காற்று வாங்கப்போய் காதல் வாங்கி வந்த கதையாக, காதல் வாங்கப்போய் ஊருக்கே காவல்காரனாகும் ஹீரோவின்கதை. அதில் காமிக்ஸில் படித்தது, பிற மொழிப் படங்களில் பார்த்தது எல்லாவற்றையும் கலந்து ஒரு மாஸ்(க்) என்டர்டெயினராகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
தடுக்கி விழுந்தால் தமிழில் எளிதாகக் கிடைக்கக்கூடிய, வேலை வெட்டி இல்லாத வேடம் ஹீரோ ஜீவாவுக்கு. ஆனால், குங்ஃபூவில் அவரை அடித்துக்கொள்ள ஜில்லாவில் ஆள் இல்லை என்பது அவரது அசாத்திய திறமை. கண்டதும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவது இன்னொரு ப்ளா ப்ளா திறமை. இந்த நிலையில் சென்னையை தெற்கு, வடக்கு என்று கூறு போட்டு ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பிடிக்க போலீஸ் அதிகாரி நாசர் நியமிக்கப்பட... அதேதான் - பூஜா ஹெக்டே அவரது மகளேதான். பூஜாவைக் காதலிக்க ச்சும்மா முகமூடி டிரஸ்ஸில் போகும் ஜீவாவின் வழியில் கொள்ளை கும்பல் குறுக்கிட... தொடர்ந்து அவர்களை ஜீவா எப்படி வீழ்த்துகிறார் என்பது மீதிக்கதை.
ஜீவாவை முதலில் பாராட்ட நேர்வது அந்த சுக்கா ரொட்டியையொத்த முகமூடி டிரஸ்ஸைப் போட்டபடி துறைமுகத்தின் இருநூறு அடி உயர கிரேன்களின் மேலேறி கிளைமாக்ஸில் ஆக்ஷன் காட்டியிருப்பதற்கு. அதைத் தாண்டி காதலுக்கு ஏற்ற ஹேண்ட்ஸம் லுக்கிலும் அசத்துகிறார் மனிதர்.
பூஜா ஹெக்டேதான் கேரக்டரிலும், கேரக்டரைசேஷனிலும் பாவம். மீன் மார்க்கெட்டில் ஹீரோவை மீன் வெட்டும் கத்தியால் பத்துபேர் தாக்க, அவர்களைப் போலீஸில் பிடித்துக் கொடுக்காமல் பத்துபேரை சமாளிக்கும் ஹீரோவை ஸ்பிரே அடித்துப் பிடித்துக் கொடுக்கிறார். அப்படி ஒரு வீரனிடம் விரோதம் காட்டிவிட்டு, முகமூடி போட்டுக்கொண்டு ஒருவன் சாகசம் செய்தால், அவனைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
வில்லனாக நரேன் 'வாவ்...’ போட வைக்கிறார். துளைக்கும் பார்வையிலும் சுத்தியல் அடியிலும் அலற வைக்கிறார். கடைசிவரை முகத்தில் பயம் காட்டாமல் நடித்திருப்பதில், இனி பல படங்களில் அவரை வில்லனாக அழைப்பார்கள்.
‘‘கொள்ளையர்களைப் பிடித்தே தீர வேண்டும்...’’ என்று மேலதிகாரிகள் கட்டளையிட, ‘‘முயற்சி செய்கிறேன்...’’ என்கிற கமிஷனர் நாசரின் அடக்கமும் இயல்பும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் கிளைமாக்ஸ் லீடில், ‘‘இதையெல்லாம் சாதிக்க முகமூடி ஒருத்தனாலதான் முடியும்னு சொல்ல நாங்க வெட்கப்படலை...’’ என்று ‘பேட்மேனி’ல் வரும் கோதம் நகர போலீஸ் கமிஷனரைப் போல் அவர் சொல்லும்போது சிரிப்பு வருகிறது.
வறுமைக்கோட்டுக்கும் கீழே ஒரு கோடு போட்டு வாழ்ந்து வரும் ஜீவாவின் குங்ஃபூ ஆசான் செல்வாவுக்கு ஏதோ ஒரு ஃப்ளாஷ்பேக் இருப்பது புரிகிறது. ஆனால் எப்போதோ நடந்த அவரது ஆசானின் கொலைக்காக அவர் ஏன் அப்படி வெறும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, காசு வாங்காமல் குங்ஃபூ பயிற்றுவித்து, ஜீவாவையும் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டாமென்று தடுத்து... நிறைய ‘ஏன்... ஏன்... ஏன்..?’கள்.
தமிழிலும் ஒரு சூப்பர்ஹீரோ படம் கொடுக்க வேண்டுமென்ற மிஷ்கினின் ஆதங்கம் புரிகிறது. அதற்காக இது ‘பேட்மேன்’, இது ‘ஸ்பைடர்மேன்’, இது ‘கராத்தே கிட்’ என்று சொல்லக்கூடிய அளவிலா சீன்களை அடுக்குவது..? கனவு பலித்தநிலையில் இனி அவர் வழக்கப்படி ‘தகேஷி கிட்டானோ’வையே முயற்சி செய்யலாம்.
‘கே’வின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் இசைக்கேற்ற எஃபெக்ட்டுகள் மிஸ்சிங். சத்யாவின் கேமரா ஆக்ஷன் பாதையிலும், மிஷ்கினின் நிச்சலன இரவுப் பாதைகளிலுமாக தடுமாறாமல் பயணிக்கிறது.
- குங்குமம் விமர்சனக்குழு