விஜயா டீச்சர்





எப்படி ஆரம்பிப்பது பேச்சை என்று யோசித்தபடி விஜயா நடந்து கொண்டிருந்தாள். பதற்றமான சூழலில் கலைச்செல்வனோடு பைக்கில் பயணித்தது நினைவுக்கு வந்தது. அப்போது அவர் மீது வீசிய வாசனை இன்னமும் அவளைச் சுற்றிக் கொண்டிருந்தது. லேசாக சிரித்துக் கொண்டாள். ‘‘என்ன டீச்சர்... சிரிக்கிறீங்க..?’’ என்றார் திரும்பிப் பார்த்த கலைச்செல்வன். சட்டென்று சுதாரித்துக் கொண்ட விஜயா, ‘‘வாழ்க்கையோட வினோதத்தை நினைச்சேன்... சிரிப்பு வந்திடுச்சு...’’ என்றவள், காலையில் வீட்டில் நடந்த விஷயங்களையும், ஆனந்த்தின் நடவடிக்கைகளையும் விளக்கினாள். ‘‘இந்த வயசில் எல்லோரும் தாண்டி வர்ற பிரச்னைதான் இதெல்லாம்... அவனுக்கு பொறுப்பு வரும்போது எல்லாமே மாறிடும்... நானெல்லாம்கூட காலேஜ் நாட்களில் ஜாலியாக இருந்தவன்தான்... இப்போ இப்படி மாறிடலையா’’ என்றார். விஜயா மறுபடியும் சிரித்தாள்.



‘‘இந்த சிரிப்பு எதுக்கு டீச்சர்?’’ என்றார் கலைச்செல்வன். இருவரும் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் அருகே வந்திருந்தார்கள்.
‘‘முதல்ல இப்படி டீச்சர்னு கூப்பிடுறதை விடுங்க... என்னை ‘விஜயா’ன்னே கூப்பிடுங்க... நான் உங்களைவிட சின்னவதான்..!’’ என்றாள்.
‘‘இல்லே டீச்சர்... அதை விடுங்க! எதுக்கு சிரிச்சீங்க... அதைச் சொல்லுங்க’’ என்றார் கலைச்செல்வன்.
‘‘ஓகே... அதை அப்புறம் பார்த்துக்கலாம்! நடந்ததை முழுசா சொன்னபிறகும்கூட ஆனந்த் பக்கம் ஒரு நியாயத்தைப் பார்க்கறீங்களே... உங்க பார்வையில் கெட்டவங்கன்னு யாரும் கிடையாதா..?’’ என்றாள் விஜயா.

‘‘இருக்காங்களே... எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றவங்களை நான் மன்னிக்கவே மாட்டேன். நம்பிக்கைங்கறது உயிருக்குச் சமமான விஷயம். மத்தது எல்லாமே சூழ்நிலையால் ஏற்படுறதுதான்! ஆனால், நாம ஒருத்தர் மேல நம்பிக்கை வச்சு, அதுக்கு மாறா அவங்க நடக்கும்போது அதைத் தாங்க முடியாது... அதிலேயும் அந்த நம்பிக்கை துரோகத்தால் நல்ல உறவு கெட்டுப் போகும் சூழ்நிலை வந்துச்சுன்னா என்னால் தாங்கிக்கவே முடியாது’’ என்ற கலைச்செல்வனை ஒருகணம் உற்றுப் பார்த்தாள்.


இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது கலைச்செல்வனின் முகத்தில் ஒரு தீவிரம் தெரிந்தது. தன்னுடைய வேலையில் பாதி முடிந்துவிட்டது போலத் தோன்றியது விஜயாவுக்கு. பொதுவான விஷயங்களிலேயே இவ்வளவு அக்கறையோடு இருப்பவர், தன்னுடைய வாழ்க்கை என்று வரும்போது எவ்வளவு தெளிவாக யோசிப்பார் என்று நினைத்துப் பார்த்தாள். தான் காதலைச் சொல்லும் கணத்தில் எப்படி ரீயாக்ட் செய்வார் என்று யோசித்துப் பார்த்தாள். முகம் லேசாகச் சிவந்து வெட்கம் மேலிட்டது. ‘‘என்ன டீச்சர்... ரொம்ப தீவிரமா ஏதோ யோசிக்கறீங்க போலிருக்கு? என்கிட்டே சொல்லலாம்னா தாராளமா சொல்லுங்க... என் சப்போர்ட்டை நிச்சயம் உங்களுக்குக் கொடுப்பேன். நான் எப்பவும் உங்க பக்கம்தான்’’ என்றார் கலைச்செல்வன். ‘உங்ககிட்டே சொல்லாம யாருகிட்டே சொல்லப் போறேன்...’ என்று மனசுக்குள் நினைத்தவள், ‘‘ஒரு காபி குடிக்கலாமா..?’’ என்றாள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே. அப்படிப் பார்த்த நேரத்தில் தாண்டிச் சென்ற பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார் விஜயாவின் அண்ணன் சோமசுந்தரம். இறங்கிய நொடியில் விஜயாவைப் பார்த்துவிட்டு அருகில் வந்தார். ‘‘என்ன... இந்த நேரத்துல இங்க நிக்கிறே... ஞாயித்துக் கிழமை லீவுதானே..?’’ என்றார். கண்கள் ஒருமுறை கலைச்செல்வனை தலையிலிருந்து பாதம் வரை பார்த்து அளவெடுத்தது.



