ஊர்க்கதை





‘‘அம்மா... நம்ப சித்ராம்மா வீட்டுல இன்னைக்கு...’’ - வீட்டு வேலை செய்யும் லட்சுமி இப்படி ஆரம்பிக்க, ‘‘என்னடி? சொல்லு... சொல்லு...’’ என்று ஆர்வமானாள் அலமேலு.
‘‘கவலைப்படாதீங்கம்மா... சித்ராம்மா வீட்டுக்கு இனிமே நான் வேலைக்குப் போக வேண்டியதில்லை. அதனால நேரத்துக்கு உங்க வீட்டுக்கு வந்துடுவேன்...’’
‘‘அப்படி என்னடி அங்க என்ன நடந்தது?’’ - துருவித் துருவிக் கேட்டுப் பார்த்தாள் அலமேலு. எதிரில் இருக்கும் சித்ரா வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளை தினமும் லட்சுமி மூலமாக கேட்பது அலமேலுவுக்கு சீரியலைவிட சுவாரசியமாக இருக்கும். இன்றுதான் என்னமோ அங்கு நடந்ததைச் சொல்லாமல் முரண்டு பிடிக்கிறாள் லட்சுமி.
சட்டென்று அலமேலுவின் அலைபேசி அடிக்க, சலிப்புடன் எடுத்துப் பேசினாள்.

‘‘ஹலோ... அலமு அக்கா! நான் சித்ரா பேசுகிறேன்.’’
‘‘அட, என்ன சித்ரா... லட்சுமி நின்னுட்டாளா?’’
‘‘அவ நிக்கல. நான்தான் நிறுத்திட்டேன். அவளுக்கு தினமும் உங்க வீட்டில நடந்ததை என்கிட்ட கதை அளக்குறதுதான் வேலை. மத்த வீட்டுக் கதையைப் பேசாதேன்னு நானும் சொல்லிப் பார்த்துட்டேன். அவளால முடியலை. அதான் வேற ஆள் பார்த்துட்டு, அவளை நிறுத்திட்டேன்...’’ என்றாள் சித்ரா.
இத்தனை நாளாக தன் கத்தி தன்னையே பதம் பார்த்ததை அறிந்து வாயடைத்து நின்றாள் அலமேலு!