சுட்ட கதை சுடாத நீதி
மகன்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட, கணவரையும் இழந்து தனிமையில் வசிக்கும் அந்தப் பெண்மணிக்கு செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியே துணை. சடை சடையாக முடி தொங்கும் அந்த உயர் ரக நாய்க்குட்டிக்கு வீட்டு ஹாலில் தனி சோபா உண்டு. ஒரு பெரிய பந்து வாங்கிக் கொடுத்து, அந்தப் பந்தை வைத்து கால்பந்து விளையாடவும் அதைப் பழக்கியிருந்தார். தான் விழித்திருக்கும் நேரங்களிலெல்லாம் அந்தப் பெண்மணியை அன்பால் நனைத்தது நாய்க்குட்டி.
அவர்கள் வீடு இருக்கும் தெருவில் புதிதாக முளைத்தது ஒரு அழகு நிலையம். நாய், பூனை என வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கான அழகு நிலையம் அது. தன் செல்லத்தையும் அழகுபடுத்தலாம் எனக் கூட்டிப் போனார். நாயை மேலும் கீழும் பார்த்து ஆராய்ந்த அழகு நிலைய நிர்வாகி, ‘‘முடியை ஓரளவுக்குக் கத்தரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். அப்புறம் ஷாம்பு போட்டு குளிப்பாட்டிவிட்டு, நகங்களைத் திருத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் சேர்த்து இரண்டாயிரம் ரூபாய் ஆகும்’’ என்றார். அந்தப் பெண்மணி திகைத்துவிட்டார். ‘‘நான் பியூட்டி பார்லருக்குப் போனால், இதைவிட அதிகமான விஷயங்களைச் செய்கிறா ர்கள். முகத்துக்கு, புருவத்துக்கு என்று என்னென்னவோ செய்கிறார்கள். அதற்குக்கூட நான் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தருவதில்லையே? நீங்கள் என்ன இவ்வளவு அநியாயமாகக் கேட்கிறீர்கள்?’’ என்று கத்தினார். அழகு நிலைய நிர்வாகி நிதானமாகப் பார்த்துவிட்டுச் சொன்னார்... ‘‘எல்லாம் ஓகே! உங்களுக்கு அழகு சிகிச்சை தரும் நபரை நீங்கள் கடிப்பீர்களா? இந்த நாய் கடிக்கும். அந்த ரிஸ்க்கை எடுத்துச் செய்வதால்தான் இந்தக் கட்டணம்...’’ வேலைகளின் கடுமையைப் பொறுத்தே பலன்கள் கிடைக்கின்றன!
|