தமிழகத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுகிறது பன்றிக்காய்ச்சல். நோயைவிட அதுபற்றிப் பரவும் வதந்திகளே அதிகம் பீதியூட்டுகின்றன. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் அச்சம் தவிர்க்கிறார்... ‘‘கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், களைப்பு, பசியின்மை, தொடர் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகள். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனை செல்லவேண்டும். ரத்தம் மற்றும் சளியை பரிசோதிக்க வேண்டும். சென்னை, கோவை, நெல்லை, திருச்சி மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டிலும் சோதனை வசதி இருக்கிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தலாம். ‘டாமிப்ளூ’ மாத்திரை நிவாரணம் தருகிறது. பரிசோதனை முடிவுகள் வரும் முன்பாகவே கூட மாத்திரை சாப்பிடலாம்; பாதிப்பு இல்லை. தற்போது அரசு மருத்துவமனைகளில் 4 லட்சம் மாத்திரைகள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளன.

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசியும் ரெடி! இப்போது 25 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. முதலில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போடப்படும். இன்னும் சில தினங்களில் 2 லட்சம் தடுப்பூசிகள் வரும். அவை வந்ததும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். தேவை அதிகமிருந்தால், கூடுதலாக வாங்குவோம். தடுப்பூசி போடப்படும் இடம் பற்றி அந்தந்த பகுதிகளில் அறிவிப்பு வெளியிடப்படும்...’’
என்றார் பொற்கைபாண்டியன்.
- வெ.நீலகண்டன்