அதிகாரத்தையும் ஆளுமைத்தனத்தையும் விரும்பும் நீங்கள், யாருக்கும் அடிபணிய மாட்டீர்கள். மதிப்பவர்களைத்தான் மதிப்பீர்கள். அலுவலகத்தில் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தட்டிக் கேட்பீர்கள். அதனாலேயே அடிக்கடி வேலை மாற வேண்டி வரும். உங்கள் ராசிநாதனான சூரியனுக்கும், தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரனுக்கும் எப்போதுமே ஒரு பனிப்போர் நிகழ்ந்தபடி இருக்கும். அதனாலேயே அலுவலகத்தில் பெரிய மூத்த அதிகாரி உங்களை ஆதரித்தாலும், உங்களுக்கு நேர் மேலதிகாரி மட்டம் தட்டிக் கொண்டிருப்பார். சங்கம், இயக்கம் இவற்றிலெல்லாம் பொறுப்பும் பதவியும் தேடிவரும். உங்களிடம் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களை கண்ணியமாகவே நடத்துவீர்கள். நாலு பேரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் எப்போதும் சரியாக வரும். பண்டைய கலாசாரங்களை வளர்க்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வேலைக்குச் சேர்வீர்கள். எப்போதுமே தொழிலாளர்களுக்கு பணமாக உதவாமல், அவர்களுக்கு வேண்டியதைப் பொருளாக மாற்றிக் கொடுப்பீர்கள்.
சொந்த ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அரசாங்கத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் அமர்வீர்கள். மூத்த அதிகாரிகளுக்கே ஆலோசனை சொல்லும் அளவிற்கு உயர்வீர்கள். ஆனால், பத்தாம் வீட்டை சனி பார்த்தாலோ, பத்தாம் வீட்டில் சனி அமர்ந்திருந்தாலோ பதவி உயர்வு நேரத்தில் பந்தாடப்படுவீர்கள். ‘‘உழைச்சுக் கொட்டியது போதும். புதுசா வர்றவங்களை பூ போட்டு வரவேற்கிற இந்த கம்பெனி, என்னைப் போல இருக்கற பழைய ஆளுங்களை ஏமாத்துது. எங்க போனாலும் இதுதான் நடக்குது. அதனால சொந்தத் தொழில் தொடங்கலாம்னு இருக்கேன்’’ என்று உங்களில் பலர் திடீரென்று மத்திம வயதில் வியாபாரத்தில் குதிப்பீர்கள்.
அன்னிய தேசம், அண்டை மாநிலம் என்று போகும்போது உங்களுக்கு ஆதரவு அலை வீசும். ‘‘கம்பெனியையே தன் கைக்குள்ள வச்சிருக்கார்’’ என்று பேசுகிற அளவிற்கு செல்வாக்கோடு திகழ்வீர்கள். களத்திரகாரகன் சுக்கிரன் உங்களுக்கு வேலை ஸ்தானாதிபதியாக வருவதால், அலுவலகத்தில் அமைதியாக இருந்தால் வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் போராட்டம் இருக்கும். சிலருக்கு நல்ல வாழ்க்கைத்துணை, வீட்டில் மகிழ்ச்சி என்றிருந்தால் உத்யோகத்தில் அடிக்கடி பிரச்னைகளும் இடமாற்றமும் இருக்கச் செய்யும்.
ஒரு முடிவு எடுத்தால், எக்காரணத்தை கொண்டும் அதில் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டீர்கள். ‘‘என்ன ஆனாலும் நான் பார்த்துக்கறேன்’’ என்று உறுதி காட்டுவீர்கள். ஆத்மகாரகனான சூரியனின் ராசியில் பிறந்திருப்பதால், கூட்டத்தோடு கூட்டமாக எதையுமே முடிவெடுக்க மாட்டீர்கள். எப்போதுமே நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவே விரும்புவீர்கள். ஆக்கல் அழித்தல் என்பதுபோல வேலைக்கு வைப்பது, வேலையை விட்டுத் தூக்குவது என்கிற இரு அதிகாரங்களையும் உங்கள் கையில் வைத்துக் கொள்வீர்கள். தராதரம் பார்த்துத்தான் எல்லோரையும் வேலைக்கு வைத்துக் கொள்வீர்கள்.
