தேர்வு





வனஜா, சுமதி என்ற இரு பெண்களையும் குடும்பத்தோடு போய் பெண் பார்த்து வந்திருந்தான் மனோகர். வனஜா வனப்பாக தங்க நிறத்தில் தளதளவென்று இருந்தாள். சுமதி மாநிறத்தில் சுமாராக இருந்தாள். இருவருமே படித்தவர்கள். நடுத்தர குடும்பம். வனஜாவைப் பிடித்திருக்கிறது என்று மனோகர் தன் முடிவைச் சொல்லியும், பெண் வீட்டாருக்கு தகவல் தர தாமதித்துக் கொண்டிருந்தாள் அவன் அம்மா.

ஒரு நாள் காலையில் பெண் வீட்டாரைப் பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லிச்சென்று மாலையில் வீடு திரும்பிய அம்மா, ‘‘சுமதியையே பேசி முடிச்சுடலாம்டா’’ என்றாள் மனோகரிடம்.

‘‘ஏம்மா..?’’
‘‘அந்த இரண்டு பொண்ணுங்களோட அம்மாக்களைப் பத்தி விசாரிச்சேன். வனஜாவோட அம்மா ரொம்ப திமிர் பிடிச்சவளாம். எல்லாரையும் ஆட்டிப் படைப்பாளாம். அக்கம்பக்கத்துல எல்லாம், ‘அவளா? அப்பப்பா’ங்கறாங்க. ஆனா சுமதியோட அம்மா ரொம்ப சாந்தமாம். எல்லாரோடவும் அன்பா பழகுவாங்களாம். அழகு இன்னிக்கு இருக்கும் நாளைக்குப் போயிடும்டா. பொண்ணுங்களோட குணம்தான் முக்கியம். இத்தனை வருஷமா அடங்காப்பிடாரி அம்மாவைப் பார்த்து வளர்ந்த வனஜாவுக்கு அன்பா பழகறதுன்னா என்னன்னே தெரியாது. அதனாலதான் சுமதியை தேர்ந்தெடுத்தேன். உனக்கு சம்மதம்தானே..?’’
‘‘டபுள் ஓகே’’ என்றான் மனோகர்.