நானும் ஓவியாவும் இந்தியா பாகிஸ்தான் இல்லை!





இடப் பக்கம் ஓவியா, வலப் பக்கம் தீபாஷா என விமல் இரட்டை குதிரை சவாரி செய்யும் ஸ்டில்களைப் பார்த்தால் விமலுக்கே பொறாமை வரும். படத்தின் பெயர், ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’. முந்தைய படங்களில் பார்த்திராத ஃப்ரஷ் லுக் விமலிடம். ‘எப்படி இருந்த நீங்க... இப்படி மாறிட்டீங்களே?’ என்று கேள்விகளைப் பற்ற வைத்தோம்.

‘‘இதுக்கு முன்னாடி வரிசையா வில்லேஜ் ஓரியன்டட் கதைகளா வந்துச்சு. இப்படியே போனா, ‘அந்த மாதிரி கேரக்டர் மட்டும்தான் விமலுக்கு செட்டாகும்’னு கூட இருக்கிறவங்களே கோடம்பாக்கத்துல பரப்பி விட்ருவாங்க. சாஃப்ட்வேர் பையன் லுக்ல நாமளும் நடிக்கணுமேன்னு நான் தாடிய சொறிஞ்சப்போ, இயக்குனர் ரவி லல்லின் சொன்ன கதைதான் ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’. தலைப்பு நல்லாயிருக்குல்ல?’’ என்றவர், படத்தின் கதைக்குள் கொஞ்சம் நுழைந்தார்.

‘‘அமெரிக்காவுல மெக்கானிக் எஞ்சினியரா இருக்குற நான், சொந்த ஊரான ஊட்டிக்கு வர்றேன். வந்த இடத்தில் நான் சந்திக்கிற காதலும், அதனால வர்ற பிரச்னைகளும்தான் கதை. பக்குவமே இல்லாத வயசுல ‘இது காதலா’ன்னு புரியாமலேயே ஒரு காதல் வரும் பாருங்க... அப்படி ஒரு காதல்; வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்ச வயசுல பூக்குற காதல்னு ரெண்டு காதல்களை சந்திக்கிறேன். அதை ரசிக்கும்படி சொல்லியிருக்கார் டைரக்டர் ரவி லல்லின். சில சீன்ஸ் அப்புறம் ரெண்டு பாட்டு மட்டும் வெளிநாடுகள்ல ஷூட் பண்ணினோம். மத்தபடி கதை முழுக்கவே ஊட்டியிலதான் நடக்குது...’’



‘‘படத்துல பாட்டு பாடியிருக்கீங்க போல?’’
‘‘அப்படி ஒரேயடியா சொல்லிட முடியாது... ஒரு குத்து மதிப்பா சொல்லலாம். ‘பஸ்ஸு பஸ்ஸு...’ன்னு படத்துல ஒரு பாட்டு வருது. விஜய்பிரகாஷும் ரீட்டாவும்தான் அந்தப் பாட்டைப் பாடியிருக்காங்க. படத்தோட புரமோஷனுக்காக மட்டும் அதே பாட்டை நானும் பாடியிருக்கேன். இசையமைப்பாளர் ஃபைசல் ரொம்ப சூப்பரா ட்யூன் போட்டிருக்கார். யூ டியூப்ல போட்ட முதல் நாளே செம ரெஸ்பான்ஸ்.’’ ‘‘இனி வில்லேஜ் விமல் அவ்வளவுதானா?’’

‘‘அப்படி ஒரு முடிவை எந்த ஒரு நடிகனும் எடுக்கக்கூடாது. நானும் எடுக்கமாட்டேன். ஒரு சேஞ்சுக்காகத்தான் சிட்டி கதைகளைத் தேர்வு செய்ய ஆரம்பிச்சிருக்கேன். ‘கேடி பில்லா, கில்லாடி ரங்கா’, அமுதன் டைரக்ஷன்ல ‘ரெண்டாவது படம்’னு அடுத்தடுத்து ரெண்டு படங்களும் கூட சிட்டி சப்ஜெக்ட்தான். ஆனா, இதுவே தொடர்ச்சியா இருந்தா மறுபடியும் ஆடியன்ஸுக்கு போரடிச்சிடும். அதனால இந்த ரெண்டு படங்களுக்கு அப்புறம், ஒரு கிராமத்துக் கதையில நடிக்கிறேன். அந்தப் படத்தை எழில் சார் இயக்குகிறார்.’’
‘‘ஓவியான்னா உங்களுக்கு ரொம்ப ப்ரியமா?’’
‘‘இந்தக் கேள்வியில கேள்வி தெரியல... சந்தேகம்தான் தெரியுது. நான் நடிக்கிற படத்துலல்லாம் ஓவியாவை நடிக்க வைக்க நான்தான் சிபாரிசு செய்யுறதா இந்த நிமிஷம் வரைக்கும் நியூஸ் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா, சத்தியமா நான் அவங்களுக்கு சிபாரிசு செய்யலீங்க. அதுவா அமையுது. அதுக்கு நான் என்ன பண்றது? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பத்துல கொஞ்சம் கூச்சமா இருக்கும். இப்போ பழகிருச்சு. சமீபத்துல பிரஸ் மீட்ல, ‘இனிமே எனக்கு ஜோடியா அவங்க நடிக்காம பார்த்துக்கறேன்’னு ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.
அவ்வளவுதான்... எனக்கும் ஓவியாவுக்கும் ஏதோ இந்தியா - பாகிஸ்தான் மாதிரி பகைன்னு பூதம் கிளம்பி, மீடியாக்காரங்க விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.



தொடர்ச்சியா என் படத்துல அவங்க நடிக்கிற மாதிரி சந்தர்ப்பம் இருந்ததாலதான் கிசுகிசு கிளம்பிடுச்சு. அதனால கொஞ்ச நாளைக்கு என் படத்துல அவங்க நடிக்காத மாதிரி பார்த்துக்குவேன். கொஞ்சம் கேப் விழுந்ததும் மறுபடி சேர்ந்து நடிப்பேன். இதுதான் முடிவு சார். என் மனைவி என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க. சினிமாவுல கிசுகிசு சகஜம்னு அவங்களுக்குத் தெரியும். அதனால நான் எதைப் பத்தியும் கவலைப்படலை!’’
- அமலன்