ஸ்வீட் சீதா...





நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க முடிவெடுத்துவிட்டாலும் கடைசியாக அவர் நடித்த காரணத்தை முன்வைத்தே ‘ஸ்ரீராமராஜ்யம்’ தெலுங்குப் படம் தமிழ்நாட்டில் வெகுவாக பிரபலமானது. அதிலும் தன் வழக்கமான கிளாமர் விஷயங்களை ஓரம் கட்டி, ராமாயண சீதையாக அவர் நடித்திருந்தது சென்டிமென்ட்டாக குடும்ப வாழ்வில் அவர் இணையப் போவதற்கான அறிகுறியாகவும் தோன்றியது. தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படம் இப்போது தமிழில்!

‘ஸ்ரீராமராஜ்யம்’ என்கிற அதே தலைப்புடன் வரும் படம் இங்கே சித்திரைத் திருநாள் அன்று வெளியாகிறது. தமிழில் பிரத்யேக மாற்றங்களுடன் பியூச்சர் பிலிம்ஸுக்காக கிரண் வெளியிடுகிறார். நயன்தாராவின் முகத்தைக் காண ஆவலுடன் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையறிந்து 200 பிரின்ட்டுகள் வெளியிட இருப்பது ஹைலைட். படத்தில் ராமனாக நடித்திருக்கும் பாலகிருஷ்ணாவுக்காக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சீதையாக நடித்திருக்கும் நயன்தாராவுக்காக சின்மயியும் டப்பிங் பேசியிருக்கிறார்கள். தமிழ் டப்பிங் மட்டும் 36 நாள்கள் நடந்திருப்பதும் ஒரு ரெக்கார்ட்தான். படத்தின் கதை நாம் தோராயமாக நினைப்பதுபோல் ராமன் வனவாசம் போனபோது ராவணன் சீதையைக் கவர்ந்துபோக, போரில் ராவணனை வீழ்த்தி ராமன் சீதையை மீட்டது அல்ல. அதற்குப் பின் ராமனின் வாழ்க்கையில் நடந்த கதையைச் சொல்லியிருக்கிறார் புராணக் கதைகளுக்கென்றே புகழ்பெற்ற இயக்குநர் பாபு. சீதையுடன் அயோத்திக்குத் திரும்பிய ராமன் பட்டாபிஷேகம் செய்து ராமராஜ்யம் நடத்திக்கொண்டிருக்க, சீதை கர்ப்பமாயிருப்பது தெரிகிறது.

அதைத் தொடர்ந்து இலங்கையின் ராவணனின் பிடியில் இருந்த சீதையின் கற்பு பற்றி பலவிதமான யூகங்கள் வருவதையறியும் ராமன், சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புகிறார். அங்கே வால்மீகியின் பாதுகாப்பில் தங்கி லவன், குசன் என்ற பிள்ளைகளைப் பெற்று சீதை வளர்க்க... அதற்குப்பின் நடந்த நிகழ்வுகளாக விரிகிறது படம். இதில் வால்மீகியாக முன்னாள் ஆந்திர சூப்பர்ஸ்டார் நாகேஸ்வர ராவ் நடித்திருக்கிறார். பூமாதேவியாக ரோஜா, கோசலையாக கே.ஆர்.விஜயா நடித்திருக்கிறார்கள். ராமன் வனவாசத்தில் அனுபவித்த அளவுக்கு வேதனைகளை இந்த வனவாசத்தில் சீதையும் அடைந்தாள் என்று சொல்ல வருவதால், படத்தில் நயன்தாராவின் பன்முக நடிப்பைக் காண இயலும். 36 கோடியில் தயாரான இந்தப்படம் கடந்த வருடம் நவம்பரில் இந்தியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தெலுங்கில் வெளியானபோது நீளமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து தமிழில் 15 நிமிடத்தைக் குறைத்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்களாம். இனிமையான பாடல்களுக்கு இளையராஜா கியாரண்டி என்றாலும் படத்தின் ஒட்டுமொத்த விற்பனைக் குறியீடென்னவோ ‘ஸ்வீட் சீதா’வான நயன்தாராதான்.
- ஜி