நரகத்தில் நிம்மதி வேண்டும்!





‘தொழிலை’க் காரணம் காட்டி அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கிறது சமூகம். ‘அவர்களில் எத்தனை பேர் அந்தத் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள்’ என்கிற கேள்வியை ஒருபோதும் அது கேட்பதில்லை. இந்தப் புதைகுழியில் ‘சூழ்நிலை’ பாதிப் பேரையும் ‘வயிறு’ மீதிப்பேரையும் தள்ளிவிட்டது என்கிறார்கள் அவர்கள். சமீபத்தில் சென்னையில் ஒரு பேரணி மூலம், தங்கள் உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படையாக வலியுத்தியிருக்கிறார்கள் பாலியல் தொழிலாளர்கள். ஒருபுறம் விபசாரத் தடுப்பு போலீசாரின் ‘அழகிகள் கைது’ நாள்விடாமல் பத்திரிகைகளில்... மறுபுறம் இவர்களது பேரணி! எப்படி?
அவர்களிடமே விசாரித்தோம்...

‘‘முன்னுக்குப்பின் முரணான சட்டம் சார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்னு சொல்ற அதே கவர்மென்டுதான் ‘பாதுகாப்பா உடலுறவு வச்சுக்கோங்க’ன்னு விளம்பரமும் செய்யுது. எதைக் கேக்கறது? அதுக்காக நான் எதையும் நியாயப்படுத்தல. நாங்களும் மனுஷங்கதான்னு சொல்ல வர்றோம்... அவ்வளவுதான்!’’ என்கிற கலைவாணி, முன்னாள் பாலியல் தொழிலாளி. ‘இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் சங்கம்’ என்கிற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு கவுன்சலிங் மற்றும் பிற உதவிகளைச் செய்து வருகிறார்.

‘‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில சுமார் ரெண்டாயிரம் பேர் எங்க தொடர்பில இருக்காங்க. ஒவ்வொருத்தருமே ஏதோ ஒரு சூழ்நிலையால, இந்த நரகத்துல தள்ளப்பட்டவங்க. ‘கை, கால் நல்லா இருக்குல்ல... வீட்டு வேலை செஞ்சாவது பொழைக்கலாம்ல’ன்னு சொல்வாங்க. ஆனா, வீட்டு வேலை செய்யப்போன இடத்துலயே சீரழிஞ்சு இந்தத் தொழிலுக்கு வந்தவங்க நிறைய பேர்.
என் கதையை எடுத்தீங்கன்னா, அக்கா புருஷனால அபகரிக்கப்பட்டு, ஏமாத்தப்பட்டு, கைவிடப்பட்டு, வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டுன்னு ஏகத்துக்கும் கஷ்டப்பட்டாச்சு. இன்னிக்கு அதுல இருந்தெல்லாம் மீண்டு, உயிரோடவும் ஓரளவு நிம்மதியாவும் இருக்கேன்னா, ஏதோ புண்ணியத்தாலதான். என்னை மாதிரியே தினமும் எங்காச்சும் ஒரு பெண் விருப்பமில்லாம இந்தத் தொழில்ல இறக்கி விடப்படுறா. எனக்கு வாய்ச்ச அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்காம போனா..? அதனாலதான் எல்லோரையும் ஒண்ணு சேர்த்தோம். மும்பை மாதிரியோ, கொல்கத்தா மாதிரியோ ‘தொழிலை’ அங்கீகரிக்கணும்னு கேக்கறதில்ல எங்க நோக்கம். இந்தச் சுழல்ல சிக்குகிற பொண்ணுங்க, அதுல இருந்து மீண்டு வர்ற வரைக்குமாச்சும் உயிரோட இருக்கணுமில்லையா? இந்தப் பேரணி தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியாதான் இருக்கும். ஆனா என்ன பண்றது?’’ என்கிறார் கலைவாணி.



பெண்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது, 18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுதலைத் தடுப்பது, பெண்ணுறை அணிதல் முதலான பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது, கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தொழிலில் இருந்து மீளத் தேவையான முயற்சிகள் எடுப்பது போன்றவைதான் இவர்களின் முக்கிய தீர்மானங்கள்.

‘‘பாலியல் தொழில்ங்கிறது இங்க குற்றம்தான். ஆனா எல்லா குற்றங்களையும் போலவே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு. இது பத்தின சட்டங்கள் தெளிவா இல்லாததே அதுக்குக் காரணம்’’ என்கிறார் ‘இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம்’ என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஹரிஹரன்.

பேரணியில் கலந்துகொண்ட செல்வி, அன்னலட்சுமி மற்றும் ரீட்டாவிடம் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) பேசினோம்...
‘‘ரெய்டுல பிடிபடற பொண்ணுங்களைப் படம் பிடிச்சு அசிங்கப்படுத்துது மீடியா; சமூகம் விதவிதமா பட்டம் கொடுக்குது. உடல் சுகத்துக்காக வர்ற ஆண்களை விட்டுட்டு, வயித்துப் பொழப்புக்காக போற பொண்ணுங்களை ஏன் குறி வைக்கிறீங்க? பொண்ணாப் பொறந்தது முதல் தப்பு. பொறந்த பிறகு படிச்சு, சுயமா சம்பாதிக்காம ஒருத்தனை நம்பிக் கழுத்தை நீட்டுனது ரெண்டாவது தப்பு. மிச்சமிருக்கிற நாட்களையாவது சிறு வயசுல கழிச்ச ‘குடும்பம்’கிற அமைப்போட கழிக்கணும்கிறது ஆசை. இந்த சேத்துல இருந்து எப்ப வெளியில வருவோமோ தெரியல!’’ என்றபடி முடித்துக் கொண்டார்கள் அவர்கள்.
அது நீ...ண்ட பயணம் என்பது, இவர்களின் தொனியிலேயே தெரிகிறது!
- அய்யனார் ராஜன்
படங்கள்: தமிழ்வாணன்

சட்டம் என்ன சொல்கிறது?

பாலியல் தொழிலாளர்கள்

இப்படி பேரணி நடத்தலாம் என்றால், பிறகு ஏன் ரெய்டு, கைது போன்ற நடவடிக்கைகள்? விபசாரத் தடுப்புப் பிரிவில் ஏகப்பட்ட ரெய்டுகளை நடத்திய உதவி ஆணையர் கிங்ஸ்லினிடம் கேட்டோம்...

‘‘ஒரு பெண் பொது இடத்தில் நின்றுகொண்டு விபசாரத்துக்கு அழைப்பதை அனுமதிக்க முடியாது. அதே போல் குடியிருப்புப் பகுதியில் விபசாரம் நடப்பது தெரிய வந்தாலும் அதைத் தடுக்க வேண்டியது எங்கள் கடமை. மற்றபடி, எந்த வித பிழைப்பாதாரமும் இல்லாத நிலையில் ஒரு பெண், தன் வயிற்றுப்பசிக்கு இதுதான் வழி என தேர்ந்தெடுத்தால், அதில் நடவடிக்கை எடுப்பதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன’’ என்றார் அவர்.