நியூஸ் வே





ப்ரியங்கா சோப்ராவின் முதல் மியூசிக் ஆல்பம் ‘இன் மை சிட்டி’, கடந்த வாரம் வெளியானது. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக வளர்ந்த ப்ரியங்கா போலவே ஆல்பமும் இரண்டு இடங்களிலும் உருவானது. ஆல்பத்துக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு. ‘பாப்’ ஆல்பத்தில் பாடினாலும், இன்னும் சினிமாவில் ஒரு பாடல்கூட பாடியதில்லை ப்ரியங்கா. இப்போதுதான் அந்த ஆசை வந்திருக்கிறது!

படங்களில் பார்க்க முடியாவிட்டாலும், ஃபேஷன் ஷோக்களில் சமீரா ரெட்டி செம பிஸி. மும்பை, டெல்லி, பெங்களூரு என எங்கு எந்த ஃபேஷன் டிசைனர் ஷோ நடத்தினாலும், முதலில் கூப்பிடுவது சமீராவைத்தான்! ‘‘நான் சுவாசிப்பது ஆக்சிஜனை இல்லை... ஃபேஷனை!’’ என்கிறார் சமீரா.

கேத்ரினா கைஃப் மீதிருந்த கோபத்தில் சல்மான் கான் அறிமுகம் செய்த நடிகை ஜரீன் கான். முதல் படம் ஓஹோ என்று ஓடினாலும், சல்மானும் கேத்ரினாவும் ராசியான பிறகு ஜரீன் கானுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. நகத்தைக் கடித்தபடி காத்திருந்தவருக்கு இப்போது ஹாலிவுட் வாய்ப்பே கிடைத்திருக்கிறது. கேத்ரினாவுக்கு முன்பாக ஹாலிவுட் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஜரீன்.

அமெரிக்க அரசியலில், நட்சத்திரங்கள் வெளிப்படையாக தாங்கள் ஆதரிக்கும் கட்சியைப் பற்றி சொல்வது சகஜம். மடோன்னா ஒரு படி மேலே போய், அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது முதுகில் டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறார்.