நிழல்கள் நடந்த பாதைகள்




திசை மாறிய திருமணங்கள்

சமீபத்தில் இரண்டு தொலைக்காட்சிகளிலிருந்து நேரலையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு தொலைபேசி அழைப்புகள். ஆடம்பரத் திருமணங்கள் பற்றி கருத்து கேட்க ஓர் அழைப்பு. தமிழகத்தில் பெருகிவரும் விவாகரத்துகள் பற்றி கேட்க இன்னொரு அழைப்பு. குழம்பிப் போனேன்.

கருத்துக்கள் சொல்பவராக உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டால், எப்போதும் எல்லாவற்றையும் பற்றி கருத்துக்களை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். சிந்திப்பது சிலருடைய பொறுப்பாக மாற்றப்பட்டு, மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் நமது காலகட்டத்தின் வினோதம். இந்த ஊடக வெளிச்ச யுகத்தில், யார் வேண்டுமானாலும் ஒரு வல்லுனராக எந்தத் துறையிலும் சில நிமிடங்கள் ஜொலிக்க முடியும். நான் இந்த இரண்டு கேள்விகளுக்கும் அந்த நிமிடம் எனக்குத் தோன்றிய பதில்களைச் சொன்னேன். ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பேசி முடித்ததும்தான் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவேன்.

திருமணமாகட்டும், விவாகரத்தாகட்டும்... ஒரு குடும்பத்தின் நிகழ்வு என்பதைத் தாண்டி, ஒரு சமூக நிகழ்வு என்ற  இடத்திற்கு வந்து எவ்வளவோ காலமாகிறது. இவை சிக்கலான கலாசார மாற்றத்தின், பொருளாதார மாற்றத்தின் அடையாளங்கள். அவை உருவாக்கும் சிக்கல்களை ஏதேனும் ஒரு புள்ளியில் வைத்து ஆராய்வது சாத்தியமே அல்ல.
மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் ‘அது அந்தக் காலம்’ என்ற புத்தகத்தில் 1940களில் திருமணங்கள் எப்படி நடந்தன என்று விரிவாக விவரித்திருப்பார். ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு நான் கண்ட திருமணங்களையே இப்போது ‘அது அந்தக் காலம்’ என்று சொல்ல வேண்டிய அளவுக்கு விஷயங்கள் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.
அப்போதெல்லாம் வாழைமரமும் மாலையும் சந்தனமும்தான் திருமணத்தின் அடையாளங்கள். வீடுகளில் உள்ளவர் களே விருந்தினர்களுக்கு சமைப்பார்கள். கல்யாண வீட்டுக்காரர்களே பரிமாறுவார்கள். கொஞ்சம் பெரிய கல்யாணங்களுக்கு உள்ளூர் சமையல்காரர்கள் அழைக்கப்படுவார்கள். பெரும்பாலான கல்யாணங்கள் வீடுகளில் அல்லது வழிபாட்டுத் தலங்களில்தான் நடக்கும். குடும்பம் சார்ந்த மரபுகளும், சம்பிரதாயங்களும், அன்னியோன்னியமும், சண்டை சச்சரவுகளும்தான் அவற்றின் ஆதாரமாக இருந்தன.
90களுக்குப் பின்னர் கல்யாண வீடுகளுக்குள் வீடியோகாரர்கள் வந்தார்கள்; ஆர்கெஸ்ட்ரா ஆட்கள் வந்தார்கள்; கேட்டரிங் சர்வீஸ் ஆட்கள் வந்தார்கள்; அலங்கார நிபுணர்கள் வந்தார்கள்; மேடை அலங்காரம் செய்பவர்கள் வந்தார்கள். திருமணங்கள் வீடுகள், கோயில்களை விட்டு கல்யாண மண்டபங்களுக்கு இடம் பெயர்ந்தன. கல்யாண மண்டபம் கிடைக்கும் தேதிகளை ஒட்டி, ஒரு ஆண்டிற்கு முன்பே திருமண முகூர்த்தம் நிச்சயிக்கும் முறை வந்தது. பேனர்கள், போஸ்டர்களில் அரசியல் தலைவர்களுக்கு இணையாக மணமக்கள் சிரித்தார்கள்; அல்லது அரசியல் தலைவர்களோடு சிரித்தார்கள். கல்யாணம் தவிர வரவேற்பு என்ற இன்னொரு பகுதி திருமணத்தில் சேர்ந்துகொண்டது. ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பட்டாசு வெடிக்கும் பழக்கம் வந்தது. மாப்பிள்ளையின் நண்பர்கள் இரவெல்லாம் குடிப்பது ஒரு சடங்காகச் சேர்ந்துகொண்டது.

