செக்குல எண்ணெய் எடுக்கிற வேலையில மாடுதான் முக்கியமான பவர் எஞ்சின். கரன்ட் கட் பத்தி கவலை இல்லாம எண்ணெய் எடுப்பாங்க. ஒரு இடத்துல இப்படி மாடு செக்கு இழுத்திட்டிருக்கும்போது, கடை வாசல்ல உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டிருந்தாரு செக்கு ஓனர்.
அந்த வழியா வந்த ஒரு எம்.பி.ஏ. படிச்ச ஆசாமி, ‘நீங்க வேடிக்கை பார்க்கும்போது, மாடு சும்மா நின்னிட்டிருந்தா உங்களுக்குத்தானே நஷ்டம்’னு கேட்டிருக்காரு. ‘மாட்டு கழுத்துல மணி கட்டியிருக்கேன். மணி சத்தம் கேட்கலைன்னா மாடு சுத்தலைன்னு தெரிஞ்சுடும்’னு தெளிவா பதில் சொன்னார் ஓனர். படிச்சவர் விடுறதா இல்லை. ‘ஒரே இடத்துல நின்னு மாடு தலையை மட்டும் ஆட்டினா என்ன பண்ணுவீங்க’ன்னு மடக்கினார். ‘அது உங்க அளவுக்குப் படிக்கலை. அதுக்கு இந்த மாதிரியெல்லாம் விவரமா யோசிக்கத் தெரியாது’ன்னு சொன்னாராம் செக்கு முதலாளி.
அனுபவம் சொல்லித் தர்ற பாடங்களை ஒழுங்கா கத்துக்கிட்டா, உறுதியும் தெளிவும் தன்னால வந்துடும். நான் முதல்ல சரியா கத்துக்கலை. அப்புறம் வாழ்க்கை காதைப் பிடிச்சி திருகி, ‘கத்துக் கோ’ன்னு சொல்லுச்சு. கன்னத்துல அறைஞ்சி சொல்லிக் கொடுக்கறதுக்கு முன்னால சரியா கத்துக்கிட்டேன்...’’
- இனிப்பான வார்த்தைகளில் எளிமையான உதாரணங்களோடு பேசுகிறார் கிருஷ்ணன். ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ என்கிற பெயர், வெறும் இனிப்புகளை விற்பனை செய்கிற நிறுவனத்தை மட்டும் குறிப்பதில்லை. நல்ல சங்கீதம், இலக்கியக் கூட்டங்கள், தன்னம்பிக்கை நிகழ்ச்சிகள் என ஆக்கபூர்வமான விஷயங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
‘‘கோடிக்கணக்கான ரூபாயை ஆண்டுதோறும் பல நிகழ்ச்சிகளை நடத்த செலவழிக்கிறோம். நல்ல எண்ணங்களை மக்கள்கிட்ட பரப்பும் முயற்சியில் எங்களுக்குத் தேவையான விளம்பரமும் கிடைக்குது. மத்தவங்களுக்கு நல்லதும் நடக்குது. நல்ல எண்ணம் இல்லாத ஒரு மனிதரால் ரொம்பவே கஷ்டப்பட்டோம். எங்களைக் கஷ்டப்படுத்தின அந்த மனிதரை வெறுக்கிறதுக்குப் பதிலா, மத்தவங்கள யாரும் கஷ்டப்படுத்தாம இருக்க நல்ல எண்ணங்களைப் பரப்புவோம்னு நினைச்சோம். அது எங்க வாழ்க்கையில் மட்டும் இல்லாம, நிறைய பேர் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தியிருக்கு.
சின்ன வயசுல என்னைச் சுத்தி பணம் அதிகமா இருந்துச்சு. ‘எனக்கு இது வேணும்’னு வாய்திறந்து நான் எதையுமே கேட்டதில்லை. எல்லாமே கேட்காமலேயே கிடைச்சது. தாத்தா காலத்தில் கேரளாவுல வசதியா இருந்த குடும்பம். பாலக்காடு பக்கத்துல ‘நெம்மரா’ன்னு ஒரு கிராமம். தாத்தாவுக்கு விவசாயம்தான்! அப்பா காலத்துல திடீர்னு கஷ்டம். கடனை எல்லாம் அடைச்சிட்டு, பஸ்சுக்குக்கூட காசு இல்லாம, நடந்தே கோயம்புத்தூர் வந்திருக்காங்க. எந்தக் கஷ்டத்தையும் வாய் திறந்து யார்கிட்டேயும் சொல்ல மாட்டார் அப்பா. ‘கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’ என்கிற பக்குவம் உள்ளவர்.
