மீண்டும் ஒரு இந்தியக் கொள்ளை?





அடுத்த மூன்றாண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகப் போகின்றன. விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கும். வேளாண் அங்காடிகளில் இடைத்தரகர்களே இருக்கமாட்டார்கள். இனிமேல் தானியங்களே வீணாகாது. இந்தியாவே மாறப்போகிறது..!’

- இப்படித்தான் சொல்கிறது மத்திய அரசு. இந்த மாயாஜாலங்களை நிகழ்த்துவதற்காகவே அமெரிக்காவிலிருந்து வால்மார்ட்டையும், நெதர்லாந்திலிருந்து அஹோல்ட்டையும், பிரான்ஸிலிருந்து கேரிஃபோரையும், ஜெர்மனியிலிருந்து மெட்ரோவையும், இங்கிலாந்திலிருந்து டெஸ்கோவையும் அழைத்து வரப்போகிறார்கள்.
ஏற்கனவே மொத்த வர்த்தகத்தில் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் 51 சதவீத முதலீடு செய்து இந்தியாவில் கால்பதித்து விட்ட நிலையில், சில்லரை வணிகத்திலும் 51 சதவீத முதலீடு செய்யலாம் என்று முழுக்கதவையும் திறந்து விட்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் சில்லறை வர்த்தகமே குலைந்துவிடும் என்று குமுறுகிறார்கள் வியாபாரிகள்.

‘‘பெப்சியும், கோக்கும் வருவதற்கு முன்னால் நம்மூரில் முப்பதுக்கும் மேற்பட்ட கலர் கம்பெனிகள் இருந்தன. இன்றைக்கு ஒன்றுகூட இல்லை. எல்லாவற்றையும் சுருட்டி விழுங்கிவிட்டன அந்த நிறுவனங்கள். முதலில் விலை குறைவாக விற்பது, அந்நிறுவனங்கள் அழிந்தவுடன் ஏகபோகமாக ராஜ்ஜியத்தை நிறுவி, கொள்ளை விலைக்கு விற்பது... இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் ராஜதந்திரம். சில்லறை வணிகத்திலும் அதுதான் நடக்கப்போகிறது...’’ என்கிறார் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்.

‘‘ஏற்கனவே மொத்த வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் கால்பதித்து விட்டன. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் தமிழக அரசு, மொத்த வணிகத்தில் அவர்கள் கால் பதிப்பதை எதிர்க்கவில்லை. தமிழகத்தில் பூந்தமல்லிக்குப் பக்கத்தில் நூம்பல் கிராமத்தில் வால்மார்ட் பிரமாண்டமான குடோன் கட்டும் வேலையைத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் கால் வைத்தபிறகு, வேறு யாரும் மொத்த வணிகம் செய்ய முடியாது. மொத்த வணிகத்தை குத்தகைக்கு கொடுத்த மத்திய அரசு இப்போது சில்லறை வணிகத்தையும் தாரை வார்க்கத் துடிக்கிறது. கொஞ்சகாலத்தில் கொத்தவால் சாவடி, கோயம்பேட்டையெல்லாம் மூட நேர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை.



வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்தால் சில்லறை வணிகத்தில் மிகப்பெரும் மறுமலர்ச்சி நடந்துவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். நேரடியாக பர்ச்சேஸ் செய்வதால் விவசாயிகளுக்கு லாபம் என்கிறார்கள். இதெல்லாம் வடிகட்டிய பொய். முதலில் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பார்கள். மற்ற வியாபாரிகள் ஓய்ந்தபிறகு, இவர்கள் சொல்வதுதான் விலை. உலகெங்கும் இவர்களுக்கு நெட்வொர்க் இருக்கிறது. வாங்குகிற பொருளை குடோன்களில் இருப்பு வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவார்கள். எந்த நாட்டில் அதிக விலை கிடைக்கிறதோ அங்கு அனுப்புவார்கள். பிரதமர் கூட இதைக் கேள்வி கேட்க முடியாது. நம்மூர் வியாபாரி ஒருவரால் ஐந்து சதவீதம் விலை குறைத்து விற்பதுகூட சாத்தியமில்லை. ஆனால் இவர்கள் தொடக்கத்தில் 50 சதவீதம் விலை குறைத்து விற்பார்கள்; தாராளமாக அவர்களால் முடியும். மற்ற வியாபாரிகள் அழிந்துபோனபிறகு 100 சதவீதம் விலையேற்றி விற்றாலும் கேள்வி கேட்க முடியாது. அங்குதான் வாங்கியாக வேண்டும்.

இவர்களோடு எப்படி நம்மூர் சில்லறை வணிகர்கள் போட்டியிட முடியும்? 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். 2 கோடி வியாபாரி களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, 10 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதில் என்ன லாபம்? அந்தக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி மூலம் இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள். இப்போது நிறுவனங்கள் மூலம் அடிமைப்படுத்துகிறார்கள். இவை அமெரிக்கத் துணை ராணுவம் மாதிரி. எந்த நாட்டுக்குள் நுழைந்தாலும் அந்நாட்டை அடிமைப்படுத்தி விடும்’’ என்று கொதிக்கிற வெள்ளையன், ‘‘இடைத்தரகர்கள் என்ற பெயரில் வியாபாரிகளை கொச்சைப்படுத்துகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார்.



‘‘ராஜஸ்தானில் ஒரு விவசாயியிடமிருந்து ஒரு வியாபாரி பருப்பை கொள்முதல் செய்கிறார். அவரிடம் இருந்து இன்னொரு வியாபாரி கொள்முதல் செய்து சென்னை கொண்டு வருகிறார். அவரிடம் இங்குள்ள மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு லாபம¢ வைத்து விற்பார்கள். இதுதான் இயல்பான, நம் கலாசாரம் சார்ந்த சில்லரை வணிகம். இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே வியாபாரிகள். இதில் எங்கிருந்து வந்தார்கள் இடைத்தரகர்கள்?

உண்மையான இடைத்தரகு என்பது ஆன்லைன் வர்த்தகம்தான். அதில் சம்பந்தப்பட்ட யாரும் வியாபாரிகளோ, விவசாயிகளோ இல்லை. இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள்தான் அதில் இருக்கிறார்கள்.

ஏகப்பட்ட பொருளாதாரப் புலிகளைக் கொண்ட நம் மத்திய அரசின் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகள்தான் இன்றைய விலைவாசி உயர்வுக்கு அடிப்படை. சமையல் எண்ணெய்க்குக்கூட வெளிநாட்டை நம்பி வாழும் அளவுக்கு நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்’’ என்று குமுறுகிறார் வெள்ளையன்.



சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைவதால் விவசாயிகளுக்கு லாபம் என்பது உண்மையா? தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டால் சிரிக்கிறார்.

‘‘ஊரை ஏமாற்றுகிற வேலை இது. ரிலையன்ஸ், மோர் போன்ற பெரிய நிறுவனங்கள் இப்போது நேரடியாகத்தான் விவசாயிகளிடம் பொருட்களை கொள்முதல் செய்கிறார்கள். என்ன மாற்றம் வந்துவிட்டது? சில்லறை வியாபாரிகள் கொடுக்கும் விலையைத்தான் கொடுக்கிறார்கள். எந்த வெளிநாட்டுக்காரனும் விவசாயிகளுக்கு நல்லது செய்வதற்காக இங்கே வருவதில்லை. இங்கிருந்து என்ன கொண்டுபோக முடியும் என்பதுதான் அவர்கள் இலக்காக இருக்கும். வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படும் எந்த நாட்டிலும் விவசாயிகளுக்கு அவர்களால் லாபம் இல்லை. ஆனால் ஏராளமான சில்லறை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். அந்நிய நிறுவனங்களின் நலனுக்காக உள்நாட்டு வியாபாரத்தைப் பலியிடப் பார்க்கிறது மத்திய அரசு” என்கிறார் பாலகிருஷ்ணன்.
மத்திய அரசு என்ன சொல்கிறது..?
- வெ.நீலகண்டன்