சேப்பாக்கம் மைதானத்தில் டோனி சதமடித்த அதே நாளில் ‘ஒன்பதுல குரு’ படத்திற்காக போடப்பட்ட பப் செட்டில் நுழைந்தால் இன்னொரு மைதானம் ஆடிக்கொண்டிருந்தது. ‘மைதா மைதானம் சாய்ந்தாட... வாடா டி20 மேட்ச் ஆட...’ என லக்ஷ்மி ராய் ஒயின் விழிகளை சுழற்றியபடி ஆட, பெக் பெக்காக ஜொள் வடித்தபடி கால்கள் பின்னிக் கொண்டிருந்தது வினய் அண்ட் கோஷ்டி.
செட்டில் பிஸியாக இருந்த இயக்குனர் பி.டி.செல்வகுமாரிடம் பேசினோம். ‘‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குருன்னு சொல்லுவாங்க. ஒன்பதுல குரு அமைஞ்சவங்களுக்கு எல்லாமே பாஸிட்டிவாதான் நடக்கும். இன்னைக்கு கல்யாணமாகிற ஜோடிகளில் பாதிப் பேருக்கு மேல பிரிஞ்சுதான் வாழறாங்க. ஒரே வீட்ல இருந்தாலும் தனித் தனி படுக்கை, சாப்பாட்டில் தனித் தனி டேஸ்ட்னு மனம் ஒட்டாத வாழ்க்கை. இந்த சீரியஸான விஷயத்தை காமெடி ரூட்ல சொல்லியிருக்கேன். படம் தொடங்கி அஞ்சாவது நிமிஷத்திலிருந்து சிரிக்க ஆரம்பிக்கும் ஆடியன்ஸ், வீட்டுக்குத் திரும்பிய பிறகும் விடாம சிரிப்பாங்க.
வினய்தான் ஹீரோ. நான் கதையைச் சொல்ல ஆரம்பிச்சவுடனேயே அவரும், அவங்க அம்மாவும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. மூணு படங்கள்ல கமிட்டாகி இருந்த அவர், மத்த படங்களையெல்லாம் ஒத்தி வச்சிட்டு நடிக்க வந்தார். ‘எத்தனையோ கதைகள் கேட்டேன். இந்தக் கதைதான் இம்ப்ரஸ் பண்ணுச்சு’ன்னு கால்ஷீட் கொடுத்தார் லக்ஷ்மி ராய். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த், சாம்ஸ்னு எல்லாருமே காமெடில அதகளம் பண்ணியிருக்காங்க. நிஜ வாழ்க்கையில லவ்வர்ஸ்னு கிசுகிசுக்கப்படுற பிரேம்ஜி- சோனாவை இதில் காதலர்களாகவே நடிக்க வச்சிருக்கேன். இவங்க வர்ற ஏரியாவுல சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடும். ரொம்ப நாளைக்குப் பிறகு மந்த்ரா நடிச்சிருக்காங்க. ஆண் துணையே இல்லாம வாழலாம்னு நினைக்கிற ஒரு கேரக்டர். ‘படையப்பா’ நீலாம்பரி மாதிரி இந்தக் கேரக்டர் பேசப்படும்.
‘துப்பாக்கி’, ‘நண்பன்’ படங்களுக்குப் பிறகு சத்யனுக்கும் நிறைய ஆடியன்ஸ் இருக்காங்க. அவர் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி, ‘செல்வகுமாருக்கு எந்த அனுபவமும் இல்ல. அவர் படத்துலயா வொர்க் பண்ணப்போறே’ன்னு சிலபேர் பயமுறுத்தியிருக்காங்க. ஸ்கிரிப்ட் நல்லாயிருக்குன்னு சொல்லி நடிக்க வந்தவர், ஸ்பாட் வொர்க்கை பார்த்துட்டு, ‘நல்லவேளை... இந்தப் படத்தை மிஸ் பண்ணலை’ன்னு சந்தோஷப்பட்டார்’’ என்கிற பி.டி.செல்வகுமார், நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓவாக இருந்தவர்.
‘‘அடிப்படையில் நான் பத்திரிகைக்காரன். படங்களுக்கு பி.ஆர்.ஓ, சினிமா வியாபாரம்னு சினிமாக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கேன். சில டைரக்டர்கள் படத்துல செஞ்ச தப்பையெல்லாம் கூடவே இருந்து கவனிச்சி நிறைய கத்துக்கிட்ட அனுபவம் இருக்கு. அதனால படம் பார்த்துட்டு யாரும் குறை சொல்லக்கூடாது என்பதை கவனத்தில் வச்சிக்கிட்டே வொர்க் பண்ணியிருக்கேன். கோபம், விரக்தி, மன அழுத்தம், குடும்பப் பிரச்னைன்னு எல்லாத்துக்கும் இந்தப் படம் நல்ல சிரிப்பு மருந்தா இருக்கும்!’’ என்கிறார் அவர்.
- அமலன்