நாளைக்கு சாப்பிட மீன்கள் கிடைக்காது!





கடல் அட்டை கடத்தியவர்கள் கைது தடை செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
- அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்க நேரும் இதுபோன்ற செய்திகளைப் பற்றி அதிகம் யோசிக்காமலேயே கடந்து போவது வழக்கமாகி விட்டது நமக்கு. உண்மையில் இந்த உயிரினங்கள் எல்லாம் எந்த விதத்தில் ஸ்பெஷல்? தங்கம், வைரம் போல இவை ஏன் கடத்தப்படுகின்றன? கடலில் இப்படி எத்தனை ஸ்பெஷல் உயிரினங்கள் உள்ளன? இப்படி நமக்குத் தோன்றிய சந்தேகங்களையெல்லாம் கடல் சார் அறிவியலாளர்களிடம் கொண்டு சென்றோம்.

‘‘இது நேரடியாக கடலின் எதிர்காலத்தோடும் மனிதனின் எதிர்காலத்தோடும் தொடர்புடைய பிரச்னை. இந்த உயிரினங்களை இன்று காப்பாற்றாமல் போனால், இன்று நாம் ரசித்து சுவைத்து சாப்பிடும் வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன் வகைகள் கூட நாளை கிடைக்காமல் போகலாம்’’ என்று அதிர்ச்சி தந்தார்கள் அவர்கள்!

மனிதன் நடத்தும் கடல் கொள்ளை
‘‘கடல் என்பது ஒரு பொன் முட்டை இடும் வாத்து போன்றது. அதைக் குத்திக் கிழித்து வயிற்றுக்குள் முட்டை தேடும் வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது’’ என்று ஆரம்பித்தார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் கடல்சார்துறையின் உதவிப் பேராசிரியர் மகேஷ்குமார்.



‘‘1972ல் இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதில்தான் கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பும் வரும். இச்சட்டத்தின்படி 26 சங்கு வகைகள், எல்லா வகையான பவளப் பாறைகள், கடல் விசிறிகள், கடல் அட்டைகள், கடல் ஆமைகள், எல்லா வகையான திமிங்கலங்கள், எல்லா வகையான டால்பின் எனும் ஓங்கில்கள், சுறா மீனில் எட்டு வகைகள், திருக்கைகளில் இரண்டு வகைகள், கடல் குதிரைகள், கடல் பல்லிகள், பெருங்கனவா எனும் வகை மீன்கள், கடல் பஞ்சுகள் போன்ற உயிரினங்களைப் பிடிப்பதும், வைத்திருப்பதும் குற்றமாகும். இதற்கு தண்டனையாக ஒன்றிலிருந்து ஆறு வருட சிறையும் ஐயாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் உண்டு.

அதிகம் வேட்டையாடப்பட்டதாலும் இன்னும் பல்வேறு சுற்றுச்சூழல் காரணங்களாலும் இந்த உயிரினங்கள் கடலில் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன. அவற்றை முற்றிலும் இழந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்தக் கிடுக்கிப்பிடி சட்டம். ஆனால், அரிதான பொருட்களுக்கு இயல்பாக இருக்கும் கிராக்கி இந்த உயிரினங்களுக்கும் இருப்பதால், சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இவற்றை வேட்டையாடுவதும் கடத்துவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அவற்றில் முதல் இடத்தில் இருப்பது கடல் அட்டை. கையில் எடுத்தாலே ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையதால் இதை அட்டை என்கிறார்கள். ‘ஸீ குகும்பர்’ - அதாவது, கடல் வெள்ளரிக்காய் என்பதுதான் இதற்கு ஆங்கிலப் பெயர். வெள்ளரிக்காய் போல இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. ஆனால், இதன் உருளை வடிவத்தை ஆணுறுப்போடு இணைத்துப் பார்த்த சீனர்கள், பாலுணர்ச்சி தூண்டுதலுக்காக இதை உண்ணத் தொடங்கினர். ஆனால் இது நிரூபிக்கப்படாத வெறும் நம்பிக்கைதான்.

இது உண்மையா, இல்லையா என்று உலகம் ஆராய்வதற்குள் மலை போல் இவற்றை வேட்டையாடிக் குவித்துவிட்டார்கள் சீனர்கள். ஒரு காலத்தில் நம் தமிழகத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் இது அதிகம் காணப்பட்டது. ஒரு காலத்தில் ராமேஸ்வரம், தூத்துக்குடி மீனவர் பகுதிகளில் இவற்றைப் பதப்படுத்துவதைப் பார்க்க முடியும். இதன் குடல்களை அகற்றி மண்ணைத் தோண்டி புதைத்துக் காய வைப்பார்கள். சிறிது காலத்துக்கு பிறகு வெளியே எடுத்து சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவார்கள். கருவாடு போல காய்ந்த பிறகு ஏற்றுமதி செய்து விடுவார்கள். சீனர்கள் இதை சூப் செய்து சாப்பிட்டார்கள். இன்று இவை கிடைப்பது அரிதாகிவிட்டது.



