மனசு





ஊரில் தன்னோடு ஹோட்டல் வேலையில் உதவியாக இருந்த மகன் கைலாஷ் சென்னையில் தனியாக ஹோட்டல் தொழில் நடத்தப் போய் மூன்று மாதம் ஆகிறது. அவன் எப்படி ஹோட்டலை நடத்துகிறான் என்று பார்த்து வரப் புறப்பட்டார் பவுலையா.

ஒருநாள் முழுக்க ஹோட்டலில் உட்கார்ந்து, என்னென்ன நடக்கிறது என்று உன்னிப்பாக கவனித்தார். இரவு பதினோரு மணிக்கு கைலாஷை அழைத்து சில மாற்றங்கள் செய்யச் சொன்னார்.
‘‘இந்தாப்பா, உன் ஹோட்டல்ல முதல்ல டோக்கன் சிஸ்டம் போடணும். மத்தியான சாப்பாடு நாற்பத்தி எட்டு ரூபாய். இத ஐம்பது ரூபாய்னு மாத்திடணும். சில்லரைத் தட்டுப்பாடு இருக்குற இந்தக் காலத்துல ரெண்டு ரூபா திருப்பிக் குடுக்கிறது உனக்குக் கஷ்டமா இருக்கும். நான் சொல்றது சரிதானே...’’

‘‘அப்பா, நம்ம கடை முன்னால சில பிச்சைக்காரங்க சாப்பிட்டு வர்றவங்க கிட்ட கை நீட்டுவாங்க. அவங்க கையில் மிச்சமிருக்கிற சில்லரையைப் போடுவாங்க. நாம முன்னாடியே டோக்கன் வாங்கிக்கிட்டு சாப்பாடு போட்டா, சிலவேள அவங்களுக்கு சில்லரை காசு போட மனசு வராம போயிடும். அதனாலதாம்பா டோக்கன் சிஸ்டம் போடல. ரேட்டையும் ரெண்டு ரூபா ஏத்தல...’’

தனது மகனின் நல்ல மனசை நினைத்து ஒரு கணம் அசந்தார் பவுலையா.