‘‘முடியாத காலத்தில் பிள்ளைகள் பார்த்துக்குவாங்க என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகிற இந்தக் காலத்தில், மற்றவர்களின் உதவி தேவைப்படுகிற முதியவர்கள்தான் சம்பளம் வாங்காத வாட்ச்மேன்களாக வீடுகளில் இருக்கிறார்கள்...’’ - அமைதியாக வெளிப்பட்டாலும், அறைகின்றன டாக்டர் நடராஜனின் வார்த்தைகள். முதியோர் தனியாக வசிப்பது என்பது, இன்று சமூகப் பிரச்னையாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறி இருக்கிறது. தனியாக இருக்கும் முதியவர்களை மிரட்டி கொள்ளையடிக்கிற நிகழ்ச்சிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. ‘‘தனிமையே அவர்களை நிலைகுலைய வைத்துவிடும்’’ என்கிறார் நடராஜன்.

‘‘குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பதைவிட, முதியோர்களுக்கு மருத்துவம் பார்ப்பது சிரமமானது. பலவீனமாக வருகிற குழந்தையை ஆரோக்கியமாக மாற்றி அனுப்புவது சுலபம். ஆனால், பலவீனமான முதியோர்களை மேலும் பலவீனப்படாமல் தேற்றி அனுப்புவதே சவால். உடல்நலம், மனநலம், செயல்திறன், குடும்பநலம் ஆகிய நான்கு கோணங்களில் சிகிச்சை தர வேண்டும். என் குருநாதர் அண்ணாமலை என் மீது நம்பிக்கை வைத்து, ‘முதியோர் மருத்துவம்’ படிக்க பரிந்துரை செய்தார். என் மீது அடுத்தவர்கள் வைத்த நம்பிக்கை யிலிருந்தே, என் பலத்தை தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆசியாவிலேயே யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு படிப்பை சொந்த செலவில் படித்துவிட்டு, மீண்டும் அரசு மருத்துவமனையில் வந்து வேலை செய்யப் போகிறேன் என்பதைப் புரிய வைத்த பிறகே, வெளிநாடு போக அனுமதி கிடைத்தது. 1974ம் ஆண்டு லண்டன் புறப்பட்டேன். வள்ளலார்புரம் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனை, லண்டன் மாநகரம் வரவேற்றது. குளிரில் மிகவும் சிரமப்பட்டேன். சென்னையில் ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகிற செலவு, லண்டனில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஆனது. ஒரு வேளை சாப்பிட்டு, மறுவேளை விரதம் இருப்பது என வாழ்க்கை நகர்ந்தது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற முதியோர் மருத்துவ நிபுணர் மைக்கேல் ஹால் என்னை கவனத்துடன் பார்த்துக் கொண்டார். முதல் மூன்று மாதங்கள் என்னை அவருடனே வைத்துக்கொண்டார். முதியவர்களை அவர் அணுகும் விதத்தை அருகிலிருந்து பார்ப்பது பெரிய வரமாகவே இருந்தது. நான் பணத்திற்கு சிரமப்படுவது தெரிந்து, கேட்காமலேயே 100 பவுண்ட் கடன் பெற ஏற்பாடு செய்தார். அந்த நாட்டின் உணவு, சூழல், மனிதர்கள் எல்லாம் மெதுவாகப் பழக ஆரம்பித்தது. இரவும் பகலும் பயிற்சியிலேயே போனது.

கடவுள் சோதிக்க ஆரம்பித்தால், திணறிப்போகிற அளவு சோதிப்பார் என்பது அப்போதுதான் புரிந்தது. ‘இறந்து போனால் கொள்ளி வைக்க பிள்ளை இருக்கு’ என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்த அம்மா இறந்தபோது என்னால் இறுதிக்கடன் செலுத்த வர முடியவில்லை. என் துறையில் எத்தனையோ அங்கீகாரங்கள் கிடைத்தபிறகும், இப்போது வரை என்னை உறுத்தும் சோகம் அது. அந்த நாளில் வெளிநாட்டுப் பயணம் என்பது புதிய ஜென்மம் எடுப்பதைப்போல இருந்தது. அரசாங்க நடை முறைகள், பயண நேரம், விமானக் கட்டணம் உள்ளிட்ட பல விஷயங்கள் நினைத்த நேரத்தில் கிளம்பி வரமுடியாத இயலாமையை உருவாக்கின. அம்மாவைப் போல இருக்கும் பலரைக் காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு உணர்த்தவே, அவரின் கடைசிப் பயணத்தில் முகத்தைப் பார்க்கிற கொடுப்பினை இல்லாமல் போனது என்று நினைக்கிறேன். கண் முன்னால் எத்தனையோ மரணங்களைப் பார்த்தாலும், பெற்ற தாயின் மரணம் மனதளவில் என்னை நிலைகுலையச் செய்தது. வலி வெறியாக மாறியது. என்னுடைய அத்தனை பலங்களையும் திரட்டி, அந்தத் துறையில் முக்கிய ஆளாக வரவேண்டும் என உழைக்க ஆரம்பித்தேன். சில மணிநேர உறக்கத்தைத் தவிர வேறெதுவும் தெரியாத நாட்கள் அவை. பல்கலைக்கழகத்தின் உச்சபட்ச அங்கீகாரங்களுடன் 4 வருடப் பயிற்சியை முடித்து நாடு திரும்பினேன்.
