எரியும் குடிசைகள்... ஏழைகளை வெளியேற்ற சாத்தியமா?





அந்தக் காட்சியைப் பார்க்கும் அத்தனை இதயங்களும் நொறுங்கிவிடும். கருகிய பாடப் புத்தகங்களைப் பார்த்து கலங்கும் குழந்தைகள், சான்றிதழ்களை இழந்த இளைஞர்கள், சிறுகச்சிறுக சேர்த்த பொருட்களைப் பறிகொடுத்துக் கதறிய பெண்கள்... கொஞ்சமும் குற்ற உணர்வில்லாமல் தின்று தீர்த்துவிட்டது நெருப்பு. பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசைப்பகுதியில் பிடித்த தீ, நூற்றுக்கணக்கான குடும்பங்களின் ஒட்டுமொத்த ஆஸ்தியையும் அழித்ததோடு அல்லாமல் ஒருவரின் உயிரையும் குடித்துவிட்டது. சென்னையின் குடிசைப் பகுதிகளை விடாமல் துரத்துகிறது நெருப்பு. மாற்றுத்துணி இல்லாமலும், ஒதுங்க நிழலில்லாமலும் குழந்தை, குட்டிகளோடு அல்லாடுகிற மக்களின் துயரம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.  

அடுக்குமாடிகளும் குளுகுளு அலுவலக கோபுரங்களுமாக முகமூடி தரித்துக் கொண்டிருக்கும் சென்னையின் பூர்வீகக்குடிகள்தான் இந்த குடிசைவாசிகள். சென்னை வண்ணம் பூசிக்கொள்ளாத காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள். இன்று சென்னையின் பளபளக்கிற கட்டிடங்கள் பலவும் இவர்களது ரத்தத்திலும் வியர்வையிலும் குழைத்துக் கட்டப்பட்டவை. நகரத்தை வளர்த்தவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவில்லை. பிளாட்பாரங்களிலும், கூவக்கரைக் குடிசைகளிலுமே சுருங்கிப்போனார்கள்.

பூ கட்டி விற்றும், மீன் விற்றும், கட்டிட வேலை, பங்களா வேலை செய்தும் பெண்கள் குடும்பத்தை நகர்த்த, மூட்டை தூக்கியும், ரிக்ஷா இழுத்தும் முதுகு வளைந்தார்கள் ஆண்கள். நகரத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட இம்மக்களின் வாழ்க்கை நான்கைந்து தலைமுறைகள் தாண்டியும் மாறவில்லை. இவர்களை அழுக்குகளாகக் கருதும் அரசுகள், நகரத்துக்கு வெளியே கண்ணகி நகருக்கும், செம்மஞ்சேரிக்கும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அதிதீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் இப்படி தீ துரத்துகிறது.

‘‘எப்போதாவது ஒருமுறை தீப்பற்றி எரிந்தால் அது விபத்து. கடந்த ஒன்றரை வருடத்தில் புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, ஐ.சி.எப், எண்ணூர், பெரியமேடு, கிரீம்ஸ் ரோடு, அசோக் நகர், பட்டினப்பாக்கம் என 12 குடிசைப்பகுதிகள் எரிந்துள்ளன. ஒரேபகுதியில் இரண்டு, மூன்று முறையெல்லாம் தீ பிடிக்கிறது. பட்டினப்பாக்கத்தில் முதல்நாள் 50 குடிசைகள் எரிகிறது. மறுநாளே மீண்டும் தீப்பற்றுகிறது. எங்கெல்லாம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமானங்கள், வளர்ச்சித்திட்டங்கள் தொடங்கப்படுகிறதோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் குடிசைகள் தீப்பற்றுகின்றன. இதன் பின்னணியை தீவிரமாக ஆராயவேண்டும்...’’ என்று குமுறுகிறார், குடிசைவாழ் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் இசையரசு.



‘‘தங்கள் இடையறாத உழைப்பால் இந்த நகரத்தை கட்டமைத்த குடிசைப்பகுதி மக்களை, அரசே நகரத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறது. இவர்கள் அனைவருமே அன்றாடம் காய்ச்சிகள். இன்றைக்கு உழைத்தால்தான் நாளைய பொழுது நகரும். பேருந்து நிலையங்களையும், மார்க்கெட்டு களையும் நம்பிப் பிழைப்பவர்கள். இவர்களை கண்ணகி நகரிலும், செம்மஞ்சேரியிலும், வெள்ளவேட்டிலும் குடியமர்த்த முனைகிறது அரசு. கண்ணகி நகரில் 17ஆயிரம் வீடுகளும், செம்மஞ்சேரியில் 22,420 வீடுகளும் கட்டப்படுகின்றன. அந்த வீடுகள் தேவையில்லை என்றால் பெருங்களத்தூரைத் தாண்டி ஒரு பொட்டல்காட்டில் 1 சென்ட் நிலம் கொடுக்கிறார்கள், ‘வீடு கட்டிக் கொண்டு தொலைந்து போ’ என்று. 90 சதவீதம் பெண்கள் நகரத்துக்குள் உள்ள பங்களாக்களில் வீட்டு வேலை செய்கிறார்கள். அங்கே மிஞ்சுகிற உணவை தாங்களும் சாப்பிட்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் கொடுப்பார்கள். இப்படித்தான் அவர்களின் வாழ்க்கை ஓடுகிறது. கண்ணகி நகரில் இருந்து அவர்கள் நகரத்துக்குள் வரவே 3 மணி நேரமாகும். பேருந்துக்கு மட்டுமே 50 ரூபாய் செலவு செய்தால் வேறென்ன மிஞ்சும்..? பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்? முள்வேலி இல்லாத முகாம்களாகத்தான் அந்த வீடுகள் இருக்கின்றன.

