இரவல்
‘‘கௌரி, அந்தப் பேப்பரை எடு. பாங்க் கொள்ளை பத்தின நியூஸ் பாக்கணும்’’ - சோபாவில் அமர்ந்தபடி கேட்டான் பாலாஜி.
‘‘காலையில பக்கத்து வீட்டு பார்வதி அக்கா வாங்கிட்டுப் போச்சுங்க. அப்புறமா வாங்கித் தர்றேன்’’ - காபி கலந்தபடியே பதில் தந்தாள் கௌரி.
‘‘எப்ப பார் எதையாவது இரவல் கொடுத்துக்கிட்டு... இந்தப் பழக்கத்தை மாத்தவே மாட்டியா?’’ - பாலாஜி சிடுசிடுத்தபோதே, கோடி வீட்டு கீதா மூச்சிரைக்க ஓடி வந்தாள்.
‘‘அக்கா! நம்ம பவானியக்கா ரோட்டுல நடந்து போகும்போது அவ கழுத்து செயினை திருடன் அறுத்துட்டுப் போயிட்டானாம்...’’
‘‘ஐய்யயோ! காலையிலதானே அவ என் செயினை கல்யாணத்துக்குப் போகணும்னு இரவல் வாங்கிட்டு போனா... அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே’’ என்று அலறினாள் கௌரி. ‘‘பயப்படாதீங்கக்கா! அந்தத் திருடங்க கடைத் தெரு பக்கம் போகும்போது, நம்ம பார்வதியக்கா வீட்டுக்காரர் அடையாளம் தெரிஞ்சு சொல்லிட்டார். எல்லாரும் மடக்கிப் பிடிச்சு நகையை மீட்டுட்டாங்க. அதே திருடங்க தான் போன வாரம் பாங்க்ல வேற கொள்ளையடிச்சாங்களாமே... பேப்பர்ல போட்டோ பார்த்ததா பார்வதியக்கா வீட்டுக்காரர்தான் சொன்னார்’’ என்று வயிற்றில் பாலை வார்த்தாள் கீதா.
இரவல் கொடுப்பதிலும் ஒரு நன்மை இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் பாலாஜி.
|