அக்கரைப் பச்சை





ரஞ்சிதாவின் வீட்டைக் கடந்து போகும்போது வேணியும், பரிமளாவும் ஏக்கப் பார்வையைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

‘‘ஹும்... ரஞ்சிதா குடுத்து வச்சவ! நம்மள மாதிரி செருப்புத் தேயத் தேய, மண்டை காய வெயில்ல அலைய வேண்டாம். மார்க்கெட் நெரிசல்ல இடிபட வேண்டாம். வெண்டைக்காயை உடைச்சுப் பார்க்குறப்ப கடைக்காரனோட எரிச்சல் பார்வையை மீட் பண்ண வேண்டாம். தொண்டைத் தண்ணி வத்த பேரம் பேச வேண்டியதில்ல. மகாராணியோட வீட்டுக்கே புதுசா, இளசா காய்களைக் கொண்டாந்து அவ புருஷன் போட்டுருவாரு. நாமதான் இப்படி கூடையைத் தூக்கிட்டு அலையிறோம்’’ என்றாள் பரிமளம் அலுப்பாக.

‘‘அவ புருஷன் புதுசா காய்கறிக் கடை போட்டுட்டாருல்ல. இனி, காய்கறி வாங்க நம்ம கூட அலையிற வேலை அவளுக்கு மிச்சம்!’’ என்றாள் வேணி.

யதேச்சையாக வாசல் பக்கம் வந்த ரஞ்சிதா, தன் தோழிகள் இருவரும் காய்கறி மார்க்கெட்டுக்குப் போவதைப் பார்த்தாள். ஏக்கம் வந்து இதயத்தை நிரப்பியது.

‘‘ஹும்... அவங்கள்லாம் ஜாலியா போயி புதுசா, இளசா காய் வாங்கிட்டு வந்து சமைப்பாங்க. என் வீட்டுக்காரர் கடையில விக்காம நிக்கற, முத்திப் போன காயை எல்லாம் அள்ளிட்டு வந்து, ‘இதுல நல்லதா பார்த்து எடுத்து சமையல் பண்ணு’ன்னு உயிரை இல்ல வாங்குறாரு!’’ என்றிருந்தது ரஞ்சிதாவின் புலம்பல்.