எப்படித் தயாராகுது பஞ்சாங்கம்?





வருடப்பிறப்புக்கு புத்தாடை வாங்குகிறார்களோ இல்லையோ, பஞ்சாங்கம் வாங்கத் தவறுவதில்லை பலர். சிலருக்கு தலைமாட்டில் பஞ்சாங்கம் இல்லாவிட்டால் உறக்கமே வராது. விதைப்பு தொடங்கி அறுவடை வரை எல்லா வேலையும் பஞ்சாங்கம் பார்த்துத்தான். பிறப்பு முதல் இறப்பு வரை எது நடந்தாலும் பஞ்சாங்கத்தை விரித்து வைத்துக் கொண்டு விவாதிப்பார்கள்.  இப்படி மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கிற அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பஞ்சாங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?


‘‘பஞ்சாங்கம்ங்கிறது வெறும் கணிப்பு இல்லை. சக்திமிகுந்த ரிஷிகள் எழுதியும், சொல்லியும் வைத்த கணக்கு. கிரகங்களோட சுற்றுப்பாதையின் அடிப்படையில செய்யப்படுற கால அட்டவணை. ஒருநாள் பொழுதுங்கிறது திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய அஞ்சையும் உள்ளடக்கினது. இந்த அஞ்சும் இயற்கையாவே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது. இந்த ஐந்தையும் கண்டுபிடிச்சு கணக்குப் போட்டு பலன் கணிக்கிறதுதான் பஞ்சாங்கம். அதாவது ஐந்தின் அங்கம்’’ - வயதின் முதுமைக்கே உரிய குழந்தை மொழியில் பேசுகிறார் சுந்தரம் குருக்கள். சுந்தரம் குருக்களுக்கு 104 வயது. கும்பகோணத்தை அடுத்துள்ள கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர். ஜோதிடம், சாஸ்திரம், ஆகமம், வேதம் அனைத்தையும் கரைத்துக் குடித்த பண்டிதர். அக்காலத்தில் இந்து அறநிலையத்துறையில் சிவாகமப் பிரிவில் தேர்வு அலுவலராக இருந்தவர். பழமையான ‘பாம்பு பஞ்சாங்க’த்தை உருவாக்கும் குழுவின் தலைவர்.



‘‘ஆங்கிலேயர்கள் வந்த பின்னாடி தான் டெய்லி காலண்டர். அதுக்கு முன்னாடி பஞ்சாங்கம்தான். அச்சு எந்திரம் வர்றதுக்கு முன்னாடி ஓலைச்சுவடிகள்ல கணிச்சாங்க. அப்போ மழைத்துளி பூமியில விழுகிற நேரம், நெல்மணி விழுகிற நேரம்னு இயற்கை நிகழ்வுகளை வச்சுத்தான் நேரத்தைக் கணிச்சு கணக்குப் போட்டாங்க. இன்னைக்கு கம்ப்யூட்டர்லயே கணிச்சுடுறாங்க. பஞ்சாங்கத்தில ரெண்டு வகை இருக்கு. வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம். வாக்கியப் பஞ்சாங்கம் ரிஷிகள் சொன்ன ஸ்லோகங்கள் அடிப்படையில உருவாக்கப்படுது. திருக்கணித பஞ்சாங்கம் நம் பழைய கணக்கீடு முறைப்படி உருவாகுறது. அதாவது, சந்திரனோட வட்டப்பாதையில ஏற்படுற இயக்கநிலை வித்தியாசங்களைக் கணக்கிட்டு உருவாக்குறது’’ என்று விவரிக்கிறார் சுந்தரம் குருக்களின் மகன் ஹரிகரன். பாம்பு வாக்கிய பஞ்சாங்க தயாரிப்புக் குழுவில் இவரும் ஒருவர்.



‘‘தமிழ் வருடங்கள் மொத்தம் 60. ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு வெண்பா இருக்கு. அந்த வெண்பாவை அடிப்படையா வச்சுத்தான் கணக்கு. கடந்த 60 வருடம் முன்னாடி வந்த நந்தன வருடத்தோட பலன்கள் இப்போ வர்ற நந்தன வருடத்துக்குப் பொருந்தாது. கிரகங்களோட மாற்றம், லீப் வருட மாற்றங்களை எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டுத்தான் கணிப்போம். ஒரு குழந்தை இன்னைக்குக் காத்தால 6.10க்கு பிறக்குதுன்னு வச்சுக்கோங்க... அப்போ என்ன திதி, என்ன கிழமை, என்ன நாழிகை, என்ன நட்சத்திரம்னு கணக்குப் போட்டு, அதன்மூலமா யோகத்தைத் தீர்மானிப்போம். அந்த யோகத்தின் அடிப்படையில கரணத்தைக் கண்டுபிடிப்போம். அதுதான் ஜென்ம பலன். இந்த கணக்குப்படிதான் ஜாதகம் எழுதுவாங்க.



