‘இந்த சேவல் சண்டை திருவிழாவுக்கு வருகை தந்திருக்கும் ரசிகப் பெருமக்களை
நண்பர்கள் குழு சார்பாக வருக வருக என வரவேற்கப்படுகிறார்கள்’ -
விழாக்களுக்கே உரித்தான அந்த வாக்கியப் பிழை வாய்ஸ், நமக்கு பாதி கதையைச்
சொல்லிவிட்டது. ஆம், ‘ஆடுகளம்’ படத்தில் நாம் பார்த்த அதே சேவல் சண்டைப்
போட்டிதான்... அதே பிரமாண்டத்தோடு, ‘14 ஆண்டு கால தடைக்குப் பிறகு’ என்ற
பில்டப்போடு நடந்தேறியது திருச்சியில்! ஜாவா, பீலா, அம்து, ரூஸ், சீத்தா,
துவா, மூரி, கதர், யாகுத், கீதா... ஏதோ ஹிந்தி டியூஷனில் ஒட்டுக் கேட்டு
உளறியது போலிருக்கும் இந்தப் பெயர்கள் எல்லாம் காலம் காலமாக நம் ஊரில்
சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல் இனங்களாம். இவற்றில் மொத்தம் 48 வகை
சேவல்கள் உண்டாம். இப்படிப்பட்ட ‘அரிய’ தகவல்கள் நிறைந்திருந்த அந்த
‘சேவற்கட்டு’ போட்டி திருவானைக்காவல் - கல்லணை சாலையில் ஒரு முழுத்தோப்பையே
அலங்கரித்து ஐபிஎல் எஃபெக்ட் கொடுத்திருந்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய
மாநிலங்களிலிருந்து சுமார் ஆயிரம் சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.
திருச்சியில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இதுதான் முதல் சேவல் சண்டை என்பது
அலைமோதிய பார்வையாளர்களால் அப்பட்டமாகத் தெரிந்தது. ஏசி கார்களில்
வந்திறங்கினார்கள் சேவல் வளர்ப்பவர்கள். போட்டிக்கு இடையே கூட சேவல்களுக்கு
ஏசி காரில் ரெஸ்ட் கொடுத்த கண்கொள்ளாக் காட்சியும் காணக் கிடைத்தது.
உயரம், பட்டா, முள், கத்தல் என்ற பிரிவுகளில் 4 சுற்றுகளைக் கொண்ட போட்டி
நடத்தப்பட்டது. இதற்காக 10 களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கூடவே, மிருக வதை
தடை சட்டம் மீறப்படுகிறதா என்று கண்காணிக்க அலுவலர்களும் கால்நடை
மருத்துவர்களும் ஆஜராகியிருந்தனர்.
‘‘என்னதான் தடை உத்தரவு போட்டாலும் மக்களுக்கு ரொம்பப் பிடிச்ச பாரம்பரிய
விளையாட்டுங்க இது. இதைத் திரும்ப நடத்தணும்னு கலெக்டர்கிட்ட அனுமதி
கேட்டோம். கிடைக்கல. கடைசியா மதுரை உயர்நீதிமன்றக் கிளையில வழக்கு
போட்டோம். ‘சேவலுக்கு போதை வஸ்து தரக் கூடாது. கால்ல கத்தி கட்டக்
கூடாது’ன்னு கண்டிஷன்களோட பர்மிஷன் கிடைச்சது’’ என்றார் விழாக் குழுவைச்
சேர்ந்த பாபா பாலாஜி. இவர் செய்வது பால் வியாபாரம் என்றாலும், பாரம்பரிய
விளையாட்டுகள் மீது அப்படி ஒரு ஆர்வம். புறா பந்தயம், ரேக்ளா ரேஸ் என்று
ஏற்கனவே பல முயற்சிகள் இவருக்கு வெற்றிகரமாக அமைந்தனவாம்.
‘‘நம்ம ஜனங்க விறுவிறுப்பான எல்லா விளையாட்டையும் ரசிக்கிறாங்க. நாமதான்
அதைக் கொடுக்கறதில்ல. எங்கயோ யாரோ அடிச்சுக்கிட்டு சாகறாங்கனு நம்ம
பாரம்பரிய விளையாட்டுக்களை தடை பண்ணிடறோம். ஆனா, சேவல் வளர்க்குறதும்
பந்தயப் புறா வளர்க்கறதும் உலகத்துல எங்கயும் இல்லாத கலை. இந்தப் போட்டியில
போஜான்னு ஒருத்தர்.. 6 முதல் பரிசும் 3 ரெண்டாம் பரிசும்
வாங்கியிருக்கார். அவங்க பாட்டன் காலத்துல இருந்து சண்டை சேவல்
வளர்க்குறாங்களாம். இதெல்லாம் நம்ம ரத்தத்துல கலந்ததுங்க! இதே மாதிரி
ஆடுகளை சண்டை விடுற போட்டியும் தமிழ்நாட்டுல காலம் காலமா நடந்திருக்கு.
இன்னிக்கு அது யாருக்கும் தெரியறதில்லைன்னாலும், சண்டை ஆடுகளை வளர்த்து
அதுக்கு பயிற்சி கொடுக்கறவங்க இன்னிக்கும் தமிழ்நாட்டுல அங்கங்க
இருக்காங்க. அவங்களை சந்திச்சு அடுத்ததா ஆடு சண்டைப் போட்டி நடத்தணும்...
அதுதான் என் டார்கெட்’’ என்று கட்டை விரல் உயர்த்திக் காண்பிக்கிறார்
பாலாஜி. ஆடுகளங்கள் போர்க்களங்கள் ஆகிவிடாமல் இருந்தால் இவையும் ஐபிஎல்
போலத்தானே?
- ஜோ.மகேஸ்வரன் படங்கள்: கே.எம்.மணிகண்டன்