ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்தத் துயரத்துக்கும் காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இம்மாதம் 21ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வருகிறார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், தனது தொகுதியில் நிறுவும் புத்தமத கல்வி மையத¢தின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார் அவர். எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள தமிழர்களால் ஓட ஓட விரட்டப்படும் ராஜபக்ஷேவுக்கு, மத்திய அரசைப் போலவே பாரதிய ஜனதாவும் சிவப்புக் கம்பளம் விரிப்பது தமிழர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. இதுபற்றி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணனும், பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனும் விவாதிக்கிறார்கள்.
கோவை ராமகிருஷ்ணன்:
தமிழர்கள் விஷயத்தில் எல்லா தேசியக் கட்சிகளும் ஒரே மன
நிலையைத்தான் கொண்டுள்ளன. ராணுவ உதவி, பொருளாதார உதவி, ஆயுத உதவி செய்து ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க காங்கிரஸ் துணை போனது என்றால், பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருத்தியல் ரீதியாக அந்தக் கொடுமையை நியாயப்படுத்தி துணைபோகிறார்கள். இந்துமதத்தை மூலதனமாக்கி அரசியல் செய்யும் பாரதிய ஜனதா, ஈழத்திலே கதறக் கதறக் கொல்லப்பட்ட தமிழர்களும் இந்துக்கள்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டு ராஜபக்ஷேவை கொண்டாடி வரவேற்கிறது. ஈழத்தில் இருக்கும் இந்துக்கோயில்களை எல்லாம் சிதைத்து, புத்த விகாரைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார் ராஜபக்ஷே. பாரதிய ஜனதா அவரை புத்தர் பிறந்த மண்ணுக்கே அழைத்துப் பெருமைப்படுத்துகிறது.
‘இந்து... இந்து...’ என்று கூறி மக்களை ஏமாற்றிய பாரதிய ஜனதாவின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. தமிழர்கள் என்று வரும்போது, அவர்கள் இந்துக்களாகவே இருந்தாலும் சிங்களர்களுக்கே ஆதரவு என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. தமிழர்கள் இந்த நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்து விடக்கூடாது என்பதில் தேசியக் கட்சிகள் தெளி வாக இருக்கின்றன. இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சி அளிக்கிறார்கள். முதல்வரே எதிர்த்தபிறகும் அவர்களை வெளியேற்ற மறுக்கிறது காங்கிரஸ் அரசு. ‘பயிற்சி அளித்தே தீருவோம்’ என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். நிலக்கரி ஊழலுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இலங்கை ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழக எம்.பி.க்களின் குரலோடு இணைய மறுக்கிறார்கள். அங்கே தமிழன் தவிக்கும்போது, தமிழ் நாட்டுக்கு சிங்களர்கள் இன்பச் சுற்றுலா வருகிறார்கள். அதை நாங்கள் எதிர்த்தால், கம்யூனிஸ்ட்கள் கண்டிக்கிறார்கள்.
இல.கணேசன்:
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு அழைத்தது, மத்தியப் பிரதேச மாநில அரசோ, பாரதிய ஜனதா கட்சியோ அல்ல. ஒரு மாநில அரசு எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரையும் தங்கள் மாநிலத்துக்கு வரும்படி சுயமாக அழைக்கமுடியாது. எல்லாவற்றையும் தீர்மானிப்பது மத்திய அரசுதான். ராஜபக்ஷேவை அழைக்க முடிவெடுத்தது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பௌத்த மதத் தலைவர்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியது மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசுதான். அந்த பௌத்த விகாரை எங்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜின் தொகுதியில் இருக்கிறது. அந்த வகையில் அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மற்றபடி பாரதிய ஜனதாவுக்கோ, மத்தியப் பிரதேச மாநில அரசுக்கோ ராஜபக்ஷேவை அழைத்ததில் எந்தத் தொடர்பும் இல்லை.
சில சமயம் தலைவர்கள் வந்து போகும் செய்தியைக் கூட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவிப்பதில்லை. பாரதிய ஜனதா தமிழர்களுக்கு விரோதமான கட்சியல்ல. எந்தச் சூழலிலும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாரத நாட்டின் எந்தப்பகுதியிலும் இலங்கை அரசையோ, ராணுவத்தையோ பலப்படுத்தும் வகையில் ராணுவப் பயிற்சிகள் அளிக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை. இலங்கைக்குத் தரப்படும் பண உதவி, ராணுவ உதவி, ஆயுத உதவி அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்படும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. பாரதிய ஜனதா கட்சியை தமிழர் விரோதக் கட்சியாக சித்தரிக்க நடக்கும் முயற்சிகள் எடுபடாது. அதே நேரத்தில், வழிபாட்டு நோக்கத்தில் தமிழகத்துக்கு வரும் சிங்களப் பயணிகளைத் தாக்குவது, போராட்டம் நடத்துவதெல்லாம் மோசமான செயல். இது கலாசாரப் பரிவர்த்தனையை பாதிக்கும்.
- வெ.நீலகண்டன்