எத்தன்

‘‘மிஸ்டர் குமாரசாமி... நீங்க எப்படியாவது முப்பது லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற நாங்க அவனைப் பிடிச்சிடுறோம்’’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘‘வெறும் பேப்பர உள்ள வச்சு மேல சில ரூபாய்களை வைக்கட்டுமா சார்?’’ - குமாரசாமி கேட்டார்.
‘‘நோ... நோ... உண்மையான ரூபாய்தான் வைக்கணும். அவன் செக் பண்ணும்போது தெரிஞ்சுட்டா, உங்க பொண்ணுக்குத்தான் ஆபத்து... புரிஞ்சுதா?’’ மறுநாள்... கபாலி சொன்ன இடத்துக்கு பணத்துடன் வந்தார் குமாரசாமி. பணத்தைக் கொடுத்தவுடன், அவர் மகளை காரிலிருந்து தள்ளிவிட்டான் கபாலி. கார் கிளம்ப, இன்ஸ்பெக்டர் போலீஸ் படையுடன் துரத்தினார். ஆனால், அந்தக் கார் மின்னலாய் ஓடி மறைந்தது. பணத்தைப் பறிகொடுத்து விட்டு, மகளுடன் திரும்பினார் குமாரசாமி.
மாலையில் ஓட்டல் அறை ஒன்றில் கபாலியும் இன்ஸ்பெக்டரும்... ‘‘சார், விரட்டிப் பிடிக்கிற மாதிரி நல்லா நடிச்சீங்க!’’ ‘‘பின்ன... பங்கு போடப் போறது முப்பது லட்சமாச்சே, இவ்வளவு கூட நடிக்கலைன்னா எப்படி?’’ - சொல்லிவிட்டுச் சிரித்தார் இன்ஸ்பெக்டர். அதே கணம், குமாரசாமி மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தார். ‘நல்லவேளை... நான் கள்ள நோட்டு மாத்தற பிசினஸ் செய்யறது அந்த இன்ஸ்பெக்டருக்குத் தெரியாது. முழுசையும் கள்ள நோட்டா வச்சதால, போனதைப் பத்திக் கவலையில்லை!’
|