அந்தக் காலத்துல வீட்டுக்கு வீடு மில் தொழிலாளர்கள் இருக்கிற கோயம்புத்தூரில், ஆண்-பெண் ரெண்டு பேருமே வேலைக்குப் போவாங்க. தொழிலாளர்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரைன்னு பொட்டலம் கட்டி சாப்பாடு விற்பனை செஞ்சாங்க. வீட்டுல இருக்கற அத்தனை பேரும் வேலை பார்ப்பாங்களாம். காலையில் அஞ்சு மணிக்கு ஆரம்பிக்கிற வேலை, இரவு பத்து மணிக்கு மேல் தூங்கப் போறப்ப முடிவுக்கு வரும். ருசியான அய்யர் வீட்டுச் சாப்பாடு, அப்படியே சின்ன ஓட்டலா உருவெடுத்தது.
நாளுக்கு நாள் வாழ்வில் நல்ல முன்னேற்றம். அப்பாவின் நெருங்கிய ஒரு உறவினரும் உடன் இருந்தார். அப்பா அடுப்படி வேலைகளைப் பார்க்க, நிர்வாகத்தை உறவினர்தான் கவனித்தார். எத்தனை பேர் சாப்பிட என்னென்ன பொருள்கள் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்யத் தெரிந்தவருக்கு, இத்தனை பேர் சாப்பிட்டால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்கிற கணக்கைப் பார்க்கத் தோணவில்லை. வரவு- செலவு அனைத்தையும் உறவினரிடம் நம்பி ஒப்படைத்தார். அவரும் பொறுப்பாக நடந்து கொண்டார். சின்ன ஓட்டல் சற்றே பெரிய ஓட்டலாக மாறியது. அதே இடத்தில் இனிப்பு வகைகள் சிலவற்றைப் போட்டு விற்பனை செய்தார்கள். அப்பாவின் கைப்பக்குவத்தில் இனிப்பு வகைகளின் ருசி, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தது. வீட்டிற்கும் வாங்கிப் போனார்கள். அப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் வாழ்வின் திருப்புமுனை. சாப்பாட்டைவிட, இனிப்பு, காரங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
நான் பிறந்து வளரும்போதே, எங்களுக்கு வசதியான வாழ்க்கையும் வந்தது. அத்தனைக்கும் அப்பாவின் அசராத உழைப்பே காரணம். ‘நான் இந்த மாதிரி எல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன்பா’ என்று ஒருநாளும் அவர் சொன்னதில்லை. மத்தவங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன். நான் வீட்டில் மூத்த பையன். ‘பையன் பரம சாதுவா இருக்கானே’ என்பதுதான் வீட்டிற்கு வருபவர்கள், கிளம்பிப் போகும்போது எனக்குத் தரும் நற்சான்றிதழ். ‘சமத்துப் பையன்’ என்று யாராவது அழைத்தால் அதன் அர்த்தம், ‘அசட்டு சமத்து’ என்பதுதான். அநியாயத்துக்கு சாதுவாக வளர்ந்தேன். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதற்கு முதல் சான்று குழந்தைகள்தான். துறுதுறுவென்று ஓடியாடிக்கிட்டே இருப்பாங்க. நான் ஆடாமல் அசையாமல் பொம்மையைப் போல அமைதியா இருப்பேன்.
எனக்கென்று தனியாக எந்தக் கருத்தும் இருக்காது. உட்காரச் சொன்னால் உட்காருவேன்; நிற்கச் சொன்னால் நிற்பேன். அதை யார் சொன்னாலும் கேட்பேன். படிப்பும் அவ்வளவாக ஏறவில்லை. ‘படிப்பும் இல்லாமல், சிந்தனையும் இல்லாமல் பையன் என்ன செய்யப் போகிறான்’ என்று கவலைப்படக்கூட அம்மா-அப்பாவுக்குத் தெரியாது. எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மைக்கு மற்றவர்கள் வைத்த பெயர் அமைதி. அதை அப்படியே நானும் நம்ப ஆரம்பிச்சுட்டேன்.
மனசுக்குள் நினைக்கிற விஷயங்களைக்கூட யார்கிட்டேயும் பகிர்ந்துக்கிட்டது இல்லை. எதுலேயும் ஆர்வம் இல்லாம எப்படி ஒருத்தனால இருக்கமுடியும்னு இப்ப நினைக்கிறேன். நான் அப்படி இருந்தேன் என்பது, நேத்து ராத்திரி கண்ட கனவு மாதிரி இருக்கு. ஆனா, இருபது வருஷத்துக்கு மேல் அந்தக் கனவில் இருந்திருக்கேன். விழிக்கவே இல்லை. கண்ணை திறந்துக்கிட்டிருந்தாலும், அது தூங்கின கணக்குதான்!