‘‘இந்த வேலையை எப்படி வேணா பண்ணுங்க. ஆனா, எனக்கு வேண்டியது நல்ல ரிசல்ட்’’ என்று விட்டுப் பிடிப்பீர்கள். ஒரு முறைக்கு மேல் யாரையும் மன்னிக்க மாட்டீர்கள். நேருக்கு நேராகக் கேட்டு விடுவீர்கள் என்பதாலேயே எல்லோரும் உங்களிடம் தயங்கியபடிதான் பேசுவார்கள். பாராட்டுதலைக் கூட ஆர்ப்பாட்டமாக தெரிவிக்காமல், மெல்லிய குறுநகையோடுதான் வெளிப்படுத்துவீர்கள். தர்ம, கர்ம ஸ்தானம் என்னும் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். ஒருவிதத்தில் சூரியனும் சுக்கிரனும் பகைக் கோள்களாகும். அதனால், படித்த துறையில் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் தவிப்பீர்கள்.
மகம், பூரம் நட்சத்திரங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதமும் சிம்மத்தில் அடங்குகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எப்படி என்று பார்ப்போம்...
மகம் நட்சத்திரக்காரர்கள் கண்ணெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்பீர்கள். நிறைய சம்பாதிக்கவும் தெரிந்து வைத்திருப்பீர்கள்; சேர்த்தும் வைப்பீர்கள். நிறைய சம்பளம், அதிகாரம் என்று உயர்ந்தாலும், எளிமையாகத்தான் இருப்பீர்கள். அலுவலக சலுகைகளை அனுபவிக்க கூச்சப்படுவீர்கள். ஊழியர்களுக்குக் கேட்டுக் கேட்டு உதவி செய்வீர்கள். கடந்து வந்த பாதையை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டீர்கள். மக நட்சத்திரக்காரர்கள் ராஜ சிம்மத்தின் அம்சத்தை உடையவர்கள். புலி பசித்தாலும் புல்லை தின்னாமல் இருப்பதுபோல, எத்தனை மாய மந்திரங்களை செய்தாலும் எளிதில் விலைபோக மாட்டீர்கள். கொள்கை, கோட்பாடுகளில் உறுதியோடு இருப்பீர்கள்.
முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எலெக்ட்ரிகல், கெமிக்கல், பெட்ரோல் பங்க், செங்கல் சூளை, ஹோமம் செய்வது என்று தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். மக்கள் தொடர்பு அதிகாரி, அமைச்சரின் உதவியாளர், வங்கி மேலாளர், தீயணைப்புத்துறை, ராணுவம், காவல்துறை அதிகாரி என்று முயற்சி செய்தால் உயர்ந்த இடத்திற்குச் சென்று விடலாம். இரண்டாம் பாதத்தினர் விவசாயத்துறை, தோட்டக்கலை, வனத்துறை, நீர்வளத்துறை, நீர்மின் நிலையம், செக்சாலஜி நிபுணர், கால்நடை மருத்துவர் என்று சில குறிப்பிட்ட துறைகளில் நுழைந்தால் சாதிக்கலாம், துணிக்கடை, பலசரக்குக் கடையும் இவர்களுக்கு ஏற்றது. மூன்றாம் பாதத்தினர் உளவுத் துறை, பத்திரிகை நிருபர், கல்யாணத் தரகர், வெளிநாட்டு தபால் சேவை, சினிமா எடிட்டிங், ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட், ஜோதிடர் என எதிர்காலத்தை நிர்ணயிக்கலாம். சைனீஸ் ரெஸ்டாரன்ட், அக்குபஞ்சர் போன்றவையும் ஏற்றதே! நான்காம் பாதத்தினருக்கு அழகு நிலையம், தோல் நோய் நிபுணர், பல் மருத்துவர், ஃபிட்டர், நவீன விவசாயம், அரிசி மண்டி, ஸ்டார் ஹோட்டல் மானேஜர், மனநல மருத்துவர், மெடிக்கல் ஷாப் என்று எதிர்காலம் அமையும்.