சாதி, மதப் பண்பாடுகளை மீண்டும் உறுதி செய்யும் ஒரு சடங்காக நிகழும் நமது திருமணங்கள், மறுபுறம் ஒரு பொதுப் பண்பாட்டிற்குள்ளும் எப்படித் தம்மைப் பொருத்திக்கொள்கின்றன என்பதுதான் நான் மேற்சொன்ன உதாரணங்கள். ஆனால் இந்தப் பொதுப் பண்பாடு, திருமணங்களை ஒரு ஆபத்தான மரண விளையாட்டாக மாற்றிவிட்டது. போலி கவுரவங்களும் போலி அடையாளங்களும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும்தான் இந்த பொதுப் பண்பாட்டின் குணம். ஒரு திருமணம் என்பது ஒரு குடும்பத்தை எப்படி நிரந்தர ஓட்டாண்டியாக்கும் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். சகோதரிகளின் திருமணக் கடனை அடைக்க நாற்பது வயதுவரை திருமணம் செய்துகொள்ளாத சகோதரர்களை எனக்குத் தெரியும். ஊடகங்களும் அவை உருவாக்கும் பண்பாட்டு மாயைகளும்தான் திருமணங்களை மிகப்பெரிய சுமையாக மாற்றிவிட்டன.  

இப்போது எளிய, ஆடம்பரமில்லாத திருமணங்கள் உயிரோடு இருப்பது... ஓடிப்போய் திருமணம் செய்துகொள்பவர்களிடம் மட்டுமே. திருமணங்களின் நிறம் மாறியதுபோல விவாகரத்துகளின் நிறமும் மாறிவிட்டது. பெருகிவரும் விவாகரத்துகள் பற்றி கவலையும் பயமும் அடையும் சமூகக் காவலர்கள், அவற்றைச் சீரழிவின் அடையாளமாக பார்க்கிறார்கள். நமது குடும்ப அமைப்பில் திருமணம் என்பது பெரும்பாலும் ஒருவருக்கு விதிக்கப்படும் ஆயுள் தண்டனையாகவே இருக்கிறது. திருமணம் என்ற தளையை விட்டு வெளியே வரும் பெண்கள், கலாசாரரீதியாக கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் குடும்ப வன்முறையின் கொடிய நிழல் நமது பெண்களை நடைப்பிணமாகவே மாற்றிவிட்டது. கோடிக்கணக்கான பெண்கள் இவ்வாறு திருமணம் என்ற சட்டகத்திற்குள் பலியிடப்பட்டிருக்கிறார்கள். கல்வியும் பொருளாதார சுதந்திரமும், ‘இனியும் நமது திருமணங்கள் அதிகார அமைப்பின் தொடர்ச்சியாகச் செயல்படமுடியாது’ என்பதை உணர்த்தியதன் விளைவுதான் விவாகரத்துகள். திருமணத்தின்மீது மாட்டப்பட்டிருந்த போலி புனித முகமூடி கழன்று விழும் நேரம் இது. ‘ஆண்களும் பெண்களும் தங்கள் அதிகார பந்தயத்தை விட்டுவிட்டு நண்பர்களாக இருந்தால் மட்டுமே இனி திருமணங்கள் நீடிக்க முடியும்’ என்பதையே இந்த விவாகரத்துகள் காட்டுகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும், எனது நண்பர்கள் யாராவது விவாகரத்தை முன்மொழியும்போது மனம் சட்டென வாடி விடுகிறது. பெரிய நம்பிக்கையுடன் துவங்கிய ஒரு உறவு முறிந்துபோகிறது என்பது புரிந்துகொள்ளக் கடினமான உண்மை. மனிதர்கள் விசித்திரமானவர்கள்; எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் விசித்திரமானவை. விவாகரத்து செய்துகொள்ளும் ஒவ்வொருவரும், மூச்சுவிட கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் போதும் என்பதற்குமேல் வேறெதையும் நினைப்பதில்லை.

கல்யாண ராணி
கல்யாண ராணியை போலீசார் ஒருவழியாகக் கைது செய்துவிட்டார்கள். எனக்கு ‘கல்யாண ராணி’ என்ற பதமே மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ‘கல்யாண மன்னன்’ என ஆண்கள் கோலோச்சிய ஒரு துறையில் ஒரு பெண் காலடி எடுத்து வைப்பது சாதாரண சாதனை அல்ல. ‘அழகி சகானாஸ்’ என்று பத்திரிகைகள் வரிந்து வரிந்து எழுதுகின்றன. அந்தப் பெண்ணைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நமது சமூகத்தில் திருமணம் என்பது பல்வேறு சமூக விசாரணைகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு வர்த்தக ஏற்பாடு. ஒரு பெண்ணை எந்தப் பின்புலமும் தெரியாமல் இவ்வளவு பேர் திருமணம் செய்து ஏமாந்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அந்தப் பெண்ணை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட போலித் திருமணங்கள் இவை என்பது, சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்களைக் கவனித்தாலே தெரியும். ஆனால் இருமுனை உள்ள கத்தி பதம் பார்த்துவிட்டது. தந்திரத்தால், சாதுர்யத்தால் பெண்களை வேட்டையாடலாம் என நினைக்கும் ஆண்களுக்கு இந்தப் பெண்ணின் கதை ஒரு சவால்!
கல் கொள்ளையர்
கிரானைட் முறைகேடுகள் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் பெரும் பூதமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியாவை மிரட்டிய ஊழல்களில் அரசியல்வாதிகள்தான் நேரடியாக சிக்குவார்கள். ஆனால் அதிகார வர்க்கத்தின் நேரடிப் பார்வையில் நடந்த மாபெரும் ஊழல் என்றால், அது இதுதான். அரசியல்வாதிகள் யாராவது இதில் லஞ்சம் வாங்கியிருந்தால்கூட இப்போது வெளிப்படும் தொகையினைப் பார்த்து அதிர்ந்து போய்விடுவார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்ட உணர்வு அவர்களுக்கு வருவது நிச்சயம். இது ஏதோ யார் கண்ணுக்கும் தெரியாமல் செய்யக்கூடிய திருட்டு அல்ல. கண் முன்னால் மலைகளைப் பெயர்த்து தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். இதைப்பற்றிப் பேசும் மதுரைவாசிகள் ஒவ்வொருவர் முகத்திலும் அதிர்ச்சியை உணர முடிந்தது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த பி.ஆர்.பி.யின் மகன் கல்யாணத்தில், 4000 ஆடுகள் வெட்டி விருந்து வைத்தார்களாம். கல்லிலே தெய்வம் இருப்பது தெரியும்; புதையல் இருந்தது இப்போதுதான்
தெரிகிறது.
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம் : ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி



பறவைகளையும் அபூர்வ உயிரினங்களையும் தேடிச் செல்வது, அபூர்வமான மன நிலையின் பெரும் பித்து எனலாம். ஒரு பறவையை ஒரே ஒரு முறை காண்பதற்காக வாழ்நாளெல்லாம் பயணம் செய்த ஒருவனைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு சிறந்த கதை எழுதியிருக்கிறார். இந்தியாவில் பறவையியல் ஆராய்ச்சியின் அடையாளம் என்றால்,  அது சலீம் அலிதான். அவருடைய சுயசரிதையின் தமிழாக்கமே இந்த நூல்.
மிக நீண்ட, கடினமான பயணங்களின் ஊடே அபூர்வமான பறவைகளைத் தேடித் திரிந்த சலீம் அலியின் பயணம் நமது கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரமாண்டமான உலகத்தை விரியச் செய்கிறது. இயற்கையின் மர்மச் சுழலில் பறவைகளின் வாழ்க்கைமுறை, அவற்றின் புதிரான நடவடிக்கைகள் பற்றிய சலீம் அலியின் தேடல்கள் பெரும் வியப்பை ஏற்படுத்துபவை. ஒரு பறவையியல் ஆராய்ச்சியாளன் எதிர்கொள்கிற சவால்களையும் பேரனுபவங்களையும் இந்தப் புத்தகம் முழுக்க நுணுக்கமாக சித்தரிக்கிறார்.
அபூர்வமான எண்ணற்ற பறவைகள் ஒரு நூற்றாண்டிற்குள் அழிக்கப்பட்டுவிட்ட ஒரு தேசத்தில், சலீம் அலியின் ஆராய்ச்சிகள் நமது இயற்கையைப் பாதுகாப்பதற்கான ஆழமான அறைகூவல்.
(விலை: ரூ.85/-, வெளியீடு: நேஷனல் புக் ட்ரஸ்ட், நேரு பவன்,
5, இன்ஸ்டிடியூஷன் ஏரியா, வஸந்த் குஞ்ச், புதுடெல்லி- 110070).

இந்த வாரக் கவிதை : நானும் நீயும்


நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டு இருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளை சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை
- ஜெயபாஸ்கரன்

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்


இலங்கை ராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்து பயிற்சியளிக்கும் என்று சொன்ன மத்திய அமைச்சர் பல்லம் ராஜுவின் உருவ பொம்மை எரிப்பு - செய்தி இப்படி ஒரு உருவம் இருந்ததே இப்பத்தான் நமக்குத் தெரியுது...