ஷாக்





‘‘டியர்...’’
‘‘என்ன சந்துரு?’’
‘‘மொத மொதலா கிராமத்துக்குப் போகப் போறோம். அங்க இருக்க எங்க தாத்தாவும், பாட்டியும் அந்தக் காலத்து மனுஷங்க. அவங்க முன்னால நீ என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுடாதே. அதைக் கேட்டா அவங்க ஷாக் ஆயிடுவாங்க...’’

‘‘சரி சந்துரு, நான் கவனமா இருக்கேன்...’’
கிராமத்தில் தாத்தா வேங்கடராமனும் பாட்டியும் அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். சொந்தங்கள் பலரும் அடிக்கடி வந்து பார்க்க... இரண்டு நாள் அவர்கள் வீட்டில் நேரம் போனதே தெரியவில்லை. மூன்றாம் நாள் பாட்டியும் தாத்தாவும் தங்கள் அறைக்குள் டி.வியில் ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்வது சந்துருவுக்குக் கேட்டது.
‘‘என்ன இது... நம்ம சந்துரு இப்படி ஒரு பெண்ணைக் கட்டியிருக்கான்? பேசவே தெரியலையே! நான் அப்பிடியே அப்செட் ஆயிட்டேன்!’’ - தாத்தா சொன்னார்.

சந்துரு பதட்டமானான். ‘சே... நம்ம மனைவி பழைய ஞாபகத்துல வாய் தவறி நம்மளைப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டிருப்பா போல. பெருசுக அதைக் கவனிச்சு இப்படி ஷாக் ஆயிட்டாங்களே!’

பாட்டி பதில் சொல்வது கேட்டது... ‘‘நானும் கவனிச்சேன், சந்துருவை ‘என்னங்க’ங்கிறா... ‘ஏங்க’ங்கிறா! ‘நாகரிகமா பேச சொல்லிக் குடுடா’ன்னு சந்துருகிட்ட சொல்லணும். நான் சொல்றது சரிதானே வெங்கட்?’’
‘ஷாக்’ இப்போது சந்துருவைத் தாக்கியது!