விருச்சிகம், தனுசு ராசிக்கு மாமியார் மருமகள் பிரச்னையைத் தீர்க்கும் இறைவன்





விருச்சிக ராசிப் பெண்களான நீங்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றதும் கொஞ்சம் மிரட்சியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். எல்லோருடனும் ஆரம்பத்தில் சகஜமாக பேசத் தயங்குவீர்கள். மெதுவாக மாமியார், நாத்தனார், மச்சினர் என்று எல்லா உறவுகளையும் புரிந்து கொள்வீர்கள். அவர்களுக்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கொஞ்ச நாட்களிலேயே எல்லா விஷயங்களிலும் அதீத உரிமையையும் எடுத்துக் கொள்வீர்கள். அதேசமயம் வந்த புதிதில் காட்டிய ஆர்வம், போகப் போக குறையும். கண்ணில்படும் குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள். ‘‘அந்த விஷயத்துல அவரு அப்படிப் பேசிட்டாரு... நான் மட்டும் ஏன் பாசமா இருக்கணும்?’’ என்பீர்கள். 

நீங்கள் விருச்சிக ராசியிலேயோ அல்லது லக்னத்திலேயோ பிறந்தவராக இருந்தால் உங்கள் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக - அதாவது மாமியார் ஸ்தானத்திற்கு உரியவராக - சூரியன் வருகிறார். ஆகவே, நிச்சயம் உங்கள் மாமியார் ஆளுமைத் திறன் உள்ளவராக இருப்பார். கிராமத்தில் இருந்தால் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பார். அவரிடம் உதவி வேண்டி நிறைய பேர் வருவார்கள். ‘‘ஏம்மா... உனக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்ட கேளு’’ என்று உங்களிடமும் அடிக்கடி கூறுவார். எதையுமே அளவுகடந்த கற்பனையோடு பேச மாட்டார். உங்கள் மனதில் இருப்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்வார். முக்கியமாக, எல்லாவற்றையும் எப்படித் திட்டமிட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பார். சின்ன விஷயத்துக்கும்கூட அவரிடம்தான் அபிப்ராயம் கேட்க வேண்டு மென்று எதிர்பார்ப்பார். ‘‘நம்ம தகுதிக்கு நாம இப்படி இறங்கிப் போறது அவ்வளவு நல்லதில்லை’’ என்று தேவையில்லாத இடங்களில்கூட குடும்ப கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பார்.



உங்கள் சொந்த ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்துவிட்டால் மாமியார் மிகப்பெரிய அரசுப் பதவிகளில் அமர்வார். ‘‘என் ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். நீங்கதான் தாலி எடுத்துக் கொடுக்கணும்’’ என்றும், ‘‘என் பேரனுக்கு நீங்கதாம்மா பேர் வைக்கணும்’’ என்றும் பலரும் அவரைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். வீட்டு நிர்வாகத்தை உங்களுக்கு சிரமமில்லாமல் அவரே பார்த்துக் கொள்வார். உங்களை மகள்போல பார்த்துக் கொள்வார். ‘‘ஏம்மா தயங்கி நிக்கற... சினிமாக்கு போறதா இருந்தா போயிட்டு வா! நான் இட்லிக்கு அரைச்சு வச்சுடறேன்’’ என்று பொறுப்பை எடுத்துக் கொள்வார். உங்களின் சொந்த ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருந்தால், அடிக்கடி தலை வலிக்கிறது என்பார். பார்வைக் கோளாறால் அவதிப்படுவார். திடீரென்று, ‘‘நானே எல்லாத்தையும் பார்த்துக்கறேன்’’ என்றும், ‘‘எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு என்னால பார்க்க முடியாது’’ என்றும் மாறி மாறி புலம்புவார். ‘‘எனக்குத் தெரியாம என்னென்னவோ நடக்குது இந்த வீட்டுல’’ என்று தேவையில்லாமல் சந்தேகப்படுவார்.



