கள்ளிக்காட்டு காதல்கள்





பச்சைக் கொழிசலும் ஆத்துத் தண்ணியுமா எப்பவும் இருந்த பூமி அகப்ப நாடு. என்ன குத்தமோ, இப்போ ஒரு பச்சைப் பொட்டுக்கூட இல்லாம தீஞ்சி, தெருவோடிக் கிடந்துச்சு. எங்கயும் அனல் காத்து. இனியும் இந்த ஊருல இருந்தா செத்துப் போயிருவோம்னு ஊர்க்காரங்க எல்லாரும் செழிச்ச நாடு பாத்து பஞ்சம் பிழைக்கப் போனாங்க. அப்ப அந்த ஊர்ல இருந்த மாடப்பனும், அவன் பொண்டாட்டி மாடியும் தெக்க இருந்த ஊய்ங்காட்டுக்கு வந்தாக.

மாடப்பன் கட்டு முட்டும் கடா மீசையுமா ஆளு பலசாலியா இருப்பான். அவனோட இரும்பு ஒடம்பப் பார்த்து அசந்துபோன ஜமீன்தாரு, மாடப்பனை தன்னோட வாழைத் தோட்டத்துக்கு ராக்காவக்காரனா போட்டாரு. மாடப்பனும் இருட்டுன பெறவு தோப்புக்கு ஒரு கம்போட போறவன்தான்... விடிய விடிய கண்ணை பொட்டுன்னு போடாம அப்படி காவல் காப்பான். மாடப்பனை காவக்காரனா போட்ட பிறகு ஒரு சின்ன துரும்புகூட களவு போகல. அதனால ஜமீன்தாருக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். அவன் குடும்பத்துக்கு வேணுங்கிறதை கொடுத்து, அவனை நல்லா கவனிச்சிக்கிட்டாரு.
மாடப்பனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பேரு முத்தையா. அவனும் அப்பனைப் போலவே ஓங்கும், தாங்குமா, திருக்கா மீசையுமா புதுசா செஞ்ச கருக்கருவா மாதிரி அவ்வளவு அம்சமா இருந்தான். பதினஞ்சி வயசுல இருந்தே அவனையும் தன்கூட காவலுக்கு கூட்டிட்டுப் போனான் மாடப்பன். அவனுக்கு கம்புச்சண்டை, பிடிவர்மம், கல்வச்சி கவண் அடிக்கிறதுன்னு தனக்குத் தெரிஞ்ச எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தான். முத்தையா எல்லாத்தையும் கத்துக்கிட்டு, அப்பனையும் மிஞ்சின கெட்டிக்காரனாவும் வீரனாவும் வளர்ந்தான்.

மாடப்பனுக்கு இப்ப வயசாயிருச்சி. முன்னால மாதிரி ராத்திரி முழுக்க முழிச்சிருந்து, தோப்பு எல்லை மொத்தமும் சுத்தி வர முடியல. அதனால மகனைக் கூப்பிட்டு அவன் கிட்ட தன்னோட காவல் வேலையை ஒப்படைச்சிட்டான். இவன் ஊர்க்கதை பேசவும் சீக்கிரமாப் படுத்து தூங்கவுமா இருந்தான்.

முத்தையாதான் இப்ப மொத்தக் காவலும். ஒரு நாளு இவன் வாழைத்தோப்பச் சுத்தி யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கிட்டு வந்தான். அப்ப ஒரு மரத்துல கொஞ்ச நேரத்துக்கு முந்திப் பாத்துட்டுப் போன ஒரு பெரிய வாழைக் குலையக் காணோம். வீராதி வீரனாயிருந்த முத்தையாவுக்கு ஆச்சரியமாப் போச்சு. ‘என்னடா இது... முழிச்சிருக்கும்போதே, முழியப் பிடுங்கின மாதிரி இப்படி இப்படி ஒரு களவா? யார் செஞ்ச வேலையா இருக்கும் இது’ன்னு தோப்பச் சுத்தி சுத்தி வந்தான்.