பி.காம் படிச்சிட்டு, எந்த வேலையும் பார்க்காம வீட்டில் சும்மா இருந்திருக்கேன். சுறுசுறுப்பா வேலை பார்த்து உலகத்தைக் கத்துக்க வேண்டிய வயசுல, வீட்டைத் தாண்டி வெளியே வந்தது இல்லை. படிப்பு முடிஞ்சு மூணு வருஷத்துக்குப் பிறகுதான், ‘பையன் சும்மா இருக்கானே’ன்னு அப்பாவுக்குத் தோணுச்சு. எனக்கும் எந்த வேலையும் செய்யாமல், அவரிடம் காசு கேட்கக் கூச்சமா இருந்தது. நான் வாழ்வில் முதல் அடி எடுத்து வைத்தது, அந்தக் கூச்சத்தால்தான்! சும்மா இருந்துகொண்டு சாப்பிடுவதும் தூங்குவதும் குற்றம் என்று மனதிற்குத் தோன்றிய கணத்தில் நான் மீண்டும் புதிதாகப் பிறந்தேன்னு சொன்னா பொருந்தும்.
‘இன்னொரு கடை போட்டால் நல்லா இருக்குமே’ என்று வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்த நேரம் அது. ‘பார்த்துக்க ஆள் இல்லை’ன்னு அப்பா மறுத்துக்கிட்டே இருந்தார். நான் பார்த்துக்குவேன்னு நம்பிக்கையா புதிய கிளை திறக்க முடிவெடுத்தார் அப்பா. எங்க ஓட்டல் கடை இருந்த தெருவில், நிறைய நகைக்கடைகள் இருந்தன. ‘நகைக்கடைத் தெரு’ன்னுதான் அதைச் சொல்லுவாங்க. கண்ணாடி ஷோகேஸில் நகைகளை பளிச்சென்று வச்சிருப்பாங்க. நல்ல வெளிச்சம் வர்றமாதிரி லைட்ஸ் பண்ணி இருப்பாங்க. சும்மா வர்றவங் களுக்குக்கூட, ‘உள்ள போய் பார்த்துட்டு வந்துடலாம்’னு ஒரு முறை போகத் தோணும் அழகு. ‘அப்பா செய்யுற ஸ்வீட்ஸ் எல்லாத்தையும் இந்த மாதிரி வைக்கலாமே’ன்னு பலமுறை நினைச்சிருக்கேன். ஆனா, வாய்திறந்து யார்கிட்டேயும் சொன்னதில்லை. முதன்முறையா அப்பாவிடம் சொன்னேன்.
‘இனிமேல் ஸ்வீட்ஸ் மட்டும் போடலாம். அதை ஷோகேஸ்ல வச்சு சுகாதாரத்தோடு விற்பனை செஞ்சா, நல்ல வரவேற்பு இருக்கும்’னு சொன்னதை நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ நிச்சயம் தயக்கம் இருந்திருக்கும். ‘பளபளானு லைட் போட்டு நகையை விக்கலாம். ஸ்வீட் கடையை கண்ணாடிக்குள்ள வச்சா யார் வாங்குவாங்க’ன்னு எதிர்ப்பு தெரிவித்தார் உறவினர். அப்பாவுக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால், ‘இப்படித்தான் இருக்கணும்’னு நான் உறுதியா நின்னது எனக்குப் பெரிய வரமா மாறியது. வாடிக்கையாளர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அப்போதுகூட அதை அப்பாவிடம் உரிமையாகக் காசு வாங்கும் முயற்சியாக நினைச்சேனே தவிர, அதை வச்சு வாழ்க்கையில் முன்னேறணும்னு யோசிச்சது இல்லை. குறைஞ்ச நேரம் மட்டுமே கடையில் இருப்பேன். மற்ற நேரத்தில் வீட்டில் படுத்துத் தூங்குவேன். கௌரவத்திற்கு வேலைக்குப் போவதாகவே இருந்தது.
வரவு-செலவு பார்த்த உறவினர், ஒரு நாள் திடீரென்று எங்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தினார். அதுவரை ‘உலகம் எப்படி இயங்கும்... மனிதர்கள் எப்படி ஏமாற்றுவார்கள்...’ என்றெல்லாம் தெரியாது. அதுவரை உழைத்து சேர்த்த அத்தனை பணத்தையும் அவருடையதாக ஆக்கிக் கொண்டார் உறவினர். ஏமாற்றும் மனிதர்கள் எவ்வளவு சுயநலமாக நடந்து கொள்வார்கள் என்பதை, காது பிடித்து திருகிக் கற்றுக் கொடுத்தது வாழ்க்கை...
(திருப்பங்கள்
தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்