ஓவியம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
இயற்கையோடு இசைந்து வாழ்வோம் என இப்போது அடிக்கடி சொல்கிறார்கள். மரங்களின் வரலாற்றில் காலமும் இயற்கையும் சேர்ந்து நிகழ்த்தும் அற்புதம் மகத்தானது. அந்த வரலாற்றை, மரம் தனது உடலில் எழுதி வைக்கிறது. இன்றைக்கும் வயது முதிர்ந்த மரங்களைப் பார்த்தால், என் தாத்தாவை பார்ப்பது போலிருக்கிறது. ‘மரத்தின் நாட்குறிப்பு’ எனப் பெயரிடப்பட்ட என் ஓவியங்களும் இயற்கைக்கு அர்ப்பணம்’’ - சிலிர்த்துப் பேசுகிறார் ஓவியர் ஏ.பி.மார்ஸ் கண்ணா. அண்மையில் லலித்கலா அகாடமியின் ஓவிய அணிவகுப்பில் பளிச்சென்று தனித்துத் தெரிந்தன இவர் படைப்புகள்.

 ‘‘நகரத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளில், குற்ற உணர்வின் உச்சமாக தொட்டிச்செடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் நாம். மழை தந்து, நிழல் கொடுத்து, காற்றை சுத்தப்படுத்துகிறது என்பதற்காக மட்டுமே மரங்களுக்கு மரியாதை தரவில்லை. மரம் ஒரு உயிர்.

என் ஓவியப் படைப்புக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தேன். ஜிமீஜ்tuக்ஷீமீ எனப்படும் மரங்களின் அடுத்தடுத்த நெசவுகளை கையாளத் துணிந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விசாலங்களில் கேமராவோடு அலைந்தேன். இயற்கை உருமாற்றத்தின் குறியீடுகளாகவும், இயற்கை தன் மீது தானே எழுதி வைக்கும் ரகசியக் குறிப்புகள் போலவும் அவற்றின் மேற்பரப்பு தோன்றியது. அப்படியே அவற்றை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தேன். மரங்களின் நெற்றிச் சுருக்கங்கள் ஒட்டுமொத்த உலகின் விதிரேகைகள் போல எனக்குப்பட்டது. புதிதாய்ப் பிறந்த குழந்தையின் மேனியில் தாயின் கர்ப்பப்பையின் அழுத்தக் கோடுகளைத் தேடிப் பயணிப்பது போன்ற ஒரு முயற்சிதான் இது.

இந்த முறை மரங்களின் பசுமையை கைவிடத் துணிந்தேன். மற்றொன்றைப் போலச் செய்தல் என்பதில் மாறுபட வேண்டிய கடமை கலைஞனுக்கு இருக்கிறது. ஆர்ட் ஷோவிற்கு வந்த அனைவரும் எனது ஓவியத்தைத் தொட்டுப்பார்க்கத் துணிந்தார்கள். நான் அவர்களை அதற்கு அனுமதித்திருந்தேன். மரங்களுக்கு எல்லாமே தெரியும். நம்மை விட அதிகம் புரியும். மூன்று பருவங்களின் வாசனையை அறிந்தவை மரங்கள்தான். மரங்களைப் பற்றி கவனம் கொள்வதன் மூலம் நம்மை நாமே அறிந்துகொள்கிறோம்.

தொடத்தூண்டும் விதமாக எப்படி இந்த ஓவியம் வரைய முடிந்தது என்கிறார்கள் வந்தவர்கள். ‘குள்ள அப்பு’ மாதிரி சில விஷயங்களை வெளியிட முடியாது. மரங்களை வழிபடுவது தமிழர் மரபாகவே இருக்கிறது. என்னுடைய கடவுள் மாதிரியான மரத்தோடு நான் தினமும் கைகுலுக்குகிறேன். என் கடவுளை என் கன்னத்தில் முத்தமிடச்சொல்லி என்னால் கேட்க முடியும். காலங்காலமாக நாம் கேட்டு வரும் ‘பாட்டி வடை சுட்ட கதை’ கூட மரத்தடியில்தான் நடக்கிறது. சுற்றுச்சூழலின் அவசியம் புரிய தமிழ் சமூகத்திற்கு எனது எளிய சமர்ப்பணம்தான் இந்த ஓவியங்கள்.’’
- நா.கதிர்வேலன்