சிலிண்டர் விலை தெரியுமா?





அரசு மானியத்தில் இனி ஒரு குடும்பத்திற்கு வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்கள்தான். மத்திய அரசின் சமீபத்திய இந்த அதிரடி அறிவிப்பு, நடுத்தர, ஏழைக் குடும்பத்தினர் மத்தியில் பற்றி எரிகிறது. தற்போது ஒரு சிலிண்டரின் விலை 386 ரூபாய் ஐம்பது பைசா. அரசு ஒரு சிலிண்டருக்கு ரூ.347 மானியம் தருகிறது. இந்த மானியம் இல்லாவிட்டால் ஒரு சிலிண்டருக்கு ரூ.733.50 விலை தர வேண்டியிருக்கும். நம் பெண்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருக்கும் சீரியஸான விஷயம்தான். ஆனால், நடிகைகளுக்கு இதைப் பற்றி என்னதான் தெரிகிறது என்று கேட்டுப் பார்த்தோம். கிடைத்த ரிசல்ட், காமெடி மட்டுமே!

ப்ரியா ஆனந்த்: இது நேஷனல் இஷ்யூன்னு தெரியும். ஸோ, அரசு விஷயத்தில் நான் என்ன கருத்து சொல்றதுன்னு தெரியல(!). சமையல், கேஸ், சிலிண்டர் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. மானியம்னா சப்சிடீஸ்தானே? அது நல்ல விஷயம்தான். ஏன் நிறுத்தணும்? ஏழை மக்களுக்காக சலுகை விலையில இன்னும் ரெண்டு சிலிண்டர் எக்ஸ்ட்ரா கொடுத்தா தப்பில்லைன்னுதான் எனக்குத் தோணுது. மத்தபடி நான் சொன்னதை அரசியலாக்
கிடாதீங்க...(!!)

பிரியாமணி: சமையலுக்கு மட்டுமில்ல... சமையலறைக்கும் எனக்குமே ரொம்ப தூரம். வெளியில போனா ஹோட்டல், வீட்டுக்கு வந்தா அம்மாவோட சமையல்னு நல்லா சாப்பிட மட்டும் தெரியும். நீங்க சொல்லித்தான் வருஷத்துக்கு 6 சிலிண்டர் மட்டும் தரப்போறாங்கன்னு தெரியுது. நாம வாங்குற சிலிண்டரோட ஒரிஜினல் விலையும் நீங்க சொல்லித்தான் தெரியுது. இவ்வளவு நாளா எங்க வீட்ல எத்தனை சிலிண்டர் இருக்குங்கிற கணக்கு கூட எனக்குத் தெரியல. மக்கள் பிரச்னைகளை தெரிஞ்சிக்கணும்ங்கிற ஆர்வம் எனக்கு இருந்தாலும், ஷூட்டிங் பிஸியில மறந்துடுறேன். இனிமேலாவது எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.

லக்ஷ்மி மேனன்: இப்போதான் டென்த் படிச்சிக்கிட்டு இருக்கேன். எங்கிட்ட போய் இந்தக் கேள்விய கேக்குறீங்களே? டீ, காபி, ஆம்லெட் போடுற அளவுக்கு மட்டும்தான் எனக்கு சமையல் தெரியும். சிலிண்டர் விலை பத்தி சுத்தமா தெரியாது. ஆமா, இந்த கொஸ்டீனை பப்ளிக் எக்ஸாம்ல கேட்க மாட்டாங்கல்ல?

வரலட்சுமி: என் மேல உங்களுக்கு என்னண்ணே கோவம்? இந்த மாதிரி மேட்டர்ல என்னை மாட்டி விடப் பார்க்கறீங்களே! வெளிநாட்டுல இருந்தவரைக்கும் நானே சமைச்சு சாப்பிடுவேன். இங்க வந்ததுக்கு பிறகு தங்கையோட சமையலை ருசிச்சு சாப்பிடுறேன். அவ நல்லா சமைப்பா. எனக்குக் கிச்சன் தெரியும், சிக்கன் தெரியும்... அவ்வளவுதான்! இதுக்கு மேல சிலிண்டர் பிரச்னையெல்லாம் கேக்காதீங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரலைன்னு போட்டுக்குங்க.

அஞ்சலி: வருஷத்துக்கு 6 சிலிண்டர்னு நியூஸ் வந்துக்கிட்டு இருக்கிறது தெரியும். ஆனா, மானியம்னா என்ன? கிச்சன் பக்கம் எப்பவாச்சும் போவேன். நூடுல்ஸ்னா ரொம்ப புடிக்கும். அதை என் கையாலேயே செஞ்சு சாப்பிட்டா, எக்ஸ்ட்ரா நாலு ஸ்பூன் எடுத்துக்குவேன். வேறெதுவும் சமைக்கத் தெரியாது. மத்தபடி சிலிண்டர் என்ன விலை கொடுத்து வாங்குறோம்ங்கிற டீட்டெயில்ஸ் எல்லாம் மம்மிகிட்டதான் கேட்டு சொல்லணும்.
- அமலன்