அப்பா
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். கொல்லைப்புறத்தில் நண்பன், மனைவி, குழந்தைகள் என குடும்பமே சேர்ந்து கன்றுக்குட்டி சைசில் இருந்த வெளிநாட்டு நாயைக் குளிப்பாட்டியபடி குதூகலமாக இருந்தார்கள்.
‘‘வாடா’’ என்றபடி கைகுலுக்க வந்தான் நண்பன். ‘ஹி... ஹி...’ என்று இளித்து கையை இழுத்துக்கொண்டேன். உபசரிப்பின்போது கூட நண்பனின் பேச்சு முழுக்க அவன் புதிதாக வாங்கியிருந்த வெளிநாட்டு நாயைப் பற்றித்தான் இருந்தது. அதன் உணவு முறை, பழக்க வழக்கம், அதன் சேட்டைகள், வீரதீர பராக்கிரமங்கள் என்று பெருமை பொங்க, எனக்கு போரடிக்கும் அளவுக்கு பேசினான்.
நான் சட்டென்று நினைவுக்கு வந்தவனாகக் கேட்டேன், ‘‘ஆமா... எங்கேடா உங்கப்பா? வந்ததுல இருந்து பாக்கறேன்... ஆளையே காணோம்?’’
‘‘ப்ச்... வயசு எழுபதுக்கு மேல ஆச்சுடா. உடம்புல பிரச்னைகள் அதிகமாயிடுச்சு. குளிக்க, சாப்பிடன்னு எல்லாத்துக்கும் உதவி தேவைப்படுது. படுக்கையிலேயே பாத்ரூம் போயிடறார். கிளீன் பண்ண மனைவி தயங்கறா. அதனால முதியோர் இல்லத்துல சேர்த்திருக்கோம். அங்க தனியா ஆளெல்லாம் போட்டு நல்லா பாத்துக்கறாங்கடா’’ என்றான் அவன் கூச்சமே இல்லாமல்.
வெளிநாட்டு நாய்க்குக் கூட அந்த பதில் புரிந்தது போல... அது கோபமாக ‘வள் வள்’ என்று குரைத்துத் தீர்த்தது!
|