இம்மக்களை வெளியேற்ற முனையும் அரசு, அவர்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்கவேயில்லை. எங்கிருந்தோ வருபவர்கள் ஷாப்பிங் மால்கள் கட்டவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்டவும் இங்கே இடம் இருக்கிறது. பூர்வீகக் குடிகளுக்கு இடமில்லை. இது அரசே முன்னெடுக்கிற தீண்டாமை. இப்படி நகருக்கு வெளியே வீடு வழங்குவதையே அரசியல் தலைவர்கள் சலுகையாகத்தான் பார்க்கிறார்களே ஒழிய உண்மையான நிலையைப் புரிந்துகொள்வதில்லை’’ என்று வருந்துகிறார் இசையரசு.

‘குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தை’ச் சேர்ந்த அ.மார்க்ஸும் தொடரும் தீ விபத்துகள் பற்றி சந்தேகம் கிளப்புகிறார். ‘‘குடிசைப்பகுதி மக்களை வெளியேறும்படி எச்சரிப்பதும், திடீரென வீடுகளில் தீப்பற்றுவதும் தொடர்ந்து நடக்கிறது. 1971ம் ஆண்டு போடப்பட்ட குடிசைமாற்று வாரியச் சட்டப்படி அனைத்துக் குடிசைப்பகுதிகளையும் அரசு அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரித்தால்தான் அவர்களின் நலனுக்கான திட்டங்களைத் தீட்டமுடியும். ஆனால், கடந்த 27 வருடங்களில் எந்தக் குடிசைப்பகுதியையும் அங்கீகரிக்கவில்லை. மின் இணைப்பு இருக்கிறது, தண்ணீர் இணைப்பு கொடுக்கிறார்கள். ரேஷன் கார்டு தரப்படுகிறது. ஆனால் அப்படியொரு குடிசைப்பகுதி இருப்பதாக அரசிடம் எந்த டாக்குமென்ட்டும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்களாகவும், கரன்ட் திருடும் குற்றவாளிகளாகவுமே இம்மக்களை வைத்துக் கொள்ள விரும்புகிறது அரசு...’’ என்று குற்றம் சாட்டுகிறார் அவர்.

‘நகரத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இம்மக்களுக்கு நகரத்திலேயே வீடுகள் கட்டிக்கொடுத்தால் என்ன?’ என அதிகாரிகளிடம் கேட்டால், ‘நகருக்குள் இடம் எங்கே இருக்கிறது?’ என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், இது அப்பட்டமான பொய் என்கிறார் ‘பாடம்’ நாராயணன். குடிசைப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக வழக்கு நடத்திவரும் இவர், தகவல் உரிமைச்சட்டப்படி பெற்ற விபரங்களை ஆதாரமாக அடுக்குகிறார்.

‘‘சென்னை நகரப் பரப்பளவில் குடிசைப்பகுதி என்பது வெறும் 1 சதவீதம்தான். 1978ல் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டப்படி அரசு கையகப்படுத்திய 1500 ஏக்கர் நிலம், சென்னை நகருக்குள்ளேயே இருக்கிறது. இது அரசே கொடுத்திருக்கிற புள்ளிவிபரம். அந்த இடங்களில் பல லட்சம் வீடு கட்டலாம். ஆனால், நகருக்குள் உள்ள நிலங்களை ‘கோடி’களாகப் பார்க்கிறார்கள். தேசிய வீட்டுவசதிக் கொள்கை, ராஜீவ் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டக் கொள்கை என அனைத்து கொள்கைகளும் நகர்ப்புற ஏழைகளுக்கு நகருக்குள்ளேயே வீடு கட்டித் தர வலியுறுத்துகின்றன. ஆனால் அதெல்லாம் வெறும் ஏட்டளவில்தான்.


குடிசைகளில் குடியிருப்பவர்கள் இன்றோ, நேற்றோ வந்தவர்கள் அல்ல. நான்கைந்து தலைமுறையாக இந்த மண்ணில் வசிப்பவர்கள். நகரத்துக்குள் குடியிருக்க அவர்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது. மூர் மார்க்கெட் இடிக்கப்பட்ட காலத்திலிருந்து இவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்த தீ சம்பவங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார் அவர்.

கனிமக் கொள்ளைக்காக பழங்குடி மக்களை வனத்தை விட்டு விரட்டுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களுக்காக பூர்வீகக்குடிகளை நகரத்தை விட்டு விரட்டுவதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு எங்கோ துரத்தினால், அந்த இடம் அவர்களுக்கு அகதிகள் முகாமாகத்தான் இருக்கும்!
- வெ.நீலகண்டன்