அப்ப தோப்பு வேலியத் தாண்டி ஒரு பொண்ணு வாழைக் கொலையோட போறத முத்தையா பாத்துட்டான். அவனுக்கு கோபமின்னா இந்த மட்டு இல்ல; கண்ணெல்லாம் சிவக்குது. கடுங்கோவமாவுது. உச்சி எரியுது. உள்ளமெல்லாம் கொதிக்குது.

வேகமா எகிறி வந்தவன், வேலியத் தாண்டிப் போய் அந்தப் பொண்ணு முன்னால போயி நின்னான். அவ முகத்தப் பாத்தான்... அவ்வளவுதான்! நெருப்பா போனவன் பனியா உருகி நின்னான். அவ அப்படி ஒரு அழகு.

வேலிக்கு வெளியில தலைநீட்டி நிக்கற வாழை மாதிரி கொத்தும் கொலயுமா அங்க நின்னவ பேரு வீராயி. கனிஞ்ச பூவம்பழம் போல தங்க நிறம், வாழைத்தண்டா உடம்பு... மொத்தத்துல இளம்வாழைக் குருத்து போல கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியா இருந்தா வீராயி. பின் கொசுவம் வச்சு உடுத்தியிருந்த சேலையோட முந்தானிய எடுத்து சும்மாடு கூட்டி, தலையில வாழைத் தாரை வச்சிருக்கா.

முத்தையா அவளைப் பாத்தது பாத்தமேனிக்கே இருந்தான். வீராயியும் ரொம்ப நேரமா அவனோட கருத்த உடம்பையும், சின்னதா திருகி விட்டிருக்க மீசையையும், திரண்டு புடைச்சிருந்த தோளையும் பார்த்துக்கிட்டே இருந்தா. நிலவு வெளிச்சம் அவுக காலடியில கறந்த பாலா கொட்டிக் கிடக்கு. எங்கிருந்தோ ஒரு குயில் சந்தோஷமா கூவுச்சு. அதக் கேட்டதும்தான் அவளுக்கு இந்த உலக நெனப்பு வந்துச்சு.

சட்டுன்னு பதறி, ‘‘அய்யோ! நானு போவ ணும். என் ஆத்தாவும், அய்யாவும் தேடுவாக’’ன்னு சொன்னா. ஆனால் காலு நகரல. முத்தையாவும் அவளுக்கு வழிவிடல. ரெண்டு பேருக்கும் பிரியவே மனசில்ல.



‘‘நாளைக்கும் வா... உனக்கு நானே வாழைத்தாரை வெட்டித் தாறேன்’’னு முத்தையா சொன்னான். அவளும் சிரிச்சிக்கிட்டே தலையை அசைச்சிக்கிட்டு போனா. களவு காக்க வேண்டியவனே களவு கொடுத்துட்டு நின்னான்.

மறுநாளு வீராயி வந்தா. ‘‘எனக்கு வாழைப்பழம்னா ரொம்ப பிடிக்கும்’’னு அவ கொஞ்சலோட சொல்லிக்கிட்டே அவனைப் பார்க்க, அவன் கிறங்கிப் போயிட்டான். ரெண்டு பேரும் தினமும் சந்திச்சாக... இப்படியா தினமும் வாழைத்தார் களவுபோச்சு.

இந்த விஷயம் எப்படியோ ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போச்சி. அவரு மாடப்பனைக் கூப்பிட்டு, ‘‘என்ன மாடப்பா? உன் பொறுப்புல இருக்குற வாழைத்தோப்புல களவு போய்ட்டு இருக்காமே... என்ன விஷயம்? அப்ப உன்னைவிட கெட்டிக்காரன் இந்த ஊருல இருக்கானா? நீ அவன கண்டுபிடிச்சிரு. ஆனா, உன்னை அடையாளம் காட்டாதே. அவன் உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னால அவன் முகத்தை சாக்கால மூடி, வெட்டுப்பாறைக்கு கொண்டு போயி ஒரே வெட்டா வெட்டிரு. உனக்கு அஞ்சு தங்கக்காசு தாரேன். ஏன்னா உன்னைவிட கெட்டிக்காரன் இந்த ஊருலயே இருக்கக்கூடாது’’ன்னு சொன்னாரு.

