கடலோரம் தலை பிளந்து கிடந்த
உடல்.
இறப்பிலும் மூட மறுத்த கண்களின்
நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு, ஆச்சர்யம், தவிப்பு, தத்தளிப்பு, கொதிப்பு, ஆற்றாமை,
முடிவற்ற ஒரு பெருங்கனவு.
- பெருகி கை நனைக்கும் உதிரம் போல் அதிரச் செய்யும் இந்தக் கவிதை சேரனுடையது. கனடாவில் வசிக்கும் ஈழக்கவிஞர். அற்புதமான எழுத்துக்காரர். சில ஆயுதங்களை மௌனிக்கவே செய்ய முடியாது. அப்படித்தான் சேரனின் எழுத்தும் பேச்சும். சென்னை வந்திருந்த சேரனிடம் நடந்தது இந்த உரையாடல்.
கடந்த கால் நூற்றாண்டு புலம்பெயர் வாழ்க்கை எப்படியிருக்கிறது? அந்த வாழ்க்கையில் பெற்றது என்ன?
‘’துவக்க காலங்களில் அலைவும் உழல்வுமாகத்தான் இருந்தது. ‘காலம் மாறும், பழையபடி ஊருக்குத் திரும்பி விடலாம்’ என்ற மெல்லிய நம்பிக்கை இருந்தது. பின்னர் அது அற்றுப் போயிற்று. இப்போது புலம்பெயர் வாழ்வு பல்வேறு சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் தருகிறது. அவற்றுள் முக்கியமானதாக அமைவது எனக்குக் கிடைத்துள்ள பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் போன்றவை. இலங்கையில் இது சாத்தியமில்லை.
ஏறத்தாழ இரண்டேகால் லட்சம் தமிழர்கள் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகர எல்லைக்குள் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை விட, கனடாவின் டோராண்டோ நகரில் வாழ்கிற தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். கனடாவின் தமிழ்ச் சமூகத்துக்கு இப்போது வயது 22. புலம்பெயர் சமூகங்களைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகள் என்பது வேர்விட்டுக் கிளைத்து வளர போதுமான காலம் அல்ல. இங்குள்ள ஈழத் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் போர், இனப்படுகொலைக்குத் தப்பி அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் புலம் பெயர்ந்தவர்கள். அழிவுகளையும் அவலத்தையும் தொடர்ச்சியாக சுமந்தவர்கள். அத்தகைய பின்னணியில் வந்தவர்கள், தாம் புலம்பெயர்ந்து புகுந்த நாட்டில் வேர்கொள்ள இன்னும் அதிக காலம் எடுக்கும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் குறுகிய காலத்தில் கனடாவில் மிகுந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். இதற்கு கடின உழைப்பும் ஒரு காரணம்; அரசியல் உணர்வு இன்னொரு காரணம். பல்வேறு சமூக அமைப்புகள், உறவுப் பிணைப்புகளால் இறுக்கமாகப் பின்னி வைத்திருக்கும் சமூக வலையமைப்பு இன்னொரு காரணம்.
புலம்பெயர் சூழல் தருகிற சிக்கலான சவால், மொழி தொடர்பானதாகும். கனடாவில் தமிழ் ஆட்சிமொழியோ, நிர்வாக மொழியோ அல்ல. இத்தகைய தளத்தில் தமிழைப் பயிற்றுவிப்பதும் பயன்படுத்துவதும் எமக்கு முன்னே உள்ளே பெரிய சவால். தமிழை நாம் திணிக்க முடியாது. மெது மெதுவாக ஊட்டவே முடியும்.’’
இலங்கைக்குத் திரும்பும் ஆசை இப்போதும் உள்ளதா? இலங்கை திரும்பினால் எந்தவிதமான பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?