பூரம் நட்சத்திரக்கார்களுக்கு இந்த வேலைதான் என்கிற பெரிய குறிக்கோள் எதுவும் இருக்காது. சாதாரணமாகத்தான் இருப்பீர்கள். ஆனால், திடீரென்று யாருடைய தூண்டுதலுமே இல்லாமல் முன்னேற ஆசைப்படுவீர்கள். இயந்திரம் போல ஒரே வேலையை செய்யப் பிடிக்காது. கெடுபிடியான அலுவலகமாக இருப்பின் வேலையை விடுவதற்குக் கூட தயங்க மாட்டீர்கள். யாரும் உங்களை விரட்டி வேலை வாங்குவது பிடிக்காது. ஆழ்ந்து, மெதுவாக, ஒவ்வொரு வேலையாக முடிக்கத்தான் விரும்புவீர்கள். எல்லா விஷயத்திற்கும் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். ‘‘நாளைக்கு காலையில நீங்க வரும்போது அந்த ஃபைல் உங்க டேபிள்ல இருக்கும்’’ என்பீர்கள். அதிகாரத்தைக் கையில் கொடுத்தால் ஆணவமாகவும், அக்கிரமமாகவும் எதுவும் செய்ய மாட்டீர்கள்.
முதல் பாதத்தில் பிறந்தவர்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணர், வருவாய் அதிகாரி, வி.ஏ.ஓ., கட்டுமான நிறுவன சூப்பர்வைசர், அரசு வக்கீல், அதர்வண வேதம் ஓதும் வைதீகர், தோல் பதப்படுத்தும் கம்பெனி, பிரின்டிங் பிரஸ், ரத்தப் பரிசோதனைக் கூடம், ஸ்கேன் சென்டர், ஜிம் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் சிறப்பாக வருவீர்கள். 2ம் பாதத்தினர் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், டைல்ஸ் விற்பனை, ரைஸ் மில், உடற்கல்வி ஆசிரியர், டெக்ஸ்டைல் பிசினஸ், பொருளாதார ஆசிரியர், கேமராமேன், நெல் மண்டி, நிலத் தரகு என்று சில துறைகளில் இறங்கினால் லாபம் ஈட்டுவீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் வாகன ஷோரூம், ஹோட்டல், மாடுலர் கிச்சன், இன்டீரியர் டெகரேட்டர், சினிமாவில் கலை இயக்குனர், திருமண ஏற்பாட்டாளர், பட்டுப்புடவை விற்பனை, அணுமின் நிலையம் என்று முயற்சி செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்றதாக அமையும். நான்காம் பாதத்தினரில் பலர் பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் என்று இருப்பார்கள். புற்றுநோய், கர்ப்பப்பை மருத்துவர், பைனான்ஸ் தொழில், ஃபிட்டர், டர்னர், டிபார்ட்மென்டல் ஸ்டோர், ஹோட்டல், கோழிப் பண்ணை, மசாலா சாமான்கள் தயாரித்து விற்பனை செய்தல் என்று ஈடுபட்டால் பெருத்த லாபத்தை அடையலாம். இல்லையெனில் உத்யோகத்தில் திடத் தன்மை இல்லாமல் வேலையை விட்டுவிட்டு அடிக்கடி அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கறாராக இருப்பார்கள். முதல் பாதத்தின் அதிபதியாக குரு வருகிறார். இவ்வாறு சூரியனின் இரட்டிப்பு சக்தியோடு குரு சேர்வதை சிவராஜ யோகம் என்பர். எத்தனை பெரிய சாதனையையும் அளவான பிரமிப்போடுதான் பார்ப்பீர்கள். பணத்தை வாரிக் குவித்து வைக்கத் தெரியாது. எதையுமே