மாடப்பனும், ‘‘சரி எசமான்’’னு சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து மகன்கிட்ட விஷயத்தைச் சொன்னான். உடனே முத்தையா வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சான். ‘‘நம்மளையும் மிஞ்சுனவன் இந்த ஊருலயே இருக்கக் கூடாதுய்யா. அவன நானு பாத்தாலும் சரி... நீரு பாத்தாலும் சரி... ஒரே வெட்டா வெட்டிப் போடணும்’’னு சொன்னான்.

அன்னைக்கு வெள்ளிக்கிழமை. வீராயி மஞ்சப் பூக்கக் குளிச்சி, தலை நிறைய பிச்சிப்பூ வச்சி, சுங்கடி சீலையில அரிசிக் கொசுவம் (காதலன் மேல் பிரியம் இருப்பதைக் காட்ட அரிசிக் கொசுவம்!) போட்டு உடுத்திக்கிட்டு வாழைத் தோப்புக்கு வந்தா. என்னைக்கும் போல ரெண்டு பேரும் ‘பேசிப் பழகி’ இருந்தாக. ஒரு சாமம் ஆயிடுச்சி. பௌர்ணமிக்கு பிந்திய நிலா மேற்கே சாஞ்சிருச்சி. வீராயி தலையில வாழைத்தாரை சும்மாடு ஏத்திட்டு, முத்தையா காவலுக்குக் கிளம்பினான்.

தூரத்துல வேலிப் புதர்ல இருந்து இதை மாடப்பனும் அவன் கூட்டிட்டு வந்த ஆளுகளும் பார்த்தாக. ஆனாலும் மகன்னு அடையாளம் கண்டுக்கிடுற அளவுக்கு இருட்டுல அவன் முகம் தெரியல. முத்தையா பக்கத்துல வந்ததும் ‘உய்ய்’ன்னு ஒரு விசில் குடுத்த மாடப்பன், திடீர்னு ஒரு சாக்க எடுத்து முத்தையா முகத்துல மூடினான். அவன் கூட வந்த ஆளுக எல்லாம் முத்தையாவ திமிர விடாம புடிச்சிக்கிட்டாக.

விடிஞ்சும் விடியாத கருக்கல். முத்தையாவ வெட்டுப்பாறையில கொண்டு வந்து போட்டுருக்காங்க. இன்னும் முகத்தை யாரும் அடையாளம் பாக்கல. களவாங்குனவனை வெட்டச் சொல்லி ஜமீன்தார் உத்தரவு போட்டாரு. மாடப்பன் கூட இருக்கவுகளும் வெட்டச் சொன்னாக. ஆனா, அரிவாள தூக்குன மாடப்பனுக்கு கை எல்லாம் நடுங்குது. ‘‘எதுக்கும் எம்மவன் வரட்டுமே... அவன வெட்டச் சொல்லுதேன்’’னு ஜமீன்தார்கிட்ட சொல்றான். ‘‘உனக்குத்தான் நான் காவல் வேலை கொடுத்தேன். நீயே வெட்டு’’ன்னாரு அவரு.

பக்கத்துல இருக்கவங்களும், ‘‘என்னப்பா... அஞ்சு தங்கக்காசு கிடைக்கும்போது வெட்ட யோசிக்கிறே..?’’ன்னு சொல்ல, மாடப்பன் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரே வெட்டா வெட்டினான். சாக்கையும் விட்டுட்டு தலை தனியா உருண்டு போயி விழுந்துச்சு.

மகன் தலையப் பாத்த மாடப்பன், ‘‘ஐயோ... என் மகனையா நான் கொல செஞ்சேன்?’’னு துடியா துடிச்சான். ‘பெத்த மவனக் கொன்னவன் கூட இனி நான் வாழவா’ன்னு அவன் பொண்டாட்டி பாழுங் கிணத்தில விழுந்து செத்துப் போனா. ‘இனி நான் யாருக்காக வாழணும்’னு மாடப்பனும் சுருக்குல தொங்கிட்டாரு. முத்தையா செத்ததக் கேள்விப்பட்டதுமே, வீராயி அரளி விதைய அரச்சிக் குடிச்சிட்டா. அந்த ஊருல இப்ப முத்தையாவுக்கு கோயில் கட்டி கும்பிட்டுட்டு வாராக.