக்குக் கிடைக்கிறதோ அதைச் சேர்த்துவிடுவார்கள். ஏதோ பெரிய சர்வே பண்ணியது போல பந்தா எல்லாம் பண்ணுவார்கள். தனி நபர் பட்டியல் ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள், விருப்பு வெறுப்புகள் சார்ந்த ஒரு பட்டியல். அந்தப் பட்டியல்களில் இடம் பெறுவது, இடம் பெறாதது இரண்டுமே அர்த்தமில்லாதது. பட்டியல் தயாரிப்பது என்பதில் ஒரு அதிகாரம் சார்ந்த விளையாட்டு இருக்கிறது.
குரூரத்தின் சன்மானம்
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணிற்கு சிங்கப்பூரில் சிகிச்சை, 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை... பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் பாலியல் வன்முறைக்கு எதிராக இவ்வளவு தூரம் குரல் உயராவிட்டால் இந்தப் பெண்ணிற்கு என்ன நீதி கிடைத்திருக்கும்?
(இன்னும் நடக்கலாம்...)