‘‘பத்து திருக்குறள் சொல்லுப்பா’’ என்று கேட்டால், கொதிக்கிற எண்ணெயில் குதிகாலை விட்டது போல விறைத்து நிற்பார்கள் பலர். இந்த சூழ்நிலையில் தமிழ்ப் பற்றாலும், திருக்குறள் மீது கொண்ட காதலாலும் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி அமைதியாகக் கல்வி பணியாற்றிக்கொண்டிருக்கிறார் வனிதா ஆனந்த். 1330 திருக்குறளையும் வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதியிருக்கிறார் இவர். கண்ணாடியில் தெரியும் பிம்பத்தில் இதை நேராகப் படிக்கலாம்.
ஏன் இந்த முயற்சி?
‘‘தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து, கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். தமிழ் இலக்கியத்துக்கு என்னாலான சிறு பங்களிப்பைத் தரவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால் இந்த முயற்சி. பெரும்பாலான இந்திய மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. அரபு, உருது போன்ற மொழிகள் வலமிருந்து இடமாகவும், ஜப்பான் மொழி மேலிருந்து கீழாகவும் எழுதப்படுகிறது. தமிழ் மொழியை நான் வலமிருந்து இடமாக எழுதியிருக்கிறேன். எனினும் ஒவ்வொரு எழுத்தும் இட, வல தோற்றத்துடன்தான் தெரியும்’’ எனும் வனிதா, எல்லா குறள்களையும் ஒரே வாரத்தில் எழுதி முடித்திருப்பதுதான் சாதனை.இ, ழ, ள போன்று தமிழ் மொழியில் வளைவுகளும் சுழிகளும் அதிகம் இருப்பதால், வடிவம் மாறாமல் தலைகீழாக எழுதுவதென்பது அத்தனை சுலபமில்லைதான். ஆனால், முயன்றால் முடியாதது எதுவுமில்லையே! உலக அளவில் ஒரு இலக்கியத்தை இந்த வடிவத்தில் மிகக் குறுகிய நாட்களில் எழுதிய முதல் பெண் என்ற பெருமை இவருக்குக் கிடைத்திருக்கிறது.
சாதனை சரி. இதில் சாமான்ய மக்களுக்கு என்ன பலன்?
‘‘இந்த முறையில் படிக்கும்போதும், எழுதும்போதும் மூளையின் வலப்புற இடப்புற பக்கங்கள் ஒரே நேரத்தில் தூண்டப்பட்டு சிந்தனை, நினைவாற்றல், கவன ஒருங்கிணைப்பு இவையெல்லாம் மேம்படும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருமே மூளைக்குத் தரக்கூடிய பயிற்சியாக நினைத்து இதனை முயற்சிக்கலாம். சிறப்புக் குழந்தைகளுக்கு இந்த பயிற்சியைக் கொடுக்கும்போது, அவர்களிடம் பெரிய அளவிலான மாற்றத்தைப் பார்க்கலாம்’’ என்னும் வனிதா, தற்போது சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
வனிதா எழுதிய தலைகீழ் திருக்குறள் புத்தகத்தை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் தமிழ்ப் பிரிவில் இடம்பெறச் செய்துள்ளனராம். ‘‘இதை தமிழ் எனக்குக் கொடுத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்’’ என அகமகிழ்கிறார் இவர்.
- அமலன்