என்னதான் ரஜினி படம் என்றாலும், 'சிவாஜி’யை சாதாரணமாகப் பார்ப்பதற்கும், 3டி எஃபெக்டில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே! அப்படித்தான் ஓவியங்களும். ‘என்னது... ஓவியங்களில் 3டியா’ எனக் கேட்கத் தோன்றுகிறதா?
ஒரு மலை, அதிலிருந்து கொட்டுகிற அருவி என காட்சிகளை சாதாரண ஓவியத்தில் வெறும் வண்ணங்களில் மட்டும்தான் காட்ட முடியும். நிஜமான மலையிலிருந்து, நிஜமான அருவியே கொட்டுகிற மாதிரி தத்ரூபமாகக் காட்ட முடியும் என்பதுதான் 3டி ஓவியத்தின் சிறப்பே. சென்னையைச் சேர்ந்த பூமா, விதம்விதமான 3டி ஓவியங்கள் செய்வதில் நிபுணி. ‘‘ஓவியங்கள்ல இதுதான் லேட்டஸ்ட். வீடு முழுக்க மற்ற ஓவியங்களை மாட்டி வைக்கிறதுக்குப் பதில், ஒரே ஒரு 3டி ஓவியம் மாட்டிப் பாருங்க... அப்புறம் தெரியும் உங்க வீட்டோட அழகு எப்படி மாறுதுன்னு’’ என்கிற பூமா செய்கிற 3டி ஓவியங்கள், சென்னையின் பல நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பங்களாக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
‘‘மேலெழுந்த மாதிரியான தோற்றம்தான் இந்த ஓவியங்களோட சிறப்பே. இயற்கைக் காட்சியோ, வீடோ, சாமி உருவங்களோ... எதையும் தத்ரூபமா காட்ட முடியும். பிளைவுட், ஸ்பெஷல் கிளே, அக்ரிலிக் கலர், வார்னிஷ்னு இதுக்குத் தேவையான பொருள்கள் எல்லாமே சுலபமா கிடைக்கக் கூடியவை. மத்த களிமண் ஓவியங்கள் எல்லாம் எடை அதிகமா, கையாள சிரமமானதா இருக்கும். இதுல அந்தப் பிரச்னையும் இல்லை. எடை கம்மி. எடுத்துட்டுப் போறதுக்கும் சுலபம். தப்பு பண்ணிட்டாலும், அந்த களிமண்ணை எடுத்துட்டு, மறுபடி ஒட்ட முடியும். பொருள் வேஸ்ட் ஆக வாய்ப்பில்லை.
கத்துக்க நினைக்கிறவங்களுக்கு, 24க்கு 18 இன்ச் அளவுள்ள ஓவியம் பெஸ்ட். ஏன்னா அந்த அளவுலதான் நுணுக்கங்களைத் துல்லியமா கத்துக்க முடியும். அது தெரிஞ்சாலே, எத்தனை சின்ன அளவையும் பண்ணிட முடியும். 10க்கு 15 அளவுள்ள ஒரு 3டி ஓவியத்தை முடிக்க 3 நாளாகும். 1,500 ரூபாய் செலவுல உருவாக்கும் ஓவியத்தை 3,500 ரூபாய்க்கு விற்கலாம். கிரகப்பிரவேசத்துக்கு அன்பளிப்பா கொடுக்க பொருத்தமானது. பெரிய ஹோட்டல்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் இதை விரும்பறதால, விற்பனை வாய்ப்புக்குப் பிரச்னையே இல்லை’’ என்கிறார் பூமா.
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்