ரேஸ் காளை ராம்நாத்



தமிழகத்தின் எந்த ஊரில் மாட்டுவண்டிப் பந்தயம் நடந்தாலும், வெற்றிப் பட்டியலில் ‘உப்பார்பட்டி எம்.எஸ்.ராம்நாத்’தின் பெயர் இருக்கும். ஒருவேளை இல்லாவிட்டால், அந்தப் பந்தயத்தில் முதல் பரிசு வாங்கிய காளைகள் ராம்நாத்தின் கொட்டடியில் இருக்கும். உப்பார்பட்டி ராம்நாத்துக்கு வெற்றியின் மீதும், வெற்றி பெறும் காளைகளின் மீதும் அப்படியொரு காதல்.
தேனி-கம்பம் சாலையில், சற்று உள்ளடங்கியிருக்கிறது உப்பார்பட்டி. ஊரின் எல்லையில், வைகை ஆற்றை ஒட்டிய தென்னந்தோப்பில்தான் ராம்நாத்தின் பிரமாண்டமான பயிற்சிப்பட்டறை இருக்கிறது. 150க்கும் மேற்பட்ட மாடுகள். கூரான கொம்புகளோடு, ஆக்ரோஷமாக சீறுகிற காளைகள், ராம்நாத்தை கண்டதும் குழந்தைகள் போல மாறிவிடுகின்றன.

‘‘எங்களுக்கும் இந்த ஜீவன்களுக்கும் 40 வருஷ பந்தம். விவசாயம், லாரி டிரான்ஸ்போர்ட்னு சம்பாத்தியத்துக்கு வேற தொழில்கள் இருக்கு. இது, எங்களுக்கு தவம் மாதிரி. அப்பாதான் இதை ஆரம்பிச்சு வச்சார். இன்னைக்கும், தினமும் ஒருமுறையாவது வந்து காளைகளைப் பாக்கலைன்னா மனிதர் தவிச்சுப் போயிருவார்.

ஒருமுறை கீழே விழுந்து அவருக்கு கால்ல அடிபட்டிருச்சு. மாவுக்கட்டு போட பூசாரிகவுண்டம்பட்டிக்கு போகணும். அங்கே காரெல்லாம் போவாது. மாட்டுவண்டிதான். வீட்டுல கிடந்த உழவுமாடுகளைப் பூட்டிக்கிட்டு போயிருக்காக. மனுஷன் வலியில துடிக்கிறார். ஆனா, மாடுக அசைஞ்சு அசைஞ்சு நடக்குதுக. அப்பா சிரமப்படுறதைப் பாத்துட்டு நண்பர் ஒருத்தர், உழவுமாடுகளை அவுத்து விட்டுட்டு அவரோட ரேஸ் காளைகளை வண்டியில பூட்டியிருக்கார். நிமிஷத்துல சீறிக் கிளம்புன மாடுக, நாலு கால் பாய்ச்சல்ல வைத்தியர் வீட்டில போய் நின்னுருக்கு. அந்த பாய்ச்சலும் வேகமும் அப்பாவுக்குப் புடிச்சுப் போச்சு. அப்போ ஆரம்பிச்சது... அப்பாவோட ஆர்வம் என்னையும் தொத்திக்கிச்சு! வந்த அரசாங்க வேலையை விட்டுட்டு, இதுதான் வாழ்க்கைன்னு இறங்கிட்டேன்...’’ - ஒரு இளங்காளையின் கொம்பை சீவியவாறு பேசுகிறார் ராம்நாத்.

ராம்நாத்தின் தோட்டத்தில் இருப்பவை அனைத்தும் ஒரிஜினல் நாட்டு மாடுகள். வெற்றி பெற்ற மாடுகளை மட்டுமின்றி, அடிமாடுகளாக சந்தைக்குப் போகும் தரமான மாடுகளையும் வாங்குகிறார். இதுதவிர, கன்றுக்குட்டிகளை வாங்கியும் ரேஸுக்கு பழக்குகிறார்.

