தமிழ் சினிமாவின் புதிய கேப்டன்...





இந்த டிஜிட்டல் யுகத்துல
ஃபிலிம்ல படமெடுக்கிறதே சாதனையா ஆகிட, ஃபிலிம் கேமரா உள்பட ஆறு விதமான கேமராக்கள்ல ‘கண்டதும் காணாததும்’ படத்தை எடுத்திருக்காங்க. அதுல இப்ப சினிமால பிரபலமாகிக்கிட்டு இருக்க ரெட், 5டி, 7டி கேமராக்களோட செல்போன் கேமராவிலும் படமெடுத்திருக்கிறதைக் கேள்விப்பட்டப்ப அதிசயமா இருந்தது. டைரக்டர் சீலன், கேமராமேன் விஜய் மில்டன்கிட்ட அசிஸ்டன்ட்டா இருந்ததால இப்படி புதுமை செய்திருக்காரோன்னு தோணிச்சு. அவர் சொன்ன விஷயம் வேற... ‘‘டிஜிட்டல் சினிமால எந்தக் கேமரால எடுத்தாலும் அதை மேட்ச் பண்ணிக்கிற வசதி இருக்கு. அதனால செலவைக் குறைக்க இப்படி இடத்துக்குத் தகுந்தமாதிரி செல்போன்லேர்ந்து செல்லுலாய்ட் வரை எடுத்தோம். விகாஷும், சுவாஷிகாவும் நடிக்கிற இந்தப் படக்கதை கல்லூரிக் காதலை சொன்னாலும், வழக்கமான ராகிங், ஃபேர்வல், காலேஜ் எலெக்ஷன் இல்லாம எடுத்திருக்கோம். டெக்னிக்கலாவும் புதுமைகள் இருக்கு. ஒரு காட்சி அமெரிக்காவில எடுக்க வேண்டியிருக்க, அங்கேயிருந்த புரட்யூசர் சங்கரநாராயணனே நான் சொன்னதுபோல செல்போன்லயே ஷூட் பண்ணி அனுப்பிட்டார். அவர் சாஃப்ட்வேர் எஞ்சினியரானதால ‘அடோப்’லயே எடிட்டிங்கையும் சாத்தியமாக்கிட்டார்...’’னார். விட்டா படத்தை ப்ளூ டூத்லயே ரிலீஸ் பண்ணிடுவாரோ..?



ஐபிஎல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை ஊக்குவிக்க சென்னை இளைஞர்கள் பாப் சையத், இம்தியாஸ் கனி, கார்த்திக் ஸ்ரீனிவாஸ் சேர்ந்து ‘வா மச்சா(ன்) வா’ன்னு ஒரு பாடல் ரெடி பண்ணி, அதை நம்ம ‘சென்னை ரைனோஸை’ விட்டு வெளியிட்டாங்க. விஷால், விஷ்ணு, விக்ராந்த், ரமணா, சாந்தனு, பிரித்வின்னு சென்னை ரைனோஸ் வீரர்கள் கலந்துக்கிட்ட ஃபங்ஷன்ல ஆடியோவைப் பாராட்டிப் பேச விஷாலை மேடைக்கு அழைச்ச பி.ஆர்.ஓ. நிகில் முருகன், ‘‘தமிழ் சினிமாவின் ‘புதிய கேப்டன்’ விஷால் பேசுவார்...’’னு அறிவிக்க, பதைபதைக்க மேடைக்கு வந்த விஷால், ‘‘என்னை தமிழ் சினிமாவோட புதிய கேப்டன்னு சொன்னது நிகிலோட தனிப்பட்ட கருத்து. அதுல எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை...’’ன்னு மறுப்பு தெரிவிச்சார். ‘கேப்டனா’ இருக்கிறதுல அத்தனை ஆபத்தா விஷால்..?