‘ஜெயம்’ ரவிக்கு ரெண்டு வேடம்... அமலாபாலுக்கு ரெண்டு ஜோடி...





‘‘இந்த உலகம் செம்மையா மாறணும்னு நீ விரும்பினா, அந்த வேலையை உன்கிட்ட இருந்தே ஆரம்பிக்கணும். உன்னை முதல்ல சரி செஞ்சுக்கிட்டாலே உலகம் தானா மாறிடும்ங்கிறதுதான் என்னோட இந்தப் படத்துக்கான லைன்..!’’ என்கிறார், வாசன் விஷுவல் வெஞ்சர்ஸின் ‘நிமிர்ந்து நில்’ இயக்குநர் சமுத்திரக்கனி.

இன்றைய தேதியில் படு பிஸியாக இருக்கும் சினிமாக்காரர்கள் மிகச் சிலரில் ஒருவராக இருக்கும் அவர், ஒரு பக்கம் இந்தப் படத்துக்கான படப்பிடிப்புடன், இன்னொரு பக்கம் அவரது ‘போராளி’யின் கன்னட ரீமேக்கான ‘யாரே கூ காடலி’யின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் இருக்கிறார். இவற்றுக்கிடையில் நடிகராகவும் ஒப்பனை போட்டதில், தமிழில் ‘சாட்டை’, ‘நீர்ப்பறவை’ படங்களையும் மலையாளத்தில் ‘ரிப்போர்ட்டரை’யும் முடித்திருக்கிறார்.



‘‘ஒருநாள் ஓய்வுகூட இல்லாம, நேரத்தோட போட்டி போட்டு வேலைக்காக ஓடிக்கிட்டு இருக்கிறதுல இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும்...’’ என்று புன்னகைப்பவர், இப்போதைய முழு கவனமும் ‘ஜெயம்’ ரவி - அமலா பால் இணையும் ‘நிமிர்ந்து நில்’ மீது இருப்பதாக அது பற்றித் தொடர்ந்தார்...

‘‘இது ஒரு சமூகக் களம். பெருநகரத்துல நடக்கிற கதை. இங்கே சமூகத்துல தவறுகள் மலிஞ்சு கிடக்கு. ஒரு தவறை நினைச்சு உள்ளம் கொதிச்சு அடங்கறதுக்குள்ள, அடுத்த தவறு நம் தோள் மேல கை போட்டுக் கூட்டிக்கிட்டு போய் பழசை மறக்கடிச்சுடுது. இப்படியே தொடர்ந்து பயணிக்கிறதுல ஒரு கட்டத்துல நாமும் அந்த தவறுகளுக்குப் பழக்கமாகி, நம்மையும் அறியாம அதுக்கெல்லாம் துணை போகிறோம். அதனாலதான் சமுதாயத்தை மாற்றியமைக்க விரும்பினா அதை முதல்ல நம்மகிட்டேர்ந்தே தொடங்கணும்னு சொல்ல வர்றேன். இந்த லைன் ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடியே கருவாக்கி வச்சதுதான். ஆனா அதை சினிமா மொழியில உளவியல் ரீதியாவும், ரசிக்கும்படியும் சொல்ற ஸ்கிரிப்ட் உருவாக்கத்துக்கு இத்தனை காலம் தேவைப்பட்டது. அது முழுமையடைஞ்சு தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசனுக்குப் பிடிக்க... இதோ ஷூட்டிங் வரை வந்துடுச்சு.



இதுக்கு ரெண்டு தளத்துல பயணிக்கிற ஒரு ஹீரோ தேவைப்பட, ‘ஜெயம்’ ரவிகிட்ட கதை சொல்லி அவருக்குப் பிடிச்சதோட நிக்காம, கதைக்கு முக்கியமான ஒரு கேரக்டருக்குப் பொருந்தறாரான்னு ஒரு மேக்கப் டெஸ்ட் நடத்தி முடிவு செய்தோம். கதைப்படி அவருக்கு இரண்டு வேடம். ஒண்ணுல இளைஞனாவே வருவார். இன்னொண்ணுல 48 வயதுல வருவார். நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேலயே அவருக்கு வேடப் பொருத்தம் வகையாப் பொருந்தி வர, அவரையே முடிவு செய்தோம்.

இந்தப் படம் ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குன்னு தயாராகறதால, தமிழ்ல ரவியும், தெலுங்கில நானியும் நடிக்கிறாங்க. ஆனா ரெண்டு பேருக்கும் ஜோடி அமலா பால்தான். இன்னைக்கு ஒரு குடும்பப்பெண் வீட்டைவிட்டு காலையில வெளியே வந்து, சமூகத்துக்குள்ள இறங்கி, மீண்டும் வீட்டுக்குப் போய்ச் சேர்றதுக்குள்ள ஆயிரம் சவால்கள் முன் நிக்குது. உண்மையை உரிச்சுச் சொல்லணும்னா, அங்கங்கே சில பொய்களும் நடிப்புகளும் தன்னை நிலைநிறுத்திக்கிறதுக்கு அவளுக்குத் தேவைப்படுது. அப்படி பெரிய கண்களும் சின்னப்பொய்களுமா ஒரு இயல்பான நடுத்தர வர்க்கத்துப் பெண் வேடத்துல அமலா பால் வர்றது சினிமாவுக்குப் புதுசா இருக்கும்.



ரவி, நானியோட வயதான கெட்டப்களுக்கு மேக்னா ராஜ் ஜோடியாகறாங்க. ஹீரோக்களோட ரெண்டு வேடங்களும் வேற ஸ்டேட், வேற ஸ்டைல்னு ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமிலாம வரும். ரெண்டும் சந்திக்கிற புள்ளி முக்கியமானது. ஒளிப்பதிவுக்கு சுகுமாரும், இசைக்கு ஜி.வி.பிரகாஷும் என்னோட கைகோர்த்து ரசிப்பைக் கூட்டறாங்க...’’

‘‘சசிகுமார் டைரக்ஷன்ல நீங்க... உங்க டைரக்ஷன்ல சசிகுமார்...ங் கிற உங்க கூட்டணியில அடுத்து என்ன..?’’
‘‘வெளியே தெரியாம நாங்க ஒண்ணா ட்ராவல் பண்ணிக்கிட்டுதான் இருக்கோம். இப்ப வெற்றியடைஞ்சிருக்க சசியோட ‘சுந்தர பாண்டியன்’ ஸ்கிரிப்ட்ல நானும் உக்காந்திருக்கேன். அடுத்து அவர் டைரக்ட் பண்ணப் போறேன்னு சொல்லியிருக்கார். என் கமிட்மென்ட்களும், அவரோடதும் முடிஞ்சு வரும்போது மீண்டும் ஒண்ணாவோம். அவர் டைரக்ஷன்ல நானா, என் டைரக்ஷன்ல அவராங்கிறது அப்பதான் முடிவாகும்..!’’
பாதாம் பிசினில் ஐஸ்கிரீமைக் கலந்தாலும், ஐஸ்கிரீமில் பாதாம் பிசினைக் கலந்தாலும் அது ‘ஜிகிர்தண்டா’தான்..!
- வேணுஜி