உங்கள் ராசிக்கு மாமனாருக்கு உரியவராக மகரச் சனி வருகிறார். வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்து செய்வார். ‘‘மாமா... வீட்டு லோன் போட்டிருக்கேன். ரெண்டு லட்ச ரூபாய் குறையுது’’ என்றால், தன் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுப்பார். மேலும், உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய். இங்கே மாமனாருக்குரிய கிரகமாக மகரச் சனி வருகிறது. அடிப்படையில் செவ்வாயும் சனியும் பகைவர்கள். அதனால் அவர் என்ன செய்தாலும், அதைச் சொல்லிக் காட்டுபவராக இருப்பார். ஏதேனும் ஒரு சண்டையில், ‘‘அன்னிக்கு அதைக் கேட்டீங்க. நான் இல்லேன்னு சொன்னேனா... கொடுத்தேன் இல்ல’’ என்று சத்தமாகச் சொல்லி விடுவார். திடீரென்று உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் கோபம் கொள்வார். ஆனால், அது உடனே சரியாகிவிடும். மாமனாரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதையெல்லாம் வயதின் காரணமாக மறந்து விடுங்கள். இது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமமான பலன்களாகும். உங்கள் ஜாதகத்திலுள்ள சனி பகவான், குருவின் பார்வையோ அல்லது குருவின் சேர்க்கையோ பெற்றிருந்தால் மாமனாரால் சிறு தொந்தரவு கூட வராது.

உங்கள் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக சூரியன் வருகிறார். அதேபோல மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மகரச் சனி வருகிறது. இது முற்றிலும் சிவாம்சம் மிக்க அமைப்பாகும். சூரியனும் சனியும் சேர்ந்த அம்சமாக இருப்பதால் பைரவரை வணங்குவது நல்லது. அதிலும் யோக பைரவர் எனில் இன்னும் விசேஷம். அப்படிப்பட்ட விசேஷமான தலமே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யோக பைரவர் ஆலயமாகும், இத்தலத்தில்தான் அமர்ந்த நிலையில் பைரவர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை தரிசிக்கும்போது சூரியனுக்கும் சனிக்கும் உள்ள பகைமை மறைகிறது. ஏனெனில், உங்கள் ராசிப்படி பார்த்தால் மாமனாரும் மாமியாரும் அடிக்கடி சண்டை போடுபவர்களாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட விஷயங்களும், உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உரசல்களும், இந்தக் கோயிலிலுள்ள பைரவரை தரிசித்தால் உடனே சரியாகும்.  

தனுசு ராசிப் பெண்கள் திருமணமாகி வீட்டிற்குள் புகும்போதே, ‘இந்த வீட்டில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டும்’ என்றுதான் யோசிப்பீர்கள். இந்த வீட்டில் மிகுந்த சக்திக்குரியவராக யார் இருக்கிறார் என்றுதான் கணக்கு போடுவீர்கள். தனுசு ராசிக்கு அதிபதியாக வரும் குரு போராட்ட குருவாக இருப்பதால், பொறுப்பற்ற காரியங்களை உடனே தடுப்பீர்கள். வீட்டில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும், அது சீராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள். நாத்தனார், மச்சினர் மற்றும் உறவினர்களின் குறைகளை சலிக்காமல் காது கொடுத்துக் கேட்பீர்கள்; அவர்களைத் தேற்றுவீர்கள். அதேசமயம் உங்கள் பொறுமையை யாரேனும் சோதித்தால், அதை முகத்துக்கு நேராகச் சொல்லி விடுவீர்கள். திருமணமாகி வந்தவுடனேயே, வீட்டிலுள்ள தீராத பிரச்னை ஒன்றைத் தீர்ப்பீர்கள். ஏனெனில், தனுசு குரு செல்லும் இடங்களிலெல்லாம், இவர்கள் தீர்ப்பதற்காகவே ஏதேனும் ஒரு பிரச்னை காத்துக் கொண்டிருக்கும். அதேசமயம் நெருங்கிய உறவினர் யாராவது அவமானப்படுத்தினால்கூட தாங்க மாட்டீர்கள்.

உங்கள் மாமியார் ஸ்தானத்திற்குரியவராக கன்னி புதன் வருகிறார். அதேசமயம் உங்கள் கணவரைக் குறிக்கும் ஸ்தானத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருகிறது. எனவே, ‘தாயைவிட தெய்வம் வேறில்லை’ என்று இருப்பவராக கணவர் இருப்பார். இருவருக்குமே ஒரேவிதமான யோசனைதான் இருக்கும். ‘‘நீ எங்கிட்ட சொன்ன இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லிட்டியா’’ என்றுதான் கணவர் முதலில் கேட்பார். இதனால் நீங்கள் எல்லா விஷயங்களையும் கணவரிடம் சொல்லவே பல சமயங்களில் யோசிப்பதுண்டு. உங்கள் மாமியாரும், ‘என் புள்ளைய எங்கிட்டயிருந்து பிரிச்சுடுவாளோ’ என்று அவ்வப்போது பயப்படுவார்கள். இதுபோன்ற குழப்பநிலையை நீங்கள் எதிர்கொள்ள நேரும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மிகச் சிறந்த ஆலோசகராக மாமியார் விளங்குவார். குடும்பப் பிரச்னைகளை தனது அனுபவ அறிவால் எளிதாக தீர்ப்பார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருப்பார்.