பஞ்சாங்கம் எழுதுறதுக்கு ‘வருஷாதி நூல்’தான் அடிப்படை. ஸ்லோகங்கள், கணக்கீடுகளுக்கான ஏகப்பட்ட சூத்திரங்களை உள்ளடக்கின நூல். பயணம் செய்றதுல இருந்து பயிர் செய்றது வரைக்கும் எல்லாத்தையும் இதை வச்சு கணிக்கலாம். என்ன கிழமை என்ன நாழிகையில மழை வரும், சூரியன் எந்த நொடியில உதிக்கத் தொடங்கும்னு கூட கணக்கு இருக்கு...’’ என்கிறார் சுந்தரம் குருக்களின் இன்னொரு மகன் நீலகண்டன். ‘‘நம்ம வானவியல் சாஸ்திரத்தில இல்லாத விஷயமே இல்லை. இன்னைக்கு ராக்கெட் விட்டு கிரகங்களை ஆராய்ச்சி பண்றாங்க. அந்தக் காலத்தில கண்ணுதான் ராக்கெட். ஒவ்வொரு கிரகத்துக்கும் எவ்வளவு தூர இடைவெளி, எந்த நேரத்தில எங்கேயிருந்து எங்கே போகும், எதெதுக்கு ஈர்ப்பு சக்தி உண்டுன்னு கண்டுபிடிச்சு அதன்மூலமா மனித வாழ்க்கையில நடக்கப்போற சம்பவத்தையும் கணிச்சவங்க நம்ம ஆட்கள். அந்த அடிப்படையிலதான் இன்னைக்கு வரைக்கும் பஞ்சாங்கம் எழுதுறோம். எங்க மொழியும், நாங்க சொல்ற விதமும் கொஞ்சம் பழமையா இருக்கலாம். ஆனா விஷயங்கள் பழசில்லை...’’ என்கிறார் அவர்.

பாம்பு பஞ்சாங்கம் மிகப்பழமையானது. ‘அசல் 28-நெ. சுத்தவாக்கிய பஞ்சாங்கம்’ என்றால்தான் பலருக்குத் தெரியும். அதென்ன அசல் 28-நெ..? அச்சில் ஏறிய நாள் முதல் இன்று வரை 28 பக்கங்களைத் தாண்டியதில்லை. அடியில் நெளிந்து கிடக்கும் பாம்பு, இருபுறமும் சிறகு விரித்து நிற்கும் கந்தர்வர்கள், நடுவில் ஏரோட்டும் உழவன்... இதுதான் பாம்பு பஞ்சாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட அடையாளங்கள். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் இந்த படங்களுக்குப் பின்னால் இருக்கும் சங்கதிகள் புரியும். ஏர் உழவனின் படத்தின் உள்ளே சில எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. எப்படி உழவு செய்யவேண்டும், ஏர்க்காலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது வரை அதற்குள் அடங்கியிருக்கிறது. நெளியும் பாம்புக்குள் இருக்கும் புள்ளிகள், விதை விதைக்கத் தகுந்த நேரத்தைக் குறிப்பிடுகின்றன. கொண்ணூர் மாணிக்க முதலியார் வகையறாதான் பாம்பு பஞ்சாங்கத்தின் உரிமையாளர்கள். இப்போது அந்த மரபில் வந்த கணேஷ்குமார் சகோதரர்கள் வெளியிடுகிறார்கள். ‘‘பஞ்சாங்கம் தயாரிப்புல எங்க முன்னோர்கள் கடைப்பிடிச்ச மரபுகளையே நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்கள் மனோன்மணி விலாசம் அச்சுக்கூடத்தில் பஞ்சாங்கம் தவிர வேறெதையும் அச்சிடுறதில்லை. கண்டமங்கலம் சுந்தரம் குருக்கள், மதுரை விஜயராகவ அய்யங்கார், திருவையாறு குப்புஸ்வாமி சாஸ்திரிகள் என்று எங்க பஞ்சாங்கத்தின் பின்னணியில பெரும் பண்டிதர்களோட பங்களிப்பு இருக்கு. முதல்ல எல்லோரும் தனித்தனியா கணிப்பாங்க. இறுதியா சேர்ந்து உக்காந்து பைனல் பண்ணுவாங்க’’ என்கிறார் கணேஷ்குமாரின் சகோதரர் சிவகுமார். ஒவ்வொரு ஆண்டும் பாம்பு பஞ்சாங்கம் வெறும் 3 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகிறதாம்!? 
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்