‘‘வருஷத்துக்கு 40 மாடுகளை ரேஸுக்கு தயார் பண்ணுவோம். மாத்தி மாத்தி ஓட்டுவோம். தை மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாசத்துக்கு ரெகுலரா ரேஸ் நடக்கும். ரேஸ் நடத்துற ஆட்கள், இங்கே வந்து பாக்கு, பழம் வச்சு அழைச்சுட்டுப் போவாங்க. ரேஸ்ல மூணு விதங்கள் இருக்கு. பெரிய மாடுங்க 16 கி.மீ தூரம் ஓடணும். நடுமாட்டுக்கு 13 கி.மீ. கரிச்சானுக்கு 10 கி.மீ. மூணு பிரிவுலயும் மாடுங்களை ரெடி பண்ணுவோம். பெரும்பாலும் எந்த ஊருக்குப் போனாலும் பரிசோடதான் திரும்புவோம். பணம் மட்டுமில்லாம சைக்கிள், பண்டம், பாத்திரம்னு ஏகப்பட்ட பரிசுகள் கிடைக்கும். அதுல கிடைக்கிற சந்தோஷமும், பெருமையும் வேற எதுலயும் கிடைக்காது...’’ - உற்சாகமாகச் சொல்கிறார் ராம்நாத்.

ரேஸுக்கு காளைகளைப் பழக்குவது சாதாரணமல்ல. ஒரு தடகள வீரன் எப்படித் தயாராவானோ, அதைவிட பல மடங்கு பயிற்சிகள் உண்டாம்.  16 கி.மீ தூரத்தை 36 நிமிடத்தில் கடந்து வரவேண்டும். அதுதான் சிறந்த காளைக்குத் தகுதி. வேகமும், விவேகமும், இளமையும், துடிப்பும் மிகுந்த காளைகளுக்கே இந்த வெற்றி சாத்தியம். ‘‘மாட்டோட உடல்வாகு ரொம்ப முக்கியம். ‘தளுக்கு, புளுக்கு’ன்னு இருக்கக்கூடாது. உடம்பு ஃபிட்டா இருக்கணும். மாட்டோட ஆயுள் 25 வயசு. 10 வயசுக்குள்ள இருக்கிற காளைகள் மட்டுமே ரேஸ்ல நிக்கும். தினமும் அதிகாலையில ஜாகிங். மெல்ல ஓட விட்டுப் பழக்குவோம். அடிக்கடி டிரையல் ரேஸ் விடுவோம். உடம்பை வலுவாக்குறதுக்கு உழவு வேலைக்கு அனுப்புவோம். வைகையாத்துல இறக்கிவிட்டு நீச்சல் பயிற்சி கொடுப்போம்...’’ என்கிற பிரேம்நாத், ரேஸ் காளைகளுக்கான மெனுவையும் பட்டியலிடுகிறார்.

‘‘காலையில 6 மணிக்கு 2 கோழிமுட்டையை 100 மி.லி நல்லெண்ணெயில கலந்து ஊட்டுவோம். 7 மணிக்கு பெருமருந்து வேர். வயித்துல புழுப்பூச்சி அண்டாம இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும் இந்த மூலிகை. 8 மணிக்கு 1 லிட்டர் பசும்பால். அதோட மேய்ச்சலுக்கு அனுப்பிருவோம். சாயங்காலம் 4 மணிக்கு மேய்ச்சல் முடிச்சு கொட்டடிக்குத் திரும்பும். அதுக்குப் பிறகு 2 கிலோ பருத்திக்கொட்டை, அரை கிலோ கொட்டையெடுத்த பேரீச்சம்பழம் தருவோம். 7 மணிக்கு கால் கிலோ அவிச்ச சுண்டல். அதோட நவதானிய மாவைக் கரைச்சு வச்சிருவோம். நைட்டு 9 மணிக்கு செரிமானத்துக்காக ரெண்டு வெத்திலைக்குள்ள மிளகு வச்சு கொடுத்திருவோம். அதோட சோளத்தட்டை, புல்லைப் போட்டு கட்டிருவோம். ஒரே மாட்டை ரேஸ்ல போட்டு வதைக்கிறதில்லை. மாசத்துக்கு ரெண்டு ரேஸ்... அவ்வளவுதான்!’’

