“பிற்காலத்தில் கொடை வள்ளலாக வருவார் என்று தெரியாமலேயே ரஜினிக்கு நான் குடை பிடித்துக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் இப்போதும் எனக்குள் நிழலாகப் பதிந்திருக்கிறது’’ என பழைய நினைவுகளில் நுழைகிறார் கதாசிரியர் கலைஞானம்.
‘‘ரஜினி செகண்ட் ஹீரோவாக நடித்த ‘ஆறு புஷ்பங்கள்’ படத்துக்கு நான்தான் கதை. அவரது ஸ்டைலைப் பார்த்துவிட்டு, ‘ஏன் இவரை ஹீரோவா போட்டு படம் எடுக்கக்கூடாது’ என்ற கேள்வி எழுந்தது. அந்தப் படம் முடிஞ்சதும் சின்னப்ப தேவர், ‘நான் பைனான்ஸ் பண்றேன். நீ சொந்தப் படம் எடு’ என்றார். அப்படி நான் தயாரித்த படம்தான் ‘பைரவி’. ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன்.
மேட்டுப்பாளையம் பக்கத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுத்தோம். சுற்றிலும் பொட்டல் காடு. அவசரத்துக்கு எதுவும் வாங்க ஒரு கடை கூட கிடையாது. வில்லன் ஸ்ரீகாந்தும் ரஜினியும் மோதும் இந்தக் காட்சியில், கட்டைக் காலை வைத்துக்கொண்டு 400 அடி உயர குன்றில் ஏறுவார் ரஜினி. அப்போது அவரது கட்டைக் கால் கழன்று மலைக்குக் கீழே இருக்கும் ஸ்ரீகாந்த் முன்பு வந்து விழும். ‘இனி ஒத்தக் காலை வச்சுக்கிட்டு எங்கடா போகமுடியும்?’ என ரஜினியைப் பார்த்து சிரிப்பார் வில்லன். இந்தக் காட்சியை எடுக்கும்போது 109 டிகிரி வெயில். பாறை மேல் செருப்புகூட இல்லாமல் நின்று, ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தார் ரஜினி.
டேக் முடிந்ததும் கீழே இறங்கி வந்தார் ரஜினி. உள்ளங்கை அளவுக்குக்கூட ஒதுங்குவதற்கு நிழல் இல்லை. கேமராவுக்காக வைத்திருந்த குடையை வாங்கி, அதைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம். அந்தப் படத்தின் சிட்டி உரிமையை வாங்கியிருந்த தாணு, ரஜினிக்கு 20 அடி கட் அவுட் வைத்து, ‘சூப்பர் ஸ்டார்’ என விளம்பரம் செய்தது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.
ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினவன் நான். பாரதிராஜாவிடம் சேர்வதற்கு முன்பாக பாக்யராஜ் என்னிடம்தான் பணியாற்றினார். நிறைய படங்களைத் தயாரித்து, ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமல் நின்றபோது இந்த இருவரும்தான் எனக்கு உதவி செய்தார்கள். ‘அருணாச்சலம்’ படத்தில என்னை இணை தயாரிப்பாளராக்கினார் ரஜினி. ‘இது நம்ம ஆளு’ படம் மூலமாக பாக்யராஜ் உதவி செய்தார். எனக்கு மட்டுமில்லை, மாதம் நூறு குடும்பத்துக்காவது தர்மம் செய்கிறார் ரஜினி. முன்னாடியே கொடை வள்ளல் என்றதற்குக் காரணம் அதுதான். என்னை மறக்காமல் அவர் செய்த உதவியை நானும் மறக்கமாட்டேன்’’ என நெகிழ்கிறார் கலைஞானம்.
- அமலன்
படம் உதவி: ஞானம்