கோவையில் கலக்குது கரும்பு மேட்டிங்!
உலகத்துக்கே கரும்பை அறிமுகம் செய்தவர்கள் நாம்தான்! ‘கரும்பு’ கடிக்காத பொங்கல் ஏது? வருடா வருடம் பொங்கலும் வருகிறது... நாமும் கரும்பை மென்று மென்று துப்புகிறோம். அந்தக் கரும்பு குறித்து நமக்கு வேறென்ன தெரியும்? கோவை மாநகரின் மருதமலை சாலையிலுள்ள ‘கரும்பு இனப்பெருக்க’ நிறுவனத்தினுள் நுழைந்தால் திகட்டத் திகட்டக் கிடைக்கின்றன ‘கரும்பு’த் தகவல்கள்.
‘கரும்பு இனப்பெருக்கத்துக்கு ஒரு நிறுவனமா?’ என ஆச்சரியப்படாதீர்கள். ‘‘கரும்புகளிடையே கலவி நடத்துவதற்குஉகந்த சூழல் நிலவும் ஒரே இடம், இந்தியாவிலேயே கோயம்புத்தூர்தான்’’ என்கிறார்கள் இவர்கள்.
‘‘இது உலகத்தின் முன்னோடி நிறுவனம்ங்க. தொடங்கி சரியா நூறு வருஷமாகுது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துலயே இந்திய விவசாயத்தை மேம்படுத்தறது பத்தின ஆராய்ச்சி நடந்திருக்கு. அப்ப இந்தப் பகுதி கரும்பு சாகுபடிக்கு ஏத்த இடம்ங்கிறதைக் கண்டுபிடிச்சு, இப்படியொரு நிறுவனத்தை உருவாக்கியிருக்காங்க. கரும்பு சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் ஆராய்ச்சிக்குன்னு வேற சில நிறுவனங்கள் இருக்கலாம். ‘இனப்பெருக்கம்’னு எடுத்துட்டா, இந்த ஒரு இடம்தான். மத்திய அரசோட வேளாண் ஆராய்ச்சிக் கழக கட்டுப்பாட்டுல இயங்கிட்டிருக்கு. இன்னிக்கு இந்தியா முழுக்க விளைகிற கரும்பெல்லாம் இங்க கண்டுபிடிச்ச விதைகள்தான்’’ - பெருமை பொங்கப் பேசுகிறார் நிறுவன இயக்குனர் விஜயன் நாயர்.
‘‘ ‘செயற்கை முறை இனப்பெருக்கம்’ங்கிறது எத்தனையோ தாவரங்கள்ல வந்திடுச்சு. ஆனா ‘கரும்பு’ அளவுக்கு ரகங்கள் கண்டுபிடிச்சிருப்பாங்களானு தெரியல. நாங்க சுமார் மூவாயிரம் புது ரகங்களை உருவாக்கியிருக்கோம். எல்லாத்துலயுமே சர்க்கரை அளவு அதிகம், மகசூல் அதிகம், வறட்சி, நோய்களைத் தாக்குப் பிடிக்கறதுன்னு ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கும். அடிப்படையில கரும்பு ஒரு புல். ஆதிகாலத்துல இந்தியாவுக்கு வந்து பார்த்த கிரேக்கர்களும் பெர்சியர்களும், ‘தேனீ இல்லாமலே தேன் தர்ற புல்’னு இதை அதிசயமா பார்த்தாங்களாம். அதுக்கு அப்புறம்தான் இது உலகம் பூரா பரவியிருக்கு. உலகத்துக்கே கரும்பைக் கொடுத்த நாம அதோட இனப்பெருக்க தொழில்நுட்பத்துலயும் எல்லாருக்கும் முன்னோடியா இருக்கணும் இல்லையா? ‘வெள்ளைக்கரும்பு’, ‘செங்கரும்பு’ன்னு பொதுமக்கள் மேலோட்டமா ரகம் பிரிப்பாங்க. ஆனா, நாங்க ‘கோ’ங்கிற (கோயம்புத்தூருக்காக) ஒரே அடைமொழியோட ரகங்களைப் பிரிச்சிருக்கோம். இப்ப தமிழ்நாட்டுல விளையற 90 சதவீத கரும்பான ‘கோ-86032’ நம்ம கண்டுபிடிப்புதான்!’’ என்கிறார் அவர்.'