‘‘எங்க ஸ்கூல் டீச்சர் ஈஸ்வரியோட வீட்டுக்காரர் ஆக்சிடென்ட்ல இறந்துட்டார்னு சொல்லியிருந்தேன் இல்ல... அவருக்கு இன்னிக்கு படத் திறப்பு... அதான் போயிட்டு வர்றேன். இவரு எங்க ஸ்கூல் பி.டி. மாஸ்டர்!’’ என்றாள். கலைச்செல்வன், ‘‘உங்க அண்ணன்தானே டீச்சர்..?’’ என்றபடி சோமசுந்தரத்தைப் பார்த்து கைகூப்பினார். பதிலுக்கு வணக்கம் சொன்ன சோமசுந்தரம், ‘‘விசேஷம் முடிஞ்சுடுச்சா... வீட்டுக்குத்தானே..?’’ என்றார். ‘‘ஒரு காபி சாப்பிட்டுட்டு போலாமா சார்?’’ என்றார் கலைச்செல்வன். ‘‘ச்சே... நாங்க கடையிலே பச்சைத் தண்ணிகூட குடிக்க மாட்டோம்... போவோமா..?’’ என்றார் விஜயாவைப் பார்த்து. விஜயா பதிலேதும் சொல்லாமல் கலைச்செல்வனிடம், ‘‘நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம் சார்...’’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள். சோமசுந்தரமும், ‘‘வரேன் சார்’’ என்று சொல்லிவிட்டு விஜயாவை பின் தொடர்ந்தார்.

கண் மறையும் தூரம் வரை கலைச்செல்வன் விஜயா செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். காபியை விட முக்கியமாக சொல்வதற்கு ஏதோ விஷயம் இருந்ததாகப் பட்டது கலைச்செல்வனுக்கு. ஒருவேளை தன் திருமணம் பற்றி பேச நினைத்திருப்பாளோ என்று நினைத்தார். தன்னுடைய மனதில் அவளைப் பற்றி எழுந்த எண்ணங்களைச் சொல்வதற்கான நேரம் கனியும் வரையில் காத்திருப்பதா என்று குழம்பினார். ‘சரி, அவள் பேச வந்த விஷயத்தைப் பேசட்டும்... மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்...’ என்று நினைத்துக் கொண்டார். வீட்டில் படியேறும்போதே விஜயா கவனித்தாள்... வாசலில் நாலைந்து செருப்புகள் கிடந்ததை. எட்டிப் பார்த்தாள். கூடத்தில் அடுக்களை ஓரமாக கடைப் பையன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அம்மா அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். அதைத் தாண்டி கூடத்தில் அப்பாவும் இன்னும் சிலரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வெயிலில் நடந்து உள்ளே வந்ததால் சட்டென்று இருள் பழகவில்லை அவளுக்கு. சின்ன யோசனையோடு செருப்புகளைக் கழற்றினாள்.

உள்ளே அப்பாவோடு சத்தமாக ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ரத்னவேல் மாமா, விஜயாவைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார். சுகுமார், அவனுடைய அப்பா, வடிவேல், அவனுடைய அப்பா என எல்லோரும் இருந்தார்கள். விஜயா எல்லோருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தாள். சோமசுந்தரம் தயங்கியபடி நின்றார்.
‘‘சோமு... சட்டையை மாத்திட்டு வா! உன்கிட்டேயும் கலந்துக்கிட்டு ஒரு முடிவை எடுக்கணும்... சீக்கிரம் வா!’’ என்ற அப்பா, விஜயா பக்கம் திரும்பி, ‘‘ஈஸ்வரி வீட்டுல விசேஷம் முடிஞ்சுடுச்சா..?’’ என்றார்.
‘‘ம்...’’ என்று மட்டும் சொல்லிவிட்டு, வடிவேல் பார்வை நிலைகுத்தி நின்ற திசையைப் பார்த்தாள் விஜயா. அந்த திசையில் இருந்த அறையின் கதவுக்குப் பின்னால் சீதா நின்று கொண்டிருந்தாள்.
‘‘என்ன சீதா... இங்கே ஒளிஞ்சுக்கிட்டிருக்கே..?’’ என்றாள் கைப்பையை மேஜையில் வைத்தபடி. ‘‘அக்கா... என் மனசை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அன்னிக்கே எல்லா வேஷமும் போட்டு முடிச்சுட்டேன்... இன்னிக்கு அவங்க வந்தவுடன் கையிலே காபியைக் கொடுத்து, கொண்டு போய் குடுத்துட்டு வரச் சொல்றாங்க அம்மா... என்ன கொடுமை இது..?’’ என்றாள். அப்போதுதான் கவனித்தாள்... சீதாவின் கண்கள் கலங்கியிருந்தன. விஜயா மெதுவாக நெருங்கி வந்தாள். ஆதரவாகத் தோளைப் பற்றியபடி, ‘‘வடிவேலை உனக்குப் புடிக்கலையா?’’ என்றாள். ‘‘இல்லக்கா... அன்னிக்கு நீ பேசுன பிறகு எந்த மாப்பிள்ளையா இருந்தாலும் நம்ம குடும்பத்துக்காக ஏத்துக்கறதுனு முடிவு பண்ணிட்டேன். அந்த வடிவேலுகூட வாழ மனசளவுல என்னைத் தயார் பண்ணிக்கிட்டேன். ஆனா, உனக்கு முன்னே கல்யாணம்ங்கற விஷயத்தை மட்டும் என்னால் தாங்கிக்கவே முடியலை...’’ என்ற சீதா விசும்பலோடு விஜயாவின் தோளில் சாய்ந்தாள். விஜயா சீதாவை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். ‘‘சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இவ்ளோ அலட்டிக்கறே? நீ நினைக்கிற மாதிரி எதுவும் சங்கடமா நடக்காது. நிச்சயமா நம்ம மூணு பேருக்கும் கல்யாணம் நடக்கும். உன் கல்யாணம் எந்த நெருடலும் இல்லாம நடக்கும். கவலைப்படாதே...’’ என்றாள் விஜயா.