மீண்டும் சென்னை அரசு பொது மருத்துவமனையின் வார்டு எண் 5. நான் கற்றுக் கொண்டதை செயல்படுத்த வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. என் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்திய பேராசிரியர் அண்ணாமலை ஓய்வு பெற்றிருந்தார். ‘ஏற்கனவே பார்த்த வேலையைத் தொடர்ந்து பார்ப்பதற்காக, நான்கு ஆண்டுகள் வெளிநாட்டில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்வி தினமும் என் மண்டையைக் குடையும். ‘எல்லா நோயாளிகளும் ஒண்ணுதானே. அப்புறம் எதுக்கு வயசானவங்களுக்கு மட்டும் தனித் துறை’ என மருத்துவர்களே கேட்டார்கள். ‘முதியோர் இல்லம் நடத்த ஆசைப்படுறார் நடராஜன்’ என்றனர். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் அந்தச் சூழலில் என்னை வழி நடத்தியது.
தோல் மருத்துவ நிபுணர் தம்பையா, என் துறைத்தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உதவியால், ‘முதியோர் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு’ தொடங்க அனுமதி கிடைத்தது. அரசு நிறுவனங்களில் புதிதாக எந்த செலவும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். காலையில் என் துறையில் வேலை பார்த்துவிட்டு, மதியத்திற்கு மேல் முதியோரைப் பரிசோதிப்பதில் செலவு எதுவுமில்லை. ஆனால், எனக்கு ஏற்கனவே உள்ள வேலையை முடித்துவிட்டுத்தான் முதியோர் மருத்துவ நலனில் ஈடுபடமுடியும். நான்கு வருட உழைப்பு வீணாகாமல் இருந்தால் போதும் என்றுதான் எனக்கு இருந்தது.
1978 ஏப்ரலில் நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்களுக்காக, ‘முதியோர் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு’ தொடங்கப்பட்டது. ஆர்வத்தோடு வந்தார்கள் முதியவர்கள். அவர்களை மதியம் வெயில் நேரத்தில் வரவழைக்கிற நிலைக்குத்தான் மனம் வருத்தப்படும். அவர்களின் ஆதரவு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்குள் வந்த முதல் நம்பிக்கைக் கீற்று. தற்காலிக சிகிச்சை அளிக்கமுடிந்தது. ஆனால் முதியவர்களை அட்மிட் செய்து சிகிச்சையளிக்க வார்டு இல்லை. அதற்காக ஆரம்பித்தது அடுத்த போராட்டம். இதற்காக அரசு அலுவலகங்களின் வாசலில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பேன். அவ்வளவு பொறுமை எனக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ‘ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டாகவோ, கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டாகவோ இருந்தால் இவ்வளவு சிரமங்கள் இருந்திருக்குமா’ என்கிற கேள்வி எனக்குள் ஒருமுறைகூட வந்தது இல்லை. பிரச்னைகளோடு வருகிற முதியவர்களை, சிரித்த முகத்துடன் அனுப்பி வைப்பதில் பெரிய மனநிறைவு கிடைத்தது. என்னை சோர்ந்துவிடாமல் போராட வைத்தது அதுவாகத்தான் இருக்கும். நான் நீட்டிய ஃபைலை ஒரு அதிகாரி வீசி எறிந்திருக்கிறார். ‘வெளிநாடு போய் எதையோ ஒண்ணை படிச்சிட்டு வந்துட்டு, தனியா டிபார்ட்மென்ட் வேண்டும்னு உயிரை எடுக்கிறீங்க’ என்ற அவரின் வசை மொழிகள் கண்ணில் நீரை வரவழைத்தன. 1978ல் தொடங்கிய போராட்டம் 1988ல் வெற்றி பெற்றது. 10 படுக்கைகளோடு முதியோர் மருத்துவத்திற்கு என தனித்துறை நாட்டிலேயே முதன்முதலாக உருவானது. 1200 சதுர அடியில், பழைய தட்டுமுட்டு சாமான்கள் இருந்த இடத்தை காலி செய்து பத்து படுக்கைகளைப் பெறுவதற்குத்தான் இந்தப் போராட்டம். முதியவர்களுக்கான சிறப்பு பிரிவு, முதல் மாடியில் அமைந்த விநோதத்தைத் தடுக்க முடியவில்லை.
தொடர் சிகிச்சைகளோடு புள்ளி விவரங்களையும் சேகரித்தோம். சிகிச்சை பலன் அளித்து வீடு திரும்பியவர்கள் எத்தனை பேர், இறந்து போனவர்கள் எத்தனை பேர் என்கிற கணக்கெடுப்பு அனைவரின் கண்களையும் திறந்தது. எல்லா வசதிகளும் இருக்கிற துறைகளில் 11.5% என இருந்த இறப்பு விகிதம், எந்த வசதியும் இல்லாத எங்கள் துறையில் 7% என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தோம். மற்றவர்களின் பார்வையில் மாற்றம் தெரிந்தது. வேலை செய்தால் மட்டும் போதாது, விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற யதார்த்தம் எனக்குப் புரிய பத்து ஆண்டுகள் ஆனது. சிகிச்சைக்கு வருகிற முதியவர்களுக்கு அதிகமான மனப் பிரச்னைகளே இருந்தன. பாதிப் பேருக்கு கவுன்சலிங் செய்ய வேண்டி இருந்தது. மருமகள் திட்டுகிறாள், மகன் கண்டுகொள்வது இல்லை, வீட்டில் பாரமாக பார்க்கிறார்கள் என்கிற குடும்பப் புறக்கணிப்புகள் வயதானவர்களை அதிகம் பாதித்தன. பலர் குணமான பிறகும் வீட்டிற்குப் போக மனம் இல்லாமல், ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி மருத்துவமனையிலேயே தங்கினார்கள். வீட்டில் இருப்பவர்களை வரவழைத்து கவுன்சலிங் தருவேன். வயதானவர்களை தேவைப்படாத கரும்புச் சக்கைகளாக பார்க்கிற அவலம் இப்போது அதிகமாக இருக்கிறது. சிகிச்சை, ஆராய்ச்சி, கவுன்சலிங் மூலம் விழிப்புணர்வு என முப்பரிமாண முறையில் வேலை செய்தது எங்கள் துறை.
ஒருமுறை ஜெயித்துவிட்டால், அடுத்தடுத்து ஜெயிப்பது கொஞ்சம் சுலபம். 1996ல் நாட்டிலேயே முதன்முதலாக எம்.டி முதியோர் மருத்துவப் படிப்பு கொண்டுவர முடிந்தது. இந்திய நாட்டின் முதல் இரண்டு ‘ஜீரியாட்ரிக்ஸ்’ மாணவர்களுக்கு நான் வழிகாட்டியானேன். சர்வதேச அளவில் முதியோர் மருத்துவ நிபுணர்களுக்கு பிரிட்டிஷ் ஜீரியாட்ரிக்ஸ் சொசைட்டி வழங்கும் கோல்டு மெடல் பெற்ற ஒரே இந்திய மருத்துவர் என்கிற அங்கீகாரம் கிடைத்தது. 35 ஆண்டுகளுக்கும் அதிகமாக கிடைத்த அனுபவத்தை புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். 25க்கும் அதிகமான புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். ஓய்வுபெற்ற பிறகு, மருத்துவப் பணியை சமூகப்பணியாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறேன். ‘முதியோர்களுக்கான நினைவாற்றல் மன்றம்’, மறதி ஒரு நோயாக முதியவர்களை முடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. மேல்மருவத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில், ஆதிபராசக்தி சித்தர் பீட ஆதரவுடன் மருத்துவ முகாம்கள் வாரா வாரம் நடக்கிறது. தலைவலி, ஜுரத்திற்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்து மணிக்கணக்கில் காத்திருக்க வைக்காமல், முதியோர் இருக்கும் இடம் தேடிச் சென்று எப்போது நாம் சிகிச்சை அளிக்கிறோமோ அப்போதுதான் முழுமையான நாகரிகம் அடைந்தவர்கள் ஆவோம்.
எனக்கு 72 வயதாகிறது. முதுமையடைந்த உணர்வு வராமல் பாதுகாக்கிற ரகசியம், என்னுடைய தொடர் செயல்பாடுகள்தான். மக்களுக்கு உதவ கடவுள் எனக்கு வாய்ப்பையும் தந்து, பதவியையும் தந்து, அங்கீகாரத்தையும் தந்திருக்கிறார். அவர் கொடுத்த வாய்ப்பை இன்னும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருக்கிறது’’ என்று மிடுக்கோடு எழுந்து புகைப்படத்திற்கு போஸ் தருகிறார் டாக்டர் நடராஜன். சிரிக்க முடிந்த முதுமைப் பருவம் அவருக்கு வரம் என்றால், முதியவர்களின் துயர் களைந்து அவர்களைச் சிரிக்க வைக்கிற அவரின் மருத்துவப் பயணம் 40 ஆண்டு கால தவம்!
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்