உங்களின் சொந்த ஜாதகத்தில் புதன் வலிமையாக இருந்தால், கணவரும் மாமியாரும் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். மிகுந்த புத்திக் கூர்மை மிக்கவராக மாமியார் இருப்பார். எந்த காரியத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடித்து விடுவார். உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ புதன் பெற்றிருந்தால் தொணதொண வென்று ஏதேனும் சொல்லியபடி இருப்பார். நீங்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல், ‘நான் பேசுவதுதான் சரி’ என்று வாதாடுவார். அதேசமயம் வயிற்று உபாதைகளாலும், நரம்புக் கோளாறாலும் பாதிக்கப்படுவார். இதெல்லாம் உங்களின் ஜாதகத்தில் புதனின் நிலையை வைத்துத்தான் நடக்கும். 

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு அதிபதியாக கும்பச் சனி வருகிறார். இவர்தான் உங்களின் மாமனார் எப்படி என்று தீர்மானிக்கிறார். ஒருமுறை சொன்னதையே மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருக்க மாட்டார் மாமனார். எதைச் செய்தாலும் நின்று நிதானமாகச் செய்வார். பொறுமையாகவும் சாந்த மாகவும்தான் எந்த விஷயத்தையும் அணுகுவார். சனி கிரகத்தின் மெதுவான நகர்வு கும்பச் சனி மூலம்தான் வெளிப்படும். அதனால் உங்கள் மாமனார் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவே பல நாட்களாகும்.

வக்கீல் போல சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தான் எதையும் பேசுவார். திடீரென்று, ‘‘யாரோடயும் எந்த உறவும் வேணாம்’’ என்று அமைதியாக இருப்பார். பிறகு எல்லோருடனும் சகஜமாக நடந்து கொள்வார். இப்படி மாறி மாறி நடந்துகொள்ளும் குணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுவீர்கள். ‘இவரை நம்பலாமா... நம்பக் கூடாதா’ என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். உங்கள் சொந்த ஜாதகத்தில் சனியினுடைய நிலை பலமாக இருந்தால், மாமனார் தந்தை ஸ்தானத்தில் இருப்பார். செவ்வாய் அல்லது சூரியனுடைய சேர்க்கையை சனி பெற்றிருந்தால் ஏதேனும் குறை கூறியபடி இருப்பார். தன்னுடைய தலையீடு இல்லாமல் வீட்டில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்று நிர்ப்பந்திப்பார். வீட்டில் எந்தப் பொருளையும் வீணாக்க மாட்டார். சிறிய ஆணியைக் கூட தூக்கிப்போட மாட்டார். இதுபோல சிறிய விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பார். அதே சமயம் உங்களின் மாமனாரும், மாமியாரும் ஆதர்ச தம்பதியராக இருப்பார்கள். எங்கும் சேர்ந்து செல்லவே விரும்புவார்கள். 

தனுசு ராசியினருக்கு மாமனார் ஸ்தானத்திற்கு கும்பச் சனியும், மாமியார் ஸ்தானத்திற்கு கன்னி புதனும் வருகிறார்கள். மேலும், தனுசு குரு என்றாலே போராட்டமாகத்தான் இருக்கும் என்று பார்த்தோம். ஏதேனும் ஒரு பிரச்னை வந்தவண்ணமும் தீர்ந்த படியும்தான் இருக்கும். இதிலிருந்து விலகி வெளியே வர, உபதேசக் கோலத்தில் இருக்கும் பெருமாளையோ அல்லது உபதேசம் செய்து வழிப்படுத்திய தெய்வத்தையோ வழிபட வேண்டும். அப்படிப்பட்ட ஓர் தலம்தான் சென்னை யிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயமாகும். கீதோபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, பாரதப் போர் முடிந்து குடும்பத்தோடு இத்தலத்திற்கு வந்து எல்லோருக்கும் அருள்பாலித்தார். இவரை தரிசிக்கும்போது போராட்டமெல்லாம் அவ்வளவாக இருக்காது. மாமனார் - மாமியார் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தானாகத் தீரும். குடும்பம் குதூகலமாகும். 
(தீர்வுகளைத் தேடுவோம்...)