முத்துக் கோலத்தில் சத்தான லாபம்





நவராத்திரியைத் தொடர்ந்து வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன பண்டிகைகள். எல்லா பண்டிகைகளிலும் கோலங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அவசர யுகத்துப் பெண்களுக்கு ஆற, அமர உட்கார்ந்து கோலம் போட இன்று ஏது நேரம்? ''ரெடிமேட் முத்துக் கோலங்கள் இருக்க எதுக்கு டென்ஷன்?’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயலட்சுமி. முத்து, குந்தன் கல் என பல பொருட்களை வைத்து இவர் தயாரிக்கிற ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு!

‘‘நிறைய கைவினைப் பொருட்கள் செய்யத் தெரியும். அன்பளிப்பா வந்த ஸ்டிக்கர் கோலம்தான், இப்படியொரு வித்தியாசமான முயற்சிக்கான ஐடியாவை கொடுத்தது. ஸ்டிக்கர் கோலத்தை தரையில ஒட்டணும். கொஞ்ச நாள்ல கிழிஞ்சு வரும். தரை வீணாகும். நான் பண்ற ரெடிமேட் கோலத்தை அப்படியே தரையில வச்சிட்டு, தேவையில்லாதப்ப எடுத்துடலாம். இயல்பிலேயே நல்லா கோலம் போடத் தெரிஞ்ச யாரும், இதை அவங்க கைப்பட செய்து உபயோகிக்கலாம். நின்னு பாராட்டாம ஒருத்தர்கூட அதைக் கடந்து போக மாட்டாங்க...’’ என்கிற ஜெயலட்சுமி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘லேமினேடட் ஷீட் (ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும்), விதம்விதமான வடிவங்களில், கலர்களில் முத்து, குந்தன் கற்கள், சமிக்கி, ஃபேப்ரிக் பெயின்ட், பசை, கத்தரிக்கோல்... 10 கோலங்கள் தயாரிக்க மொத்த முதலீடு ஆயிரம் ரூபாய்தான்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘உங்களுக்கு என்ன கோலமெல்லாம் போடத் தெரியுமோ, அத்தனையும் இதில் சாத்தியம். பூஜை அலமாரியில போடற அளவுக்கு உள்ளங்கை அளவு கோலமும் தயாரிக்கலாம். வரவேற்பறையை அலங்கரிக்கிற மெகா சைஸ் கோலமும் பண்ணலாம். ஒரு கோலத்தை பகுதி பகுதியா பிரிச்சு செய்து, பிறகு அதை அடுக்கணும். அதனால ஒரே கோலத்தை 9 விதமான வேற வேற மாடல்ல மாத்தி வைக்கலாம். எத்தனை வருஷங்களானாலும் அப்படியே இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘ஒரு கோலத்துக்கான அடக்க விலை அதோட அளவையும், டிசைனையும் பொறுத்து, 75, 100, 125 ரூபாய்னு ஆகும். அதை இரண்டு மடங்கு லாபம் வச்சு விற்கலாம். ஒரு நாளைக்கு 10 கோலம் வரை தயாரிக்கலாம். நவராத்திரிக்கு தாம்பூலத்துல வச்சுக் கொடுக்க ஆர்டர் குவியும். கல்யாணம், கிரகப்பிரவேசம்னு எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா தரலாம்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சியில 10 மாடல் கோலங்கள் கத்துக்க, கட்டணம் 500 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்