விவரித்து சொல்லாமல், அவர்களாகவே புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுவீர்கள். அதேபோல தவறு செய்பவர், மன்னிப்பு கேட்பது போன்று பாவனை செய்தாலே மன்னித்து விடுவீர்கள். ‘‘உங்க தகுதியையும், இந்த ஆபீஸ்ல உங்களுக்குக் கொடுத்திருக்கற பதவியையும் அனுசரிச்சு நடந்துக்கோங்க’’ என்று அடிக்கடி சொல்வீர்கள். பெரிய மனிதர்களின் வெற்றிக்குக் காரணமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் கம்பீரமாக செயல்பட்டாலும், உங்களின் முன்கோபத்தால் எதிரிகள் தோன்றிய வண்ணம் இருப்பார்கள். எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருப்பீர்கள். 30ம் தேதிக்குள் வரி கட்டிவிட வேண்டும் என்றால், உடனே கட்டிவிடுவீர்கள். ஆவணக் காப்பகம், கருவூலம், உளவியல் பேராசிரியர், புத்தக பதிப்பாளர், உடற்பயிற்சி நிபுணர், இசையமைப்பாளர், மயக்க மருந்து கொடுப்பவர், சர்க்கஸ், வனவிலங்குகள் வசிக்கும் காட்டில் பணிபுரிதல், இதய நோய் மருத்துவர் என்று குறிப்பிட்ட சில துறைகளில் வெற்றியை வசமாக்கலாம்.
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக ரிஷபச் சுக்கிரன் வருகிறார். எனவே, பெருமாளை வணங்குவது எப்போதும் நன்மை தரும். சூரியன் உங்களின் ராசியாதிபதியாக இருப்பதால், நரசிம்மர் தரிசனம் நலம் தரும். சற்று சயனக் கோலத்தில் அருளும் நரசிம்மர் எனில், வேலைவாய்ப்பும் சுகமாகக் கிடைக்கும். அப்படிப்பட்ட தலத்தில் ஒன்றுதான் திருவதிகை ஆகும். இத்தலத்தின் பிரதான சிறப்பம்சமே இங்கு எழுந்தருளியுள்ள சயன நரசிம்மர்தான். தெற்கு நோக்கி சயனித்துள்ளார் இவர். தாயாரும் உடன் எழுந்தருளியுள்ளதால் இந்த நிலையை போக சயனம் என்கின்றனர் ஆன்றோர். வேண்டியதை உடனே அருளும் வரப் பிரசாதி இவர். அதிலும் போக சயனத்தில் இருப்பதால் இகலோக சுகங்கள் அனைத்தையும் வேண்டுபவர்களுக்கு உடனே அருள்கிறார் என்கின்றனர். ‘பாற்கடலில் மகாவிஷ்ணுவாக பள்ளி கொண்டிருந்தவன், நரசிம்ம உருவில் பள்ளி கொள்ள மாட்டானோ’ என்று பக்தர்களின் ஆசைக்காக இங்கு இப்படி காட்சி தருகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அந்த சந்நதியில் நிலவும் சாந்நித்தியம் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. கோயில் கோபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிங்கப் பெருமாள் காட்சி தருவதைப் பார்க்கும்போது, நரசிம்ம ஸ்வாமிக்கான தனிப் பெரும் புகழ் இத்தலத்திற்கு உள்ளது புரிகிறது. பிரதி மாதம் பிரதோஷ காலத்தில் நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. விசேஷமாக பானக ஆராதனம் நடக்கிறது. இத்தலம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)