நியூஸ வே





அதிரடியாக கருத்துகளுக்குப் புகழ்பெற்றவர் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங். ‘வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார்’ என சிங்கை மீடியாக்கள் குற்றம் சாட்ட, ‘‘பராக் ஒபாமா இரண்டு முறை ஜனாதிபதி பதவி வகித்து முடிந்தபிறகு, அவரது மனைவி மிச்செல்லிக்கு அமெரிக்க அரசியலில் பிரகாசமான எதிர்காலம் உண்டு’’ என கருத்து சொல்லியிருக்கிறார் திக்விஜய் சிங். அமெரிக்காவிலும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார் என யாரும் சொல்வார்களா?

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அரசு செலவில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் போவதாக இருந்தது. ‘‘மாநிலம் கடும் வறட்சியில் தவிக்கும்போது ஆடம்பர சுற்றுப்பயணம் தேவையா?’’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்க, கடைசி நிமிடத்தில் இந்தப் பயணத்துக்கு தடை விதித்துவிட்டார் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். அதோடு ஏற்கனவே தென் அமெரிக்கா போயிருந்த எம்.எல்.ஏக்களையும் சீக்கிரம் திரும்பச் சொல்லியிருக்கிறார். குடும்பத்தோடு போன அவர்களை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள், வாய்ப்பு கிடைக்காதவர்கள்!

‘முதலமைச்சரின் தீர்த்த யாத்திரை திட்டம்’ என்ற பெயரில் முதியவர்களை தீர்த்த யாத்திரைக்கு அனுப்பும் புதிய திட்டத்தை அறிவித்தார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான். 980 பேர் சிறப்பு ரயிலில் ராமேஸ்வரம் பயணித்தார்கள். ஆனால், ‘‘மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி ஓட்டு வாங்க பி.ஜே.பி. நினைக்கிறது’’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட, இப்போது சர்வ மதத்தினருக்கும் யாத்திரைகள் ரெடி! அடுத்த பேட்ஜ்ஜில் முஸ்லிம்கள் ஆஜ்மீர் தர்காவுக்குக் கிளம்பிவிட்டார்கள்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பி.ஜே.பி. கூட்டணியில் எதிர்க்கும் முக்கியமான தலைவர் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். அவரது அமைச்சரவையில் பி.ஜே.பி. சார்பில் இருக்கும் கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தீவிர மோடி விசுவாசி. நரேந்திர மோடி ரசிகர் சங்கத்தை பீகாரில் நடத்துபவர். சமீபத்தில் மோடியின் 62வது பிறந்த நாளை 62 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார் கிரிராஜ். ‘‘எனது அமைச்சர் எனக்கு கேக் கொடுக்கவில்லை’’ என ஜோக் அடித்து குறைப்பட்டுக் கொண்டார் நிதீஷ் குமார்.

கடந்த 2004ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஆந்திரா முழுக்க 1470 கி.மீ. தூரத்துக்கு பாதயாத்திரை போனார் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அந்த யாத்திரைதான், காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முக்கியமான காரணமானது. இப்போது அதே ஸ்டைலில் இறங்கியிருக்கிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. வரும் 2014 ஆண்டுக்கு முன்பாகவே தேர்தல் வந்துவிடும் எனக் கருதி, வரும் அக்டோபர் 2ம் தேதி பாதயாத்திரை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க 2320 கி.மீ. தூரத்துக்கு நடைபயணம் போவதாகத் திட்டம்.

ஜனாதிபதி மாளிகையில் ஒரு பழமையான நூலகம் இருக்கிறது. இதில் 15 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் வைசிராய்கள் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நூல்கள் இவை. சில நூல்கள் வெகு அரிதானவை. வாசிப்பதில் தீவிர ஆர்வம் உள்ளவரான புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்த நூலகத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாததால், தூசு படிந்து கிடந்தது. உடனடியாக இதை சீரமைக்கச் சொல்லியிருக்கிறார் பிரணாப்.