ஏன் வருகின்றன அந்தமாதிரியான படங்கள்?





‘தப்பு’, ‘சாந்தி அல்லது நித்யா’, ‘துரோகம்’, ‘அந்தரங்கம்’, ‘மச்சினிச்சி’, ‘அடங்காப்பிடாரி’, ‘காதல் லீலை’... பெயர்களைப் பார்க்கும்போதே உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும். அண்மைகாலங்களில் ரிலீசான அஜால் குஜால் படங்கள்தான் இவை. அந்தக் காலத்தில் இந்த மாதிரியான படங்களுக்கென்றே ‘பிட்டுப் பட தியேட்டர்’ என்று நாமகரணம் சூட்டப்பட்ட தியேட்டர்கள் இருந்தன. ஆனால், இன்றோ செம டீசன்ட்டான செகண்ட் ரிலீஸ் தியேட்டர்களில் கூட பெரிய படங்கள் இல்லாத இடைவெளியை இட்டு நிரப்புகின்றன இந்த இத்யாதிகள். அதுகூட பரவாயில்லை... ஒரு காலத்தில் இந்தத் தேவைக்கெல்லாம் மலையாள உலகையே நம்பியிருந்த தமிழ் இண்டஸ்ட்ரி, இப்போது நேரடி தமிழ் செக்ஸ் படங்களையே எடுக்கத் துவங்கிவிட்டது. அதிலும் நிறைய படங்கள் வரிசையாக வருகின்றன. ‘போயும் போயும் இதில்தானா நாம் தன்னிறைவு அடைய வேண்டும்?’ என்ற ஆதங்கத்தோடு திரையுலகப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘இந்தப் படங்களை எல்லாம் செக்ஸ் படங்கள்னு பிரிச்சுப் பார்க்காதீங்க. இவையும் நம்ம ஊர் சட்டப்படி சென்சார் செய்யப்பட்ட படங்கள்தான்’’ என்று தில்லாக இந்தப் படங்களைத் தாங்கிப் பிடித்தார் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்கச் செயலாளர் கலைப்புலி சேகர்.

‘‘சென்சார் செய்யப்பட்டதுன்னா ஆட்சேபத்துக்குரிய காட்சிகளோ, வசனங்களோ இல்லாத படங்கள்னு அர்த்தம். இதெல்லாம் இல்லாம, காமத்தை மையமா வச்சு படங்கள் வரலாம். அதையெல்லாம் தப்பான படங்கள்னு சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தா, கே.பாலசந்தர் ஒரு காலத்துல எடுத்த ‘அரங்கேற்றம்’, ‘தப்புத்தாளங்கள்’, ‘மன்மத லீலை’ எல்லாம் காமம் சார்ந்த படங்கள்தான். பெரிய பெரிய படங்கள்ல ஹீரோயின் போடுற உடையிலயும் அங்க அசைவுகள்லயும் மட்டும் காமம் இல்லையா என்ன? பிரபல இயக்குனர்கள், பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட்னு நிறைய கேடயங்கள் இருக்கறதுனால அதெல்லாம் செக்ஸ் முத்திரை குத்தப்படாமல் தப்பிச்சிடுது.

ஆனா, இதெல்லாம் இல்லாம சில லட்சங்களை மட்டும் கையில வச்சுக்கிட்டு ஆர்வத்தோட சில பேர் சினிமாவுக்கு வர்றாங்க. குறைஞ்ச பட்ஜெட், புதுமுக நடிகர்கள், புது டைரக்டர்னு வரும்போது அவங்க காமம் கலந்த கதைகளைத்தான் தேர்ந்தெடுக்குறாங்க. அதுக்கும் காரணம் இருக்கு. இப்ப பொதுவாவே பெண்கள் தியேட்டருக்கு வர்றது குறைஞ்சு போச்சு. அதனால, ஆண்களை டார்கெட் பண்ண வேண்டிய நிலைமை. அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு வரணும்னா, இப்படிப்பட்ட கதைகள் தேவைப்படுது. ஏன்னா, வீட்டுல இந்த மாதிரி படங்களைப் பார்க்க முடியாது. சின்ன தியேட்டர், டிக்கெட் விலை கம்மி, தனிமை இதெல்லாம்தான் இந்தப் படங்கள் வெற்றி அடையறதுக்குக் காரணம். பெரிய பெரிய பட்ஜெட்ல வர்ற படங்கள் கூட சில சமயம் ரெண்டு நாள்ல தியேட்டரை விட்டுப் போயிடும். ஆனா, இந்த மாதிரி படங்கள் நிச்சயம் ஒரு வாரம் ஓடும். இந்த மினிமம் கியாரண்டி, தியேட்டர்காரங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. இதுல எல்லாருக்கும் லாபம். பணம் போட்ட புரொட்யூசருக்கும் நாலு, அஞ்சு லட்சமாவது நிச்சயமா நிக்கும். நான்கூட என் அசிஸ்டென்ட் ஒருத்தர் டைரக்ட் பண்ற ‘கள்ளப் பருந்து’ங்கற படத்துல ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அது காமம் கலந்த கதைதான். இங்க சென்சார்ல மாட்டிக்கிச்சு. ஆனா, டெல்லி போய் சில ‘கட்’ஸோட சர்டிபிகேட் வாங்கியாச்சு. முப்பத்தி அஞ்சு லட்சத்துல எடுக்கப்பட்ட படம். நிச்சயமா நஷ்டமாகாது.


இந்த மாதிரியான படங்களை எடுக்குற தயாரிப்பாளர்களும் சரி, டைரக்டர்களும் சரி... பெரிய லாபத்தை எல்லாம் எதிர்பார்க்குறது இல்ல. அடுத்த படத்துக்கான ஒரு விசிட்டிங் கார்டாத்தான் இதை ட்ரீட் பண்றாங்க. ஒரு ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி, கதையம்சம் நல்லா இருந்து, இண்டஸ்ட்ரில நல்ல டாக் வந்துடுச்சுன்னா அடுத்த படத்தை நல்லா எடுக்கலாம்னு நினைக்கறாங்க. அதனாலதான் மலையாள, இந்தி டப்பிங்கை விட இந்தப் படங்கள் இப்போ அதிகமாயிடுச்சு. இது தப்பில்லையே’’ என்றார் அவர்.

இதெல்லாம் சரி... ஆனால், பளபள தியேட்டருக்கும் பலான தியேட்டருக்கும் இப்போது வித்தியாசமில்லாமல் போய்விட்டது ஏன்? - தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் ‘அபிராமி’ ராமநாதனிடம் கேட்டோம்.

‘‘சென்னை மாதிரியான இடங்கள்ல போஸ்டரையும், சர்டிபிகேட்டையும் பார்த்து படத்துக்கு வர்ற பழக்கம் வந்துடுச்சு. இன்னிக்கு செக்ஸ் சம்பந்தமான படம் ஓடுதுன்னா, அதுக்கு விருப்பப் படுறவங்க போவாங்க. நாளைக்கே அந்த தியேட்டர்ல பெரிய படம் ரிலீஸானா, ஆண்கள் பெண்கள்னு எல்லாரும் வருவாங்க. அது மட்டுமில்லாம, நாலு படங்கள் ஓடுற தியேட்டர்ல ஒரு படமா இதைப் போடும்போது, அந்தத் தியேட்டருக்கே செக்ஸ் முத்திரை குத்த யாரும் நினைக்கறதில்லை. இந்தியில தீபா மேத்தா எடுத்த எத்தனையோ படங்கள் காமம் சார்ந்து இருந்தது. அதெல்லாம் நல்ல பெரிய தியேட்டர்கள்லதான் ஓடிச்சு. ஸோ, நகரங்கள்ல இது ஒரு பிரச்னையே இல்ல.



ஆனா, கிராமப்புறங்கள்ல இன்னிக்கும் பழங்காலத்து தியேட்டர்கள்லதான் இந்த மாதிரி படங்கள் ஓடுது. இந்த தியேட்டரெல்லாம் அந்தந்த குடும்பங்களுக்கு பாட்டன், பூட்டன் காலத்து சொத்து. சிலர் வித்துட்டுப் போயிட்டாங்க; சிலர் கஷ்டப்பட்டு நடத்திட்டு இருக்காங்க. இன்னிக்கு இண்டஸ்ட்ரி இருக்குற சூழல்ல தியேட்டரை புதுசு பண்றேன்னு 50, 60 லட்சம் முதலீடு பண்ண அவங்க பயப்படுறாங்க. அவங்களுக்கு இந்த மாதிரி படங்கள்தான் ஆபத்பாந்தவன். இதனால பெண்கள் அந்தப் பக்கம் வரமாட்டாங்கதான். தியேட்டர் வாசல்ல நிக்கறதையே அவமானமா நினைப்பாங்கதான். இருந்தும் இதுக்குத் துணிஞ்சுடுறாங்க!’’ என்றார் அவர்.

எது எப்படியோ, இந்த டைப் படங்களின் போஸ்டர்கள் போலவே கதைகளும் சதைகளை மட்டுமே சுற்றி வந்தால், ஜனரஞ்சகமான படங்களில் எப்போதாவது வரும் காமம் எனும் சுவைகூட வரும் தலைமுறைக்குத் திகட்டிப் போகக் கூடும். அந்தக் கவலைதான் நமக்கு!
- டி.ரஞ்சித்
படங்கள்: தமிழ்


எப்படி எடுக்கிறார்கள்?

இது போன்ற படங்களின் பட்ஜெட் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை. பெரிய பட்ஜெட் படங்களையே ஸ்டில் கேமராக்களில் எடுக்கும் இந்தக் காலத்தில் தொழில்நுட்பச் செலவுகளெல்லாம் பெரிதாக இருப்பதில்லை. படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் சம்பளம், வெளிப்புறப் படப்பிடிப்புக்கான செலவுகள்... இவைதான் பட்ஜெட்டில் பெரும் பகுதியை விழுங்குகின்றன.

படத்தில் அருவருப்பான காட்சிகள் இருக்காது. விளக்கு அணையும் வரையிலான முதலிரவுக் காட்சிகள், பல்ஸ் எகிற வைக்கும் கற்பழிப்புக் காட்சிகள் என நம் தமிழ் சினிமாவின் வழக்கமான டிரேட் மார்க் காட்சிகள்தான் இருக்கும். என்ன... வழக்கமான சினிமாவில் இவை எப்போதாவது வரும்; இந்தப் படங்களில் அடிக்கடி வரும்! 

இந்தக் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல் இயல்பாகவே கதையோடு இணைந்து வரவேண்டும் என்பதற்காகப் பார்த்துப் பார்த்து கதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இடையிடையே வேக வேக கேமரா மூவ்மென்ட்களில் மிரட்டுவதும், பன்ச் வசனங்களை அள்ளித் தெளிப்பதும்... ‘எங்களுக்குள்ளயும் இருக்கான்டா ஒரு டஜன் பேரரசு’ என பட உலகுக்கு பறைசாற்றும் முயற்சி!