ஷாஜகான் எங்கே?





வாங்கற சம்பளத்தை எல்லாம் மனைவிகிட்ட கொடுத்துட்டு கலங்கி நிக்கிறது பத்தாதா? இதுல அவங்க செய்யற வீட்டு வேலைக்கு வேற சம்பளம் தரணுமா? ஏன்யா இப்படி ஸ்மூத்தா போயிட்டிருக்கற குடும்பங்களை பேத்து எறியிறீங்க?
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

பல கண்டங்களிலும் பிறந்து, வளர்ந்து, பயன்பட்டு வந்த காண்டம் பற்றி, ஒரு சுந்தர ‘காண்டமே’ தீட்டி விட்டீர்கள் போங்கள். காண்டத்துக்கு இவ்வளவு ‘நீண்ட’ வரலாறு இருக்கா? ‘ச்சீய்!’
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

குழந்தைப் பருவத்திலிருந்தே தனக்குப் பிடிக்காத பாலை மலிவு விலையில் பவுடராகத் தயாரித்து இந்திய குழந்தைகளின் பசியை போக்கிய ‘வெண்மைப் புரட்சியாளர்’ வர்கீஸ் குரியனின் மரணம், மனம் கலங்கச் செய்தது. அவருக்கு மாபெரும் அஞ்சலியை செலுத்தி பெருமை பெற்று விட்டது அவரைப் பற்றிய கட்டுரை!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

வரும் தீபாவளிக்குள் ஒரு கிராம் தங்கம் 3,500 ரூபாயைத் தொடலாம் என்று பீதியைக் கிளப்பிட்டீங்களே. பெண்ணைப் பெற்றவர்கள், இனி ‘பொன்னை’ப் பெறவே முடியாதா!
- பி.கே.கலைமணி, திருச்சி.

வில்லனாக வந்து ஹீரோவான ரஜினிக்கும், ஹீரோவாகி வில்லனான ஜெய்சங்கருக்கும் இருந்த நட்பை ‘நேற்றைய பொழுதில்’ மூலம் அறிந்தேன். இருவரும் என் நெஞ்சில் நிரந்தர ஹீரோக்களாகிவிட்டனர்!
- எச்.மாணிக்கம், சிவகங்கை.

‘தன்னைக் கட்டிக் கொள்ள அஜித், விஜய் மாதிரி அழகு தேவையில்லை... மனிதநேயம், நகைச்சுவை உணர்வு, புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் போதும்’ என்று சொல்லியிருக்கிற மும்தாஜ் யதார்த்தவாதிதான். அந்த ஷாஜகான் எங்கிருக்கிறாரோ தெரியவில்லை!
- எஸ்.ரங்கதுரை, திருப்பூர்.

‘எமக்கு தொழில் எழுத்து’ பகுதியில் இலக்கியத்தை சாறாகப் பிழிந்தெடுக்கும் எழுத்தாளர் ரோஜா குமார், ஜூஸ் கடையில் பழச்சாறு பிழிந்து பிழைப்பு நடத்திவருவது, எங்கள் கண்களைப் பிழிந்தது!
- எஸ்.வாசுதேவன், சென்னை-14.

‘உங்களுக்கு நீங்களே டாக்டர்!’ பகுதியில், ‘கம்மல் போட்டால் தைராய்டு தாக்காது!’ கட்டுரை அசத்தியது. இப்படிக் காரண காரியத்‘தோடு’ போடப்படும் கம்மலைத்தான் இன்றைய இளசுகள் எங்கெங்கோ போட்டுக்கொண்டு திரிகிறதுகள்!
- ஆர்.எஸ்தர், தொழுதூர்

சிறைக் கைதிகளுக்கு வேலை நல்ல திட்டம்தான். ஆனால், விசாரணைக் கைதிகள் மதில்மேல் பூனை போன்றவர்கள். சிறைக்கும் செல்லலாம்; சிறகடித்தும் பறக்கலாம். விரைவில் விடுதலையாகப் போகும் கைதிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதுதான் முறை!
- கன்யாரி, நாகர்கோவில்.