சரி, கரும்புகளிடையே எப்படி நடக்கிறது இனப்பெருக்கம்? அதையும் விளக்குகிறார்கள் விஞ்ஞானிகள்...
‘‘பொங்கலுக்கு நாம சாப்பிடுறதெல்லாம் சர்க்கரை அளவு குறைவான கரும்புகள். இதை சர்க்கரை எடுக்கப் பயன்படுத்தறதில்ல. செங்கரும்புன்னு இதைச் சொல்வாங்க. ஆலைக்குப் போறது வெள்ளைக் கரும்பு. இந்த வெள்ளைக் கரும்பு கூட பல வகை நாணல், புல் இனங்களை சேர்த்து, அதோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதுதான் நம்ம ஆராய்ச்சி. உதாரணத்துக்கு காட்டுக் கரும்பு இனமான ‘சக்காரம் ஸ்பான்டேனியம்’ங்கிற வகையை வெள்ளைக் கரும்பு இனத்தோட ஒட்டுவோம்.
இதுல ஒண்ணுல ஆண் மகரந்தத் தூளும் இன்னொண்ணுல பெண் மகரந்த தூளும் அதிக அளவுல இருக்கும். பெண் மகரந்தத்தூள் அதிகமா இருக்கற கரும்போட பூவுல ஆண் மகரந்தத் தூளை எடுத்துத் தூவுறது மூலமா இனப்பெருக்கம் நடந்து புது வகை உருவாகுது. இந்த புராசஸ் விடிகாலையில சுமாரா 5 மணிக்கு முன்னாடி நடந்தாகணும். மகரந்தத் தூள் தூவப்பட்ட பிறகு, சுமார் நான்கு வாரத்துக்கு அந்தப் பூவைத் துணியால மூடிப் பாதுகாக்கணும். பறவைகள், காத்துல இருந்து தப்பிக்க இந்த ஏற்பாடு. நாலு வாரம் கழிச்சு துணியோட பிரிச்சுப் பார்த்தா கடுகளவுல விதைகள் உருவாகியிருக்கும். அதை உலர்த்தி, சுத்தப்படுத்தி எடுத்தா நாம நினைக்கிற புதுரக கரும்பு விதை ரெடி!’’ என்கிறார்கள் அவர்கள்.
செயற்கை முறை இனப்பெருக்கத்தோடு கரும்பின் மரபணு மாதிரி சேமிப்பகமும் இந்த நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது. மரபணுக்கள், புது ரக விதைகளைப் பாதுகாக்கும் பணிகளை நிறுவனத்தின் ஆய்வகங்கள் செய்ய, கரும்பின் உலகளாவிய பல ரகங்கள் இந்த சேமிப்பகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘‘கரும்பு விளைச்சலுக்கு மண்ணோட ஈரப்பதம் முக்கியக் காரணி. அதைக் கண்டறிகிற கருவியையும் கண்டுபிடிச்சிருக்கோம். அதுவும் சீக்கிரத்துலயே பயன்பாட்டுக்கு வரும்’’ என்கிறார் நிறுவனத்தின் சீனியர் விஞ்ஞானி புத்திர பிரதாப். நம்ம நாட்டுக் கரும்பை இன்னும் நம்ம கன்ட்ரோல்ல வச்சிருக்கோம்ங்கிறதே இனிப்பான செய்திதான் போங்க! - அய்யனார் ராஜன் படங்கள்: பேச்சிக்குமார்
|