சுட்ட கதை சுடாத நீதி
ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்தான் அவன். ‘கொலையை அவன்தான் செய்திருக்கிறான்’ என்பதை ஆணித்தரமான வாதங்களின் மூலம் நிரூபித்தார் அரசுத் தரப்பு வழக்கறிஞர். அதை எதிர்த்து பலவீனமாக வாதாடிக் கொண்டிருந்தார் அவனது வழக்கறிஞர். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. கொல்லப்பட்டவரின் சடலம் கடைசிவரை கிடைக்கவில்லை. கைது செய்தபோது, அவனிடம் எப்படி எப்படியோ விசாரித்து விட்டது போலீஸ். அவன் அசைந்து கொடுக்கவில்லை. ‘கொலைக்கு பிரதான ஆதாரமே அதுதானே! வெறும் சூழ்நிலைகளை வைத்து எப்படி தண்டனை தரமுடியும்?’ என நம்பினார் அவர்.
ஆனால் இன்றைக்கு நடந்த இறுதிக்கட்ட வாதங்களின்போது, நீதிபதி அவனை ஒரு கொலையாளி போலவே பார்த்ததாக அவருக்குத் தெரிந்தது. எனவே தனது வாதங்களின் கடைசி கட்டமாக ஒரு அஸ்திரத்தை எடுத்துவிட்டார்.
‘‘யுவர் ஆனர்! என் கட்சிக்காரர் யாரைக் கொலை செய்ததாக போலீஸ் அவர்மீது வழக்குப் போட்டதோ, அந்த நபர் இன்னும் ஒரு நிமிடத்தில் இங்கே வருகிறார். நீங்களும் பாருங்கள்’’ என்றார் அவர். நீதிபதி, வழக்கறிஞர்கள், போலீசார் என எல்லோர் பார்வையும் வாசலில் நிலைகுத்தியது. ஆனால், நிமிடங்கள் கடந்தும் யாருமே வரவில்லை.
அவனது வழக்கறிஞர் நீதிபதியைப் பார்த்து, ‘‘மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்! நீங்களும் வாசலைப் பார்த்தீர்கள். வழக்கு போட்ட போலீசாரும் பார்த்தனர். அப்படியானால், என் கட்சிக்காரர் கொலை செய்யவில்லை என்பதை நீங்களும் போலீசும் நம்புவதாகத்தானே அர்த்தம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு கொடுங்கள்’’ என்றார்.
ஆனாலும் நீதிபதி அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அவனது வழக்கறிஞர் குழப்பத்தோடு பார்க்க, நீதிபதி தீர்க்கமாக சொன்னார். ‘‘எல்லோரும் வாசலைப் பார்த்தோம். ஆனால் உமது கட்சிக்காரர் பார்க்கவில்லை. அவன் உயிரோடு திரும்பிவர முடியாது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் தண்டனை...’’ எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!
|