‘‘ஈழத்துக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்ற விருப்பம் எப்போதும் என்னிடம் உள்ளது. எனினும் இப்போது நிலவுகிற அரசியல் சூழல், என்னைப் போன்றவர்களை அங்கு நெருங்க விடாது. மஹிந்த அரசை விமர்சிப்போர் அனைவரையும் ‘புலிகள்’ என்று முத்திரை விடுகிற நிலைமை அங்கு தீவிரமாக உள்ளது. சிங்கள இனவாத நாளிதழான ‘திவயின’விலும் என்னைப் பற்றிய பல அவதூறுகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டிருக்கிறார்கள். என்னை ‘புலிக் கவிஞர்’ என்று குறிப்பிடுகிறார்கள். எக் காலத்திலுமே விடுதலைப்புலிகள் அமைப்போடோ அல்லது வேறெந்த ஈழத்தமிழ் இயக்கங்களுடனோ நான் இணைந்து செயல்பட்டதில்லை என்ற உண்மை பரவலாகத் தெரிந்தது என்றாலும், இப்போதுள்ள இலங்கை அரசு தன்னை எதிர்க்கும் எவரையும் ‘பயங்கரவாதி’ என முத்திரை குத்தி அழிக்கத் தயங்காது. இந்தச் சூழலில் சாவதை விட வாழ்வுதான் எனக்குப் பெரிது.’’
உங்கள் கவிதைகள் மற்றும் எழுத்துகளின் அரசியல் என்ன?
‘‘மனிதம் உருவழிகையில் / மௌனத் திரை இறக்கி / நிஷ்டை கூடுவது / கவிஞனுக்கு அப்பாற்பட்டது/ பேசுகிற கவிஞன் ஒரு கண்ணிவெடி/ பேசாதவன் / பின்னர் பிரளயமாவான்
- இது ‘இறுதி வார்த்தை’ எனும் தலைப்பில் 1986ல் நான் எழுதிய கவிதையொன்றின் சில வரிகள். என்னுடைய கவிதை, எழுத்து, அரசியல் செயற்பாட்டின் மையத்தை இவ்வரிகளை விடத் தெளிவாக வேறு எப்படி நான் சொல்வது?’’
தங்களின் கவிதை உலகம் எளிமையானதாகவும், அதே சமயம் அசாதாரணமான கவித்துவ பொதுமை உடையதாகவும் அமைகிறது. எப்படி அதனை சாத்தியப்படுத்துகிறீர்கள்?
‘‘இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலொன்றைத் தந்துவிட முடியுமா என்பது பெரிய சந்தேகம்! கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களுடைய வாழ்வு, சாவு, இழப்பு, அலைவு, விடாமுயற்சி, காதல், கனிவு, எதிர்ப்பு என எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும், குரலாகவும், பெருங்கனவாகவும் என்னுடைய கவிதைகளும் அமைந்தன. எளிமையும் அழகும் நளினமும் மாயமும் நுண்ணுணர்வும் சாதாரண மக்களுடைய - அவர்களுக்கான மொழியிலும் கூட அமைவது இயல்பே என்பது என் எண்ணம். பல்வேறு நாடுகளில் கவிதைகளை வாசிக்கிற/நிகழ்த்துகிற அனுபவம் கிடைத்தபோது கவிதைகளால் பரிச்சயம் அற்ற பலருக்குக்கூட கவிதா உணர்வைத் தொற்ற வைக்கக் கூடிய சாத்தியம் எளிதாகக் கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.’’
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு ஈழப்போராட்டத்தைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களிடம் எழும் எண்ணங்கள் என்ன?’’
‘‘முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் சென்ற ஆயுதப் போராட்டம்தான். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு கூறு அந்த ஆயுதப் போராட்டம் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் ஈழவிடுதலைப் போராட்டம் முழுமையுமே முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெற்றுவிட்டதாகச் சொல்லி விட முடியாது. போராட்டம் என்பதையும் வெறுமனே ஆயுதம் ஏந்திய போராட்டமாக நாங்கள் குறுக்கி விட முடியாது. ஈழ விடுதலை என்ற மாபெரும் லட்சியம் எய்தப் பெறுவதற்கான ஆழமான போராட்டம், பண்பாட்டு, அரசியல், சமூகத் தளங்களில் தொடரத்தான் போகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறை இப்போது இன்னும் பரவலாகவும் செறிவாகவும் இடம் பெறுகிறது. நிலப் பறிப்பு, தமிழர் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது, சிங்கள - பௌத்தக் குடியேற்றங்கள், வடக்கு - கிழக்கு மாநிலங்களில் ராணுவ ஆட்சி என இன அழிப்பு, முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் தீவிரமாகத் தொடர்கிறது. இந்த நிலைமை போராட்ட உணர்வை மெல்ல மெல்லக் கிளர்ந்தெழ வைக்கிறது.
