மார்கழி மாதமே பொங்கலுக்கான ஆயத்தங்கள் கிராமங்களில் தொடங்கிவிடும். சூடாறாத மண்பானைகள் மாட்டு வண்டிகளில் வீதியுலா வரும். பானைகளைத் தட்டிப் பார்த்து வாங்குவதே ஒரு கலை. கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளைக் கூட, ஒரு சுண்டு சுண்டி கண்டுபிடித்து ஒதுக்கி விடுகிற லாவகத்தில் கிராமத்துப் பெண்கள் கைதேர்ந்தவர்கள்.
ஆசாரி வீட்டிலிருந்து அகப்பை வரும்... உறவுகள் வீட்டிலிருந்து கரும்பு வரும்... சம்பந்தி வீடுகளிலிருந்து சீர் வரும். பனி போர்த்திய நள்ளிரவுகளில் தைமகளின் வருகையைத் தெரிவித்து பாட்டு பாடி சேமக்கலமும் சங்கும் இசைத்துக் கொண்டே செல்வார்கள். வீடுகளை சுத்தமாக்கி, காவியடித்து, புதியதொரு வாழ்க்கைக்கு மக்கள் தயாராவார்கள். மாக்கோலம், பூக்கோலமாக வாசல்கள் பூத்துக் குலுங்கும். நினைக்கவே நெஞ்சில் பூ பூக்கிறது.
இன்று காலத்தின் வேகத்தில் பண்டிகைகளின் பண்புகளே மாறிப்போய் விட்டன. கல்லடுப்பு வைத்து, மண்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைப்பதெல்லாம் பழமையாகி விட்டது. கிராமங்களில்கூட ஸ்டவ் அடுப்புகளில்தான் பானைகள் பொங்குகின்றன. கன்னிப்பொங்கல், மற்றுமொரு விடுமுறை நாளாகி காணும் பொங்கலாகி விட்டது. ஆனாலும், சில கிராமங்கள் மட்டும் தங்கள் கொண்டாட்டங்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக கடைபிடித்து வருகின்றன. அப்படியான ஒரு கிராமம்தான் ஆவூர். கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகிய கிராமம்.
ஆவூர் கிராமத்தின் கன்னிப்பொங்கலைப் பார்க்க அண்டை கிராமங்கள் அனைத்தும் மார்கழி மாதமே தயாராகி விடுகின்றன. தை முதல்நாள் வீட்டுப்பொங்கலும், இரண்டாம் நாள் மாட்டுப்பொங் கலும் கோலாகலமாகக் கழிய, மூன்றாம் நாள் ஊரே வண்ணமயமாகி விடுகிறது.
‘‘அந்தக் காலத்துல கன்னிப் பொண்ணுங்க யாரும் வீட்டை விட்டு வெளியவே வரமாட்டாங்க. கன்னிப்பொங்கல் அன்னிக்கு மட்டும்தான் அவங்களை வெளியில பாக்கமுடியும். பட்டு உடை போட்டுக்கிட்டு, கூந்தல்ல பூ தச்சுக்கிட்டு வெளியே வந்தா, ஊரே கூடி நின்னு வேடிக்கை பாக்கும்... மாமன், அத்தை புள்ளைன்னு திரண்டு நின்னு கேலி, கிண்டல்னு குதூகலமா இருக்கும். இன்னைக்கு பொண்ணுங்க ஆம்புளைகளுக்கு நிகரா காலேஜு, ஸ்கூலு, வேலை வெட்டின்னு போகத் தொடங்கிட்டாங்க. ஆனாலும் கன்னிப்பொங்கல் மரபு மட்டும் மாறலே...’’ என்கிறார் ஜெயலட்சுமி.
‘‘வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கலை விட கன்னிப்பொங்கல் எங்களுக்கு விசேஷம். முதல்நாள் ராத்திரியே கல்யாணமாகாத பொம்பளைப் புள்ளைங்க மருதாணி வச்சு கன்னிப் பொங்கலுக்கு தயாராகிடுவாங்க. அதிகாலையில தலைக்கு பூ தச்சு, பட்டு உடை உடுத்திக்கிட்டு, ஊர் முகப்புல இருக்கிற பிள்ளையார் கோயில் முன்னாடி கூடிடுவாங்க. சூரியன் உதிக்கத் தொடங்கின உடனே கும்மி ஆரம்பமாயிரும்’’ என்று பூரிக்கிறார் திலகவதி.
கன்னிப்பொங்கல் அன்று கும்மி அடிப்பதற்காக ‘கன்னிக்கும்மி’ என்றே பாடல்கள் உண்டாம். எழுத்து வடிவற்ற அந்த கும்மி போன தலைமுறையோடு வழக்கொழிந்து விட்டது. ஆனால், அதே எள்ளல் தொனிக்கும் சினிமாத்தனமான நவீன பாடல்கள் வந்துவிட்டன.
‘குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
பந்தலில பாவக்கா
காச்சிருக்கு ஏலக்கா
மாமன் வருவான் பாத்துக்கோ
பணம் தருவான் வாங்கிக்கோ
சுருக்குப் பையில போட்டுக்கோ
நாகப்பட்டினம் போவலாம்
நல்ல இட்லி வாங்கலாம்...’
- இப்படியாக கும்மி நீள்கிறது.
‘‘கோயில்ல கும்மி கொட்டி முடிஞ்சதும் பொண்ணுங்கல்லாம் சேந்து வீடு வீடாப் போவோம். ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் நின்னு கும்மியடிப்போம். அந்த வீட்டுக்காரங்க அரிசி, வெல்லம், கரும்பு, காசெல்லாம் போடுவாங்க. எல்லா வீட்டுலயும் வாங்கி முடிச்சதும், நேரா பொய்கை ஆத்துக்கரைக்குப் போயிருவோம். அங்கேதான் விசேஷமே...’’ என்று ஆச்சரியக்குறி இடுகிறார் பிரியதர்ஷினி.
பொய்கையாற்றுக் கரையில் பெரிய பானையை வைத்து, வாங்கிய அரிசி, வெல்லத்தைப் போட்டு கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள். சோறு தயாரானதும், விளையாட்டுகள் களைகட்டுகின்றன. ஆடிப்பாடி முடித்ததும், எல்லோரும் அமர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுகிறார்கள். சூரியன் மேல்வானில் முகம் மூடி வெட்கத்தில் சிவக்க, கொண்டாட்டம் முடிவுக்கு வருகிறது. கிடைத்த பணத்தை ஆளாளுக்குப் பிரித்துக் கொள்கிறார்கள். மீண்டும் ஊர்நோக்கி நகர்கிற இளம் பெண்களின் முகத்தில், ‘இந்த நாள் சீக்கிரம் முடிந்துவிட்டதே’ என்ற ஏக்கம் தேங்கி நிற்கிறது.
திருமணத்துக்குக் காத்திருக்கிற பெண்கள் இந்த வருடம் கன்னிப்பொங்கலில் கலந்துகொண்டால், அடுத்த ஆண்டு வரும் பொங்கல் தலைப்பொங்கலாக இருக்கும் என்பது ஆவூர் மக்களின் தீர்க்கமான நம்பிக்கை.
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்