சுந்தரபாண்டியன் சினிமா விமர்சனம்





‘என் நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே...’ என்று ‘நாடோடிகளி’ல் சசிகுமாரை வைத்து சமுத்திரக்கனி சொன்னதன் தொடர்ச்சி போல, ‘நண்பன் துரோகம் செஞ்சா, அதை உயிர்போனாலும் வெளியே சொல்லக்கூடாது...’ என்று அதே சசிகுமாரை வைத்து இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

உசிலம்பட்டியை இதுவரை எத்தனையோ படங்களில் பார்த்திருந்தாலும், இந்தப்பட ஆரம்பத்தில் அந்த ஊர் மக்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் அசத்தலான அறிமுகமே, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக்கி விடுகிறது. எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் கார்த்திக்தான் இன்னும் அங்கே ஹீரோ என்பதும், ‘பெண் குழந்தை பிறந்தா கள்ளிப்பால் கொடுக்கிறதும் இங்கேதான். அதே பொண்ணு ஆளாகி நின்னா அவளை குலசாமியாக்கி கொண்டாடுறதும் இங்கேதான்...’ என்பதுடன், ‘அந்தப் பெண்ணோட மனசைக் கெடுத்து யாராவது காதலிச்சா இங்கே கொடுப்பாங்க பாருங்க தண்டனை...’ என்று விரியும் காட்சியில் ஊர் ஒதுக்குப்புறமாக வைத்து ஒரு இளைஞனைப் போட்டுத் தள்ளுவதும் ‘பயங்கர’ சுவாரஸ்யம்.

ஊர்ப் பெரிய மனிதர் மற்றும் ரெட்டை அம்மாக்களின் ஒத்தபுள்ளையாக ஆகிப்போனதால் சசிகுமாருக்காக வார்க்கப்பட்டிருக்கும் ‘செல்லப்பிள்ளை’ கேரக்டரைசேஷன் ரசிக்கும்படி இருக்கிறது. தன் முறைப்பெண்களை - அது கல்யாணமாகி அடுத்த வீட்டுக்குப் போனவளாக இருந்தாலும், விரோதம் பாராட்டி நிற்கும் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் - ‘முறை’ வைத்து லந்து கொடுக்கும் கேரக்டரில் அட்டகாசமாகப் பொருந்தியிருக்கிறார். இதுவரை இல்லாத அதிசயமாக அவரும் ‘ரஜினி ஸ்டைல்’ காட்டி நடித்திருப்பதை ரசிகர்கள் விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் கூட அது அவருக்கு பலம்தான். நட்பில் வழக்கப்படியே கர்ணனாக இருக்கும் அவர், நண்பன் இனிகோ பிரபாகரன் காதலிக்க நூல் விட்டுக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவி லக்ஷ்மி மேனனை திரும்பிப் பார்க்க வைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார். அதில் நூல் தவறி விழுந்து, லக்ஷ்மி மேனன் சசியைக் காதலிக்க ஆரம்பித்துவிட... முடிவு என்ன என்பதுதான் மொத்தப் படமும்.

ஹீரோயின் லக்ஷ்மி மேனன் அசத்தலான அறிமுகம். முறைக்கும் அதே முட்டை விழிகளில் காதலைச் சிதறவிடும்போதும், அதே காதலுக்காக அப்பாவின் கோபத்தை எதிர்கொண்டு கண்ணீர் சிந்தி நிற்கும்போதும்... தமிழுக்கு இன்னொரு ஆரோக்கியமான நடிகை கிடைத்துவிட்ட நிம்மதி கிடைக்கிறது. அப்படியே மதுரை மண்ணுக்குப் பொருந்தி வந்திருக்கும் லக்ஷ்மியின் நிறமும் உடல்வாகும் மாடர்ன் கேரக்டர்களுக்குப் பொருந்தி வருமா என்பதை மற்ற இயக்குநர்கள் முயன்று பார்க்க வேண்டும்.

ஹீரோவாகி விட்டாலும்கூட தன் நிலை உணர்ந்து முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் அப்புக்குட்டியும், விஜய சேதுபதியும் கவனிக்க வைக்கிறார்கள். இனிகோ பிரபாகரனின் பாத்திரப் படைப்பும், அவரது நடிப்பும் நன்று. அறிமுகமான படத்துக்குப் பின் அடையாளத்தை இழந்துகொண்டிருந்த ‘பரோட்டா’ சூரிக்கு இந்தப்படம் தெம்பு தரும். சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேனும், லக்ஷ்மி மேனனின் அப்பாவாக வரும் தென்னவனும் பாத்திரம் உணர்ந்து முத்திரை பதிக்கிறார்கள்.

தொய்வே இல்லாத திரைக்கதையில், காமெடி ட்ரீட்மென்ட்டில் கதை சொல்லியிருக்கும் இயக்குநர் பிரபாகரன் தமிழில் நம்பிக்கை வைக்கக்கூடிய இயக்குநர்கள் வரிசையில் வருகிறார். நண்பர்களே அடுத்தடுத்து வில்லன்களாக மாறும் காட்சிகளில் ‘ரசவாதத்தை’ நன்றாகவே அவர் விளக்கியிருப்பதும் ‘ஸ்கிரிப்ட் தேர்ந்த’ உத்தி. பிற படங்களின் சாயல்கள் அங்கங்கே தெரிவதை குறைத்திருக்கலாம். படம் முழுவதும் இயல்பாக வரும் சசிகுமாரின் கேரக்டர், கிளைமாக்ஸில் ‘சூப்பர்ஸ்டார்த்தனம்’ பெறுவதையும் தவிர்த்திருக்கலாம்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுறுத்தினாலும் ரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன். ச.பிரேம்
குமாரின் ஒளிப்பதிவும் கதையின் பாதையில் கைகோர்த்துப் பயணித்திருக்கிறது.
- குங்குமம் விமர்சனக்குழு