உலக அரங்கில் ஏற்பட்டு வந்த மாற்றங்களைத் தீவிரமாக நாம் உள்வாங்கத் தவறியது ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கான ஒரு காரணம்தான். எனினும் அதுதான் பிரதானமான காரணம் அல்ல. விக்கிலீக்ஸ், ஐ.நா. அவையின் உள்ளக அறிக்கை, நார்வே அரசின் சமாதான முயற்சிகள் பற்றிய விமர்சன அறிக்கை மற்றும் உள்விவரம் தெரிந்த ராஜதந்திரிகள் கடந்த மூன்றாண்டுகளாக இடையிடை தெரிவிக்கிற தகவல்கள் வேறு வகையில் இருக்கின்றன.
எவ்வழியிலாவது விடுதலைப்புலிகளை அழித்து விடுவது என்ற தீர்மானத்தை 2006ம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ‘சர்வதேச சமூகம்’ எடுத்திருந்தது. ‘எத்தனை ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளை அழிப்பதே தேவை’ என்ற நிலைப்பாடுதான் அது. 2009ல் ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தலைவராக இருந்த யூகியோ தகாசு ‘விடுதலைப்புலிகள்தான் பிரச்னை; அவர்களை அழிப்பதற்காக எத்தகைய விலையையும் கொடுக்கலாம். பயங்கரவாதப் புலிகளை ஒழிக்க, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் துரதிர்ஷ்டவசமாக நாம் பலி கொடுக்க வேண்டியிருக்கும்’ என்றார்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டாலும், இலங்கையில் ‘ஸ்திரத்தன்மை’ ஏற்பட்டால் அதுவே போதும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கருதினார். அமெரிக்காவும் இங்கிலாந்தும் சமாதானத்துக்கு எதிரான குற்றத்தைப் புரிந்தவர்கள். புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்த வேளை, அதனைக் குழப்புவதற்கான எல்லா நடவடிக்கைகளுக்கும் இவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் இணக்கமாகவும் சாதகமாகவும் செயல்பட்டது இந்திய அரசு.
இத்தகைய பின்னணியில் எந்த ஆயுதப் போராட்டமுமே தோற்கடிக்கப்பட்டிருக்கும். புலிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் எப்போது வலுக்கட்டாயமாக தமிழ் மக்களைப் படைக்குச் சேர்க்க ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்தே விடுதலையை இழந்து விட்டார்கள். விடுதலைப் போராட்டத்தைக் கூலிப்படையாலும், கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்ட சிறுவர்கள், இளைஞர்களாலும் நடத்த முடியும் என நான் கருதவில்லை. மேற்கூறிய எல்லாவற்றையும் பற்றிய ஒளிவுமறைவற்ற, ஒரு தீவிரமான சுய விமர்சனமே இப்போது நமக்குத் தேவை. அதனடிப்படையில்தான் நமது எதிர்காலச் செயல் திட்டம் கட்டி எழுப்பப் படவேண்டும்.’’
இலங்கையில் இனிமேல் தமிழர்கள் எழுச்சி சாத்தியமா?
‘‘இலங்கையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நுணுக்கமான இனப்படுகொலையை அவதானிப்பவர்களுக்கு ஒன்று மிகத் தெளிவாகத் தெரியும். தொடரும் ஒடுக்குமுறை மக்கள் எழுச்சிக்கு வித்தாகும் என்பதே அது. மக்கள் எத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பது என்பதை அவர்களுடைய எதிரிகளே பெருமளவுக்குத் தீர்மானிக்கிறார்கள் என்பது உண்மை. ஈழத்தமிழர்கள் வலியும் நோயும் இழப்பும் மிகுந்து துயர் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களாக வலுப்பெறுவது அவசியம். விடுதலை உணர்வு எவ்வளவு ஆழமாக இருந்தாலும், இத்தகைய வலு எமக்கு முன் நிபந்தனையாக உள்ளது. ஈழ விடுதலைப் போராட்டங்களின் தொடர்ச்சியிலும் வீச்சிலும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் ஒரு சீரிய பங்கு இருக்கிறது. எனினும் இந்தப் பங்களிப்பு களத்தில்/தளத்தில்/நிலத்தில் இருக்கிற தமிழர்களின் குரல்களையும் அரசியலையும் அபகரிப்பதாக அமைய முடியாது. நாம் அவர்களுக்காக, அவர்களோடு நெருக்கமாக நின்று உணர்வுத் தோழமையுடன் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களை மறுத்து விட்டு அவர்களை நாம் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. இதுதான் நமது வெற்றியின் அடிப்படையான நிபந்தனையாகும்.’’
- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்