‘‘150 மாடுகளைப் பராமரிப்பது சிரமமாக இல்லையா..?’’ என்று கேட்டால், ‘‘மாடு வளர்க்கிற யாரும் நஷ்டப்பட்டதாவோ, கஷ்டப்பட்டதாவோ சரித்திரமே இல்லை’’ என்கிறார் ராம்நாத். ‘‘ஒரு நாளைக்கு தீவனத்துக்கு மட்டும் மொத்தம் 2500 ரூபா செலவாகுது. ஆனா, ஒரு நாளைக்கு 1 லோடு சாணம் கிடைக்குது. 1 லோடு சாணம் 3500 ரூபா. கேரளாவுல இருந்து சாணம் கேட்டு பலபேரு க்யூவில நிக்குறாங்க. உரம், மருந்துப்பொருட்கள்னு பலவிதங்கள்ல சாணம் பயன்படுது. சாணம் விக்கிற காசை வச்சே, வேலை செய்யிற ஆட்களுக்கு சம்பளத்தையும் கொடுத்திடலாம். மற்ற பராமரிப்புச் செலவுகளுக்கு பந்தயங்கள்ல ஜெயிக்கிற பணம் இருக்கு’’ என்கிறார் ராம்நாத்.

‘‘ரேஸ்களில் மாடுகளை விரைவுபடுத்த சாராயம் கொடுக்கிறார்கள், கத்தியால் கீறி காயத்தில் மிளகாய்ப் பொடி வைக்கிறார்கள் என்றெல்லாம் புகார் கூறுகிறார்களே’’ என்றால் கோபப்படுகிறார் ராம்நாத்.

‘‘சாராயம் குடிச்ச மனுஷனால எழுந்து ஓடமுடியுமா..? மயங்கிக் கீழேதான் விழுவான். மாடுகள் மட்டும் எப்படி ஓடும்..? காளைகள் குழந்தைகள் மாதிரி. கண்ணு மாதிரி பாத்துப் பாத்து வளக்குறோம். ஒரே ஒரு ரேஸுக்காக கத்தியால கீறி மிளகாய்ப் பொடி வச்சா, அடுத்த ரேஸுக்கு எப்படி ஓட்ட முடியும்? இங்கே நிக்குற காளைகள்ல ஏதாவது ஒண்ணுக்கு வெட்டுக்காயம் இருக்கா பாருங்க... வண்டிப் பந்தயம்ங்கிறது ஒரு வீர விளையாட்டு. இதுக்கு பெரிய பாரம்பரியம் இருக்கு. இதைப்பத்தி தெரியாதவங்களும், கலந்துக்க முடியலயேங்கிற தாழ்வு மனப்பான்மை இருக்கவங்களும்தான் இதைப் பத்தி வதந்திகள் கிளப்புறாங்க’’ என்று குமுறும் ராம்நாத், ரேஸுக்கு காளைகளைத் தயார்படுத்தும் ரகசியத்தையும் சொல்கிறார்.
‘‘மனிதனை மாதிரி மாட்டுக்கு சாப்பிட்ட உடனே செரிமானம் ஆகுறதில்லை. 36 மணி நேரம் ஆவும். உணவு உள்ளே போனவுடனே கேஸ் ஃபார்ம் ஆகி சோர்ந்து போயிடும். அதனால, ரேஸுக்கு முதல் நாள்ல இருந்து காளைகளுக்கு உணவு கொடுக்கிறதில்லை. போட்டி தொடங்குறதுக்கு முன்னாடி, எலுமிச்சை ஜூஸ் 1 லிட்டர், குளுக்கோஸ் தண்ணி 1 லிட்டர் கொடுப்போம்... அவ்வளவுதான். போட்டி முடிஞ்சதும், 2 மடங்கு சாப்பாடு கொடுத்து ரெஸ்ட் விட்டுருவோம்’’ - ஒரு இளங்காளையின் திமிலை சினேகமாகத் தடவியவாறு சொல்கிறார் ராம்நாத். அடுத்த போட்டிக்கான ஆவலில், கொம்பு சீவப்பட்ட அந்த இளங்காளை எக்காளமிட்டுக் குதிக்கிறது.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ராதா கிருஷ்ணன்

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine