நியூஸ்வே




*  ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய மல்யுத்த வீரர்கள் சுசீல் குமார், யோகேஷ்வர் தத் ஆகிய இருவருக்குமே விருதுகளும் பரிசுகளும் குவிகின்றன. டெல்லி சாந்தினி சௌக் வியாபாரிகள் சங்கம் இவர்களுக்கு வித்தியாசமான பரிசுகளைக் கொடுத்தது. ஆளுக்கு ஒரு எருமைப் பசு, நூறு கிலோ நெய், 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவைதான் பரிசுகள்!

*  பன்வாரி தேவியை நினைவிருக்கிறதா? ராஜஸ்தான் அரசியல்வாதிகளோடு ரகசியத் தொடர்பு வைத்திருந்து, அதை சி.டி. ஆதாரங்களாக ரெக்கார்ட் செய்துவைத்து பிளாக் மெயிலில் ஈடுபட்டதால், கடத்தி படுகொலை செய்யப்பட்ட நடனப்பெண். விஷயம் வெளியானபோது நிறைய பேர் ஜெயிலுக்குப் போனார்கள். இந்த பரபரப்பான கதையை படமாக எடுக்கிறார்கள். நடிக்கப் போவது மல்லிகா ஷெராவத். படத்தில் அவரது கேரக்டர் பெயர், அனோகி தேவி.

*  ‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை படமாகிறது. ஸ்டீவாக நடிப்பவர், அஷ்டன் கட்சர். படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் இந்தியாவில் நடந்தது. இதற்காக வந்த அஷ்டன் கட்சர், ஒரு மழை நாளில் தாஜ்மகாலை பார்த்து உருகியிருக்கிறார். 80 ரூபாய்க்கு ஒரு அழகான தாஜ்மகால் மினியேச்சரும் வாங்கியிருக்கிறார்... தன் காதலி, நடிகை மிலா குனிஸுக்கு பரிசளிக்க!



*  சமாஜ்வாடி கட்சியுடன் மோதிக்கொண்டு வெளியேறியபிறகு ஜெயப்ரதாவுக்கு இறங்குமுகம்தான்! உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடித்துவிட, ஜெயப்ரதாவின் அரசியல் ஆசான் அமர்சிங் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார். ‘இனி நமக்கு அரசியல் சரிப்படாது’ என நினைத்தாரோ என்னவோ... கடை திறப்பு விழாக்கள், மாடலிங் நிகழ்ச்சிகள் என பிஸியாகி விட்டார் ஜெயப்ரதா.

*  ஒலிம்பிக்கில் பல்பு வாங்கிய சோகத்தில் இருக்கிறார் பாட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா. அதைவிடப் பெரிய சோகம், அவரது பொறாமைக்குரிய சானியா நெஹ்வால் பதக்கம் வாங்கியது. ‘‘கொஞ்ச நாளைக்கு பிரேக்!’’ என அறிவித்திருக்கும் ஜ்வாலா, தெலுங்கு படங்களில் நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.