‘‘ஊர் உலகத்தில் அத்தனை பேரும் கோபப்படுறாங்க, பாசத்தில் உருகுறாங்க, காதலில் திளைக்கிறாங்க, கஷ்டத்தில் துடிக்கிறாங்க. என்ன ஒண்ணு... கோபமோ, பாசமோ, அதைக் காட்டுறதுலதான் மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசம். சிலர் எங்கெல்லாம் போகிறார்களோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துறாங்க. சிலர் எப்போதெல்லாம் கிளம்பிப்போகிறாங்களோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துறாங்க. இப்படி அழகான இரண்டு வாழ்க்கை, நதிக்கு இரு கரை மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும். துளி மிகை இல்லை. பொய் இல்லை அதனால் நேர்மையோட இப்போ ‘டேவிட்’ படத்தை தெம்பா தர முடியுது...’’
- தெளிவாகப் பேசுகிறார் பிஜோய் நம்பியார். இந்தியில் ‘சைத்தான்’ படம் மூலம் வித்தியாச முத்திரையைப் பதித்தவர். விரும்பப்படுகிற இளம் இயக்குநர்.
‘‘எனக்கு ஒவ்வொரு படமும் ஒரு தவம். யோசிக்கிற கதை இந்த மண்ணில் நடக்கிறதா இருக்கணும். அதனோட அனுபவச் சாயலை எல்லாரும் உணர்ந்திருக்கணும். இப்போ ஏழெட்டு மாசமா என் உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறது ‘டேவிட்’!
‘ஆக்ஷன் படம்’னு இதை ஒரு வரியில் சொல்லிட முடியாது. ரொம்ப புதுசா, கதறடிக்கிற மாதிரி கூட ஆக்ஷன் இருக்கு. ஆனாலும் இது முழு ஆக்ஷன் படம் இல்லை; கதையில் வன்முறை கூட ஒரு அங்கமா இருக்கு. ஆனா, அதுவும் உணர்வுபூர்வமான விஷயங்களின் வடிகாலா இருக்கு. எனக்கு ‘சைத்தான்’ படத்துக்கு அடுத்து டெக்னிக்கலாவும் ஸ்கிரிப்ட்லயும் அடுத்த கட்டத்துக்குப் போகிற மாதிரி படம் பண்ணணும்ங்கிறதுதான் ஆசை. ‘டேவிட்’ அப்படி வந்திருக்கு. நான் மணிரத்னம் சாரோட பக்தகோடி. அவர் கூப்பிட்ட குரலுக்கு எங்கே இருந்தாலும் ஓடோடி வருவேன். அப்படித்தான் ‘ராவணனு’க்கு வந்திருந்தேன். விக்ரம் அப்போதான் பழக்கம். நடிப்புல பெரிய ஆகிருதியா இருக்கற அவரைப் பார்த்து மலைச்சிப் போய் நின்னேன். ‘இவர்கூட ஒரு படமாவது ஒர்க் பண்ணணுமடா சாமி’ன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். அப்போதான் ‘டேவிட்’ கருவாகி, உருவாகி இருந்த நேரம். நான் அவருக்குக் கொடுக்க நினைச்ச ரோல் ஒண்ணு... ஆனா அவரே மீனவர் ரோலை எடுத்துக்கிட்டார். இனிமே அந்த ‘டேவிட்’க்கு அவரை விட்டா வேறு யாரையுமே நினைச்சுப் பார்க்க முடியலை. நல்ல ரொமான்டிக் ரோல். கோவா கரையில் வாழ்கிற தமிழ் மீனவன். சொன்னா சொன்னதை செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கி சுமக்கிற மனுஷன். விக்ரம் இதில் தொட்டிருக்கிற இடம் நிச்சயம் தமிழ் மக்களுக்கு புதுசு.’’
‘‘எப்படி ஜீவாவையும் சேர்த்தீங்க?’’
‘‘விக்ரம் லைனில் வந்ததும் எல்லாமே கனிஞ்சு வந்தது. ‘அவருக்கே பிடிச்சிருக்குன்னா...’னு இம்ப்ரஸ் ஆகியே எல்லோரும் வந்துட்டாங்க. எனக்கும் ‘சைத்தான்’ பெரிய விசிட்டிங் கார்டு. முதல்ல ‘டேவிட்’ பண்ணணும்னுதான் நினைச்சிருந்தேன். முதல்பட டைரக்டருக்கு ‘டேவிட்’ மாதிரியான பெரிய படம் பெரிய கனவு. அதனால் ‘சைத்தான்’ அமைஞ்சது. மும்பையில ஜீவா இருக்கிற மாதிரி கதை அமைஞ்சிருக்கு. அவரோட இயல்பான செயல்பாடுகள்ல குறுக்கே அரசியல்வாதிகள் வந்துடுறாங்க. அப்புறம் என்ன நடக்குதுன்னு சொல்லியிருக்கேன். இந்தப் படத்தை முடிச்சிட்டு அடுத்தடுத்து தமிழ்ப்படங்கள் செய்யணும்னு ஆசையிருக்கு. நான் பொறந்து வளர்ந்தது கேரளக் கரையோரத்தில தான். தமிழுக்கும் என்னை வளர்த்ததில் பெரும்பங்கு இருக்கு.’’
‘‘மலையாள சினிமா எப்படியிருக்கு?’’
‘‘போன வருஷம் வரைக்கும் சரியில்லை. இந்த வருஷம் சில நல்ல வெளிச்சம் தெரியுது. புதுசா ஒரு சில டைரக்டர்கள் வந்திருக்காங்க. அவங்களை நம்ப முடியுது. ஆனா, முன்பெல்லாம் மலை யாள சினிமா உயரத்தில் இருக்கும். எக்கசக்கமான டைரக்டர்கள் இருந்தாங்க. இந்திய சினிமாவிலேயே மலையாள சினிமா தனி குரலா இருக்கும். மனசை அள்ளும். இப்போ என்னாச்சுன்னு தெரியலை. நாங்க ஜாலியா வேடிக்கை பார்த்த தமிழ் சினிமா, இப்போ எங்களுக்கே சொல்லித் தருது. ‘காதல்’, ‘வெயில்’னு சில அருமையான படங்கள், வாழ்க்கையின் தீராத பக்கங்களை சொல்லிட்டுப் போகுது. தமிழில் படமும் பண்றாங்க, கூடவே அசல் வாழ்க்கையையும் காட்டுறாங்க. தமிழ் சினிமா நல்ல மெச்சூரிட்டிக்கு வந்திருக்கிற தருணம் இது.’’
‘‘இந்தி சினிமா கூட மாறிப் போச்சே...’’
‘‘மாறலை... அப்படியேதான் இருக்கு. ஆனா, ‘தபாங்’ பார்க்கிறவங்க ‘சைத்தானை’யும் பார்க்கிறாங்க. ‘கஹானி’யை ரசிக்கிறாங்க. ‘கேங்ஸ் ஆஃப் வசேப்பூர்’ பரபரப்பா ஓபனிங் தருது. நல்லதைச் சொன்னா, அது உண்மையா இருந்தா, மனசைத் தொட்டா... மக்கள் உயரத்தில் கொண்டு போய் வைக்கிறாங்க. சில சின்னப் படங்கள், பிரமாண்ட படங்களுக்கே வசூல்ல சவால் விடுது. முன்னே இருந்த ரசிகனை விட பரந்துபட்ட சினிமா அறிவு இப்போ இருக்கு. எங்கே அயல் சினிமா ரிலீஸ் ஆனாலும் அடுத்த நாளே கைக்கு வந்துடுற தகவல் யுகத்தில இனிமே புதுசா இருந்தா மட்டும்தான் ரசிப்பாங்க.’’
‘‘தமிழ் சினிமாவில் பிடித்த ஆளுமைகள்...’’
‘‘வெற்றி மாறனிடம் ரொம்ப எதிர்பார்க்க முடியுது. அதற்கு அவர் தகுதியானவரா தெரியறார். வசந்தபாலனை ‘வெயில்’ படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். தியாகராஜன் குமாரராஜா ‘ஆரண்ய காண்ட’த்துக்கு அடுத்து என்ன படம் பண்றார்? அந்தப் படத்தை அப்படி ரசிச்சேன். அவரோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய், அவர் ஒர்க் பண்றதைப் பார்க்க விருப்பமா இருக்கு. இவங்க மூணு பேரும் இன்னும் பெரிய இடத்திற்கு போவாங்கன்னு தோணுது.’’