சீதா கொஞ்சம் புதிராக அவளைப் பார்த்தாள். ‘‘என்ன சொல்றே? உன் கல்யாணத்துக்குப் பிறகு எங்கள் கல்யாணம் நடக்கும்னா உனக்கு மாப்பிள்ளை எப்போ பார்க்கறது... அல்லது நீ யாரையாவது பார்த்து வெச்சிருக்கியா?’’‘ என்று அவள் ஆர்வமாகக் கேட்கும்போது அம்மா காபி டம்ளர்களோடு உள்ளே வந்தாள்.  அதை கவனிக்காத விஜயா, ‘‘அதைச் சொல்லக் கூடிய சூழ்நிலை இப்போ இல்லை. ஆனா, உன் கல்யாணத்தில் எந்த நெருடலும் இருக்காது. கவலைப்படாதே...’’ என்றாள். ‘‘நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லு... சும்மா அவருகிட்டே மூஞ்சியைக் காட்டிக்கிட்டே இருக்கா. கல்யாணம்னு பேசினதுக்குப் பிறகு இது நல்லாவா இருக்கு?’’ என்றாள் அம்மா. விஜயா எதுவும் சொல்லாமல் காபி டம்ளர்களை வாங்கி சீதாவின் கைகளில் கொடுக்க, முகத்தைத் துடைத்துக் கொண்ட சீதா, காபியோடு கூடத்துக்குப் போனாள். ‘‘உட்காரு சோமு... ரெண்டு நிச்சயதார்த்தத்தையும் ஒண்ணா நடத்திடலாம்னு ரெண்டு சம்பந்திகளுமே சொல்றாங்க. நிச்சயதார்த்தம்ங்கறது நம்ம வீட்டு விசேஷம்... அதனால், ஒண்ணா நடத்துறது நல்லதுன்னு நினைக்கறேன். நீ என்ன சொல்றே..?’’ என்றார் அப்பா. ‘‘அப்போ கல்யாணமும் ஒண்ணாவே வச்சுடலாமா..?’’ என்றார் சோமு. ‘‘டேய்... நான் என்ன கேட்கிறேன்... நீ என்ன சொல்றே..?’’ என்றார் அப்பா.

‘‘நீங்க சொன்னதுக்கு சோமு என்னிக்கு மறுபேச்சு சொல்லியிருக்கான்... நீங்க அவனைப் போய் கேட்டுக்கிட்டு? நம்ம பார்த்து சொன்னோம்னா கேட்டுக்கப் போறான்... என்ன மாப்ளே?’’ என்றார் ரத்னவேல் சோமுவிடம். அசட்டுச் சிரிப்பு சிரித்தார் சோமு. ‘‘அப்போ தேதியை முடிவு பண்ணிடுவோம்... வீட்டுல பஞ்சாங்கம் இருந்தா கொண்டுவரச் சொல்லுங்க...’’ என்றார் ரத்னவேல். சோமு எழுந்து அறைக்குள் வந்து பஞ்சாங்கத்தை தேடி எடுத்துக் கொண்டு போனான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சீதா திரும்பி விஜயாவிடம் கேட்டாள்... ‘‘அக்கா... நிச்சயதார்த்தத்துக்கு நாள் பார்க்கப் போறாங்க. மூணு நிச்சயதார்த்தம்னு சொல்லிடலாமா..?’’ என்றாள். ‘‘அவர்கிட்டே பேசிட்டுச் சொல்றேன்...’’ என்று வெட்கச் சிரிப்போடு எழுந்து உள்ளே போனாள் விஜயா. சீதாவுக்கு விஜயாவின் வெட்கம் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது!
(தொடரும்) படங்கள்: புதூர் சரவணன்