கடல் குதிரையிலும் ஆண்மை விருத்திக்கான மருத்துவ குணம் இருப்பதாக சீனர்கள் நம்பினார்கள். இதற்கும் ஆதாரம் இல்லை. பிறகென்ன... இவையும் சீனாவில் காஸ்ட்லி சூப் ஆகிவிட்டன. இவை முட்டையிடாது. குட்டிகள்தான் போடும். அதுவும் குறைந்த எண்ணிக்கையிலேயே குட்டி ஈனும். குட்டிகள் ஈன்றதும் இறந்துவிடக்கூடிய இயற்கையான உடலமைப்பை இவை கொண்டுள்ளன. இந்த காரணங்களால்தான் இது அருகிவரும் இனமாகிவிட்டது.

அலங்காரப் பொருளாகவும், விளையாட்டுகளில் சோழிகளாகவும், டேபிள் வெயிட்டுகளாகவும் இன்னும் ஏராளமான பயன்பாட்டுக்கும் சங்குகள் கடலிலிருந்து திருடப்பட்டன. சங்குகளும் நத்தைகள் போன்ற உயிரினங்கள் என்பதை நினைக்கத் தவறுகிறார்கள் பலர்.

சுறாக்கள், திருக்கைகளைப் பொறுத்தளவில் இவை மற்ற மீன்களைப்போல் முட்டை பொறித்து குட்டிகளை ஈனுவதில்லை. குட்டிகளை நேரடியாக இடுகின்றன. அதிலும் ஒன்றிலிருந்து பதினைந்து குட்டிகளைத் தான் இவை இடும். பொதுவாக நீண்ட நாட்கள் வாழும் மீன்கள்  மெதுவாகவே வளர்ச்சி அடையக்கூடியவை. இந்த இரண்டு மீன்களும் மிக மெதுவாக வளரக்கூடியவை. ஆகவே குட்டிகளைப் பிடித்ததால் இவற்றின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு அரிதாகப் போய்விட்டது. ஒரு காலத்தில் பெரிய சைஸ்களில் கிடைத்த இவை இன்று ஒரு அடி இரண்டு அடிக்கு சிறிதாகவே கிடைக்கின்றன’’ என்றார் அவர்.

சரி, இதனால் நாளைக்கு நமக்கு கடல் உணவே கிடைக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?
அதே துறையைச் சேர்ந்த பேராசிரியரான லிட்டா சுந்தரிடம் கேட்டோம்.
‘‘பொதுவாக கடல் சூழல் என்பது ஒரு செங்கல் கட்டிடம் மாதிரி. ஒரு கல்லை அதிலிருந்து உருவினால், ஒட்டுமொத்த கடலுமே பாதிக்கப்படும். உதாரணமாக, பவளப் பாறை திருடப்படுவதைச் சொல்லலாம். வீட்டில் வண்ண மீன் வளர்ப்பவர்கள், தொட்டிகளில் அலங்காரமாகப் பயன்படுத்துவதற்காக இதைச் சுரண்டி எடுக்கின்றனர். இது சாதாரண பாறைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பவளப் பாறைகளைப் பொறுத்தளவில் கடலின் வளமே அதுதான். சிறுசிறு நுண் உயிரிகளின் கூட்டமைப்புதான் கடினமான பவளப்பாறையாக உருவாகிறது. அந்த உயிரினங்கள் சிறுசிறு மீன்களுக்கு இரையாகின்றன. சிறு மீன்களை உண்டு பெரிய மீன்கள் வாழுகின்றன. பெரிய மீன்களை உண்டுதான் திமிங்கலங்கள் வாழுகின்றன. இப்படி இருப்பதால்தான் கடல் நமக்கு வளமான உணவையும் இன்னும் பல செல்வங்களையும் தந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் அது ஒரு பிரமாண்ட குட்டைதான். அந்தக் குட்டையில் இருந்து நமக்கு வஞ்சிரம் மீனெல்லாம் கிடைக்காது!’’ என்றார் அவர்.வருங்காலத்துக்கு இந்தக் கடலையாவது மிச்சம் வையுங்கள் மக்களே!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஜெகன்