ரா.கி.ர.வின் லாஜிக்





ஒரு காலகட்டத்தில் ரா.கி.ர.வுடன் வெற்றிலைச் செல்லம் தொத்திக்கொண்டிருந்தது. தஞ்சை மாவட்டத்துக்கே உரிய விசேஷ கலாசார அடையாளமாக கும்பகோணம் வெற்றிலை. வறுத்த சீவல், வாசனைச் சுண்ணாம்பு எப்போதும் பெட்டி நிரம்ப இருக்கும். ஸ்டாக் குறையாமல் பார்த்துக்கொள்வது திருமதி ரா.கி.ர.வின் கடமை.

கற்றாரைக் கற்றார் காமுறுவது போல, வெற்றிலைப் பாக்குப் பிரியர்களை சந்திக்க நேர்ந்தால் ரா.கி.ர. ரொம்ப சந்தோஷப்படுவார். நண்பருடன் அவர் வெற்றிலை போடும் அழகை நான் ரசித்துப் பார்ப்பேன்.

‘‘போட்டுக்கிறீங்களா?’’ என் பக்கம் அந்த வெற்றிலைப் பாக்குப் பெட்டியை நகர்த்துவார்.

நான் இரண்டு மூன்று வெற்றிலையை அள்ளி, அதில் கொஞ்சம் சீவலை வைத்துக் கசக்கி (வெற்றிலைக்குக் காம்போ நரம்போ கிழிக்காமல்) ஒரு சுருட்டுச் சுருட்டி வாயில் போட்டுக் கொள்வேன்.

ரா.கி.ர. தன்னை யாரோ சித்திரவதை செய்துவிட்டதுபோல, ‘‘ஐயோ! நான் மடித்துத் தருகிறேன், கொடும்’’ என்று துளிர் வெற்றிலையை எடுத்து, அதை வேட்டி மடிப்பில் நிதானமாகத் துடைத்து ஈரம் போக்கி, சுண்ணாம்பு தடவி நுனியைக் கிள்ளி எறிந்துவிட்டு, நெட்டுவசமாக மடித்து, காம்பையும் நரம்பையும் கிள்ளிவிட்டு, கொஞ்சம் சீவலை உள்ளங்கையில் வைத்து சிறுசாக அரக்கி முதலில் வாயில் போட்டுக் கொண்ட பின், நரம்பு, காம்பு, நுனி நீக்கிக் கிழிக்கப்பட்ட பெற்ற வெற்றிலையை மடித்து போட்டு கொள்ள - வாயில் சீவல் ஊறிக்கொண்டிருக்கும். அந்த ரசக் கலவையில் இந்த வெற்றிலை ருசியும் இணைய, சுவைப்பது ஒரு அலாதி ரசனைதான்.



வாசனைப் புகையிலை, பன்னீர் புகையிலை ரொம்பப் போட மாட்டார். ஆனால் சீராக வெட்டப்பட்ட புகையிலையை, தன் குட்டியின் கழுத்தைப் பிடித்துப் பூனை தூக்குவதுபோல் அவர் வாஞ்சையோடு நுனி விரல்களால் நாசூக்காக எடுக்கும் அழகு என்னைக் கவரும்.

எனக்கு அவர் புகையிலை தந்ததில்லை. நானும் கேட்டு வாங்காமல் வாசனை பிடித்ததுடன் சரி. கட்டாயப்படுத்த மாட்டார். தானும் எப்போதாவதுதான் போடுவார். பிற்காலத்தில் அவரது மனைவிக்கு உடம்பு படுத்தியபோது, விரதம் போலப் புகையிலை போடுவதையே நிறுத்து விட்டார். அப்புறம் வெற்றிலைச் செல்லத்துக்கே விடை கொடுத்துவிட்டார்.

ஒரு திட்டத்தைத் தொடங்குவதாகட்டும், அல்லது ஒரு பழக்கத்தை விடுவதாகட்டும்... ரா.கி.ர தனது சக்திக்கும் மீறி உறுதியோடு இருப்பதுதான் வழக்கம். அதுவும் சவால் என்று வந்துவிட்டால் சிங்கம்தான்.

எழுத்தாள நண்பர்களுடன் ஒரு சமயம் டூர் போனபோது, ரயிலில் ஒரு சவால். மரபுக் கவிதை எழுதத் தெரிந்த கவிஞர்களும் கூட வந்தனர். ஒரு ஈற்றடி கொடுத்து அவரவர் சாமர்த்தியம் சோதிக்கப்பட்டது.

ரா.கி.ர. ‘அவிட்டம்’ என்ற பெயரில் வேடிக்கையாக வசன கவிதை எழுதுவது வழக்கமே தவிர, மரபுக் கவிதை ஏதும் புனைந்ததில்லை. ஆனால் சவால் என்று வந்துவிட்டதால், போட்டியில் கலந்து கொண்டு, ஓடும் ரயிலில் கவிதை ஒன்று யாத்து முதல் பரிசும் பெற்றுவிட்டார்.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற கொள்கையில் தீவிரமானவர். அம்பாரம் அம்பாரமாக இரவும் பகலுமாக எழுதிக் குவிக்கும் ரா.கி.ர.வின் பேனா, மை நிரப்பி எழுதும் பழைய காலப் பேனாதான். குறைந்தது கால் பாட்டில் மை கொள்ளும் தடித்த பேனா. அந்த மசிக் கிணற்றிலிருந்துதான் ‘பட்டாம்பூச்சி’ பறந்தது. அந்த மசிக் கிணற்றின் கரையில்தான் அடிமை காதலித்தான். அந்த மசிக் கிணற்றில்தான் படகு வீடு மிதந்தது.

ரா.கி.ர. பேனாவுக்கு மை போடுவது ஒரு திரு(கு)விழா. அதை சகாக்களான நானும் புனிதனும் பார்த்து ரசிக்கக் கொடுத்து வைத்தவர்கள். பேனாவுக்கு மை போட அதன் கழுத்தைத் திருகியாக வேண்டும். அவரைத் தவிர யாராலும் அந்தப் பேனாவின் கழுத்தைத் திருக முடியாது. ஒவ்வொரு தடவையும் புனிதனோ, நானோ அவருக்கு உதவுவதாக எண்ணி, ‘‘இப்படிக் கொடுங்க... கழற்றித் தர்றேன்’’ என்றவாறு வாங்கி தோல்வியையே தழுவி இருக்கிறோம். அவரது பேனா மட்டுமல்ல... சுற்று வட்டாரத்தில் எந்தப் பேனாவின் ‘நெக்’ அடம்பிடித்தாலும் ரா.கி.ர.வின் சமஸ்தானத்துக்குத்தான் வருகை.

அவரது கலகலப்பான இயல்பும் நகைச்சுவையும் எழுத்தில் மட்டுமல்ல... நடைமுறை வாழ்க்கையிலும் எப்போதும் பிரகாசிக்கும்.

ஒரு தினம் மாலை காரியாலயத்திலிருந்து எங்கள் கோஷ்டி (ரா.கி.ர., புனிதன், ஜ.ரா.சு) வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஒரு சவ ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. எங்கள் காரியாலயம் இருந்த இடம் ஓட்டேரி இடுகாட்டுப் பக்கமாதலால் அடிக்கடி இந்த ரகக்காட்சி தென்படும்.

எங்களுடன் வந்துகொண்டிருந்த ரா.கி.ர. சட்டென்று நின்றார். ‘‘ஒரு நிமிஷம் பயந்தே போய்விட்டேன்’’ என்றார்.
‘‘எதற்கு ஸார்?’’ என்றேன்.

‘‘முன்னாலே நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறானே சிவப்பா, ஒல்லியா ஒரு பையன்... அவனைப் பார்த்ததும் திக்கென்று ஆயிட்டது. ஸ்ரீதர் எங்கே இங்கு வந்து சேர்ந்தான் என்று பயந்து விட்டேன்.’’ (ஸ்ரீதர் அவருடைய மூத்த பிள்ளை. விவேகானந்தாவில் அப்போது படித்துக்கொண்டிருந்தான். மகா துறுதுறுப்பு. அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் சுறுசுறுப்பாகப் பங்குகொள்வான். சுருக்கமாக லூட்டி மன்னன்!)

அன்று ஊர்வலத்தின் முன் தணல் சட்டியுடன் சென்று கொண்டிருந்த இளைஞன் அசப்பில் ரா.கி.ர. குறிப்பிட்டது போல் மகன் ஸ்ரீதர் மாதிரிதான் இருந்தான். ரா.கி.ர. ஓரிரு நிமிடத்துக்குப் பின் சொன்னார். ‘‘அப்பாடா. எனக்கு நிம்மதியாச்சு. எதையும் சற்று நிதானமாக யோசித்தால் குழப்பம் தீர்ந்துவிடுகிறது’’ என்று சிரித்தார்.

‘‘என்ன குழப்பம்? எப்படித் தீர்ந்தது?’’ என்றேன்.
‘‘அவன் ஸ்ரீதரோ என்று ஒரு கணம் பதறிவிட்டேன். ஆனால் நிதானமாக யோசித்தேன். ‘தணல் சட்டி தூக்கிச் செல்கிறவன் ஸ்ரீதராயிருந்தால், படுத்திருப்பவர் அவன் அப்பாவாக இருக்க வேண்டும். ஆனால் நான்  இதோ உங்களுடன் இருக்கிறேன். லாஜிக் சரிதானே?’’ என்று சிரித்தார்.

‘‘அநியாயம் ஸார், எதுக்குத்தான் ஜோக் அடிப்பது என்பது இல்லையா?’’ என்று அவரைச் செல்லமாகக் கண்டித்தோம்.
‘‘மனிதர்கள் சாகலாம். ஜோக்குகள் சாகிறதில்லை!’’ என்று சொல்லிப் புன்னகைத்தார்.

ஆமாம் அவர் சொன்னது சரிதான். அவர் மறைந்துவிட்டாரே தவிர அவரது நகைச்சுவையும் எழுத